Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளிப் பதக்கத்துடன் தாயகம் திரும்பினார் கர்னல் மகள்!

ரியோ பாராலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தரப்பில் 19 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய வீரர் தேவேந்திர ஜாஜாரியா பாராலிம்பிக்கில் இரு முறை தங்கப்பதங்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஜாஜாரியா 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரியோவிலும் தங்கம் வென்று சாதித்தார்.

உடலில் மார்புக்கு கீழே எதுவும் செயல்படாத நிலையில் வீல்சேரில் இருந்தவாறே குண்டு எறிந்த தீபா மாலிக், 4.61 மீட்டர் தொலைவு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன்  பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார். பாராலிம்பிக் வரலாற்றில் அதிக வயதில் (46) பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையும் தீபாவுக்கு உண்டு.

தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். இதே பிரிவில் வருண் வெண்கலம் வென்றார். ரியோ பாராலிம்பிக்கில் இரு தங்கம், ஒரு வெள்ளி வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா 53வது இடத்தை பிடித்தது.  நிறைவுவிழா நிகழ்ச்சியில் இந்தியாவுக்காக உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன், தேசியக் கொடியை ஏந்தி சென்றார். மாரியப்பன் இன்றோ நாளையோ தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரலிம்பிக்கில் உலகத் தரவரிசையில் தமிழக வீரர் மாரியப்பன் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் வருண் மற்றும் சரத்குமார் ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். உலகத் தரவரிசையில், ஃபீல்டு அண்டு டிராக் ஈவெண்ட்டில் முதல் 3 இடங்களை இந்தியர்கள் பிடித்திருப்பதும் இதுவே முதல் முறை.

இதற்கிடையே வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக் நேற்று இரவு தாயகம் திரும்பினார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு கணவர் கர்னல் பிக்ரம் சிங் மகள் தேவிகாவுடன்  தீபா வந்திறங்கினார். விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் மாற்றுத்திறனாளி வீரர்கள் கூடி நின்று தீபாவுக்கு வரவேற்பளித்தனர். ஹரியானா பாரம்பரிய முறைப்படி தீபாவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தீபாவை அவரது தந்தையும் ரிட்டையர்டு கர்னலுமான பி.கே.நக்பால் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். தீபாவின் சகோதரர் பிரிகேடியர் விக்ரம் நக்பாலும் சகோதரியை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தார். அவரும்  சகோதரிக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 ''இந்திய மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன். என்னை வரவேற்க இங்கு வந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ''என்றார் தீபா.

தீபாவை வரவேற்க வந்திருந்த ஹரியான விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ், '' ஹரியானா மகளின் வெற்றியை கொண்டாட இங்கு வந்திருக்கிறேன். தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமாகும். அதற்கு  தீபா எடுத்துக்காட்டு'' என்றார்.

பாராலிம்பிக் வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையில் எந்த வேறுபாடும் காட்டப்படாது என ஹரியானா அரசு உறுதியளித்துள்ளது. தீபாவை வரவேற்க ஹரியான விளையாட்டுத்துறை அமைச்சரே விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் அது நடக்குமா?

-எம்.குமரேசன்

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close