Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"கிரிக்கெட்டா... அப்படின்னா..!?" - செம கலாய் சச்சின் #PranksofCricketers

                                 
கடைசி பந்து... 4 ரன்கள் தேவை...நகத்தைக் கடித்துக் கொண்டு ஒட்டுமொத்த தேசமே உட்கார்ந்துக் கொண்டிருக்கும். அடித்தே ஆக வேண்டும்... 100 கோடி மக்களின் கனவையும்,  பிரஷரையும் தங்கள் தலையில் வைத்துக் கொண்டு நிற்பார்கள் நம் கிரிக்கெட் வீரர்கள். பல நாடுகள், பல போட்டிகள், பல கனவுகள், பல வெற்றிகள், தோல்விகள், சர்ச்சைகள்... என  தொட்டால் ட்ரான்ஸ்பார்மரே வெடிக்கும் "நரசிம்மா"வாக நம் கண்களுக்குத் தெரிந்தாலும்... நம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மறுபக்கம் தெறிக்க விடும் கலாட்டக்கள் நிறைந்தவை...

" தெறிக்கவிடலாமா..." :


1. சச்சினுக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்த டாக்சி டிரைவர் : 

கிரிக்கெட் கிங் சச்சின்... குறும்புகளின் குரோர்பதி...மாஸ்டர் பிளாஸ்டரின் காமெடி விளாசல்களுக்கு எடுத்துக் காட்டாக 2002 ஆம் ஆண்டில் டிரினிடாட்டில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை சொல்கிறார் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா.

" நான், சச்சின், சிவ்சுந்தர் தாஸ் ஆகியோர் மதிய உணவு சாப்பிட வெளியில் கிளம்பினோம். ஒரு டாக்சியில் சச்சின் முன்னும், நாங்கள் பின்னாடியும் அமர்ந்துக் கொண்டோம். அந்த டிரைவரிடம் சச்சின் செய்த அலப்பறைகள்...

" நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" -  டிரைவர்.

" அமெரிக்காவில் இருந்து விடுமுறையைக் கழிக்க வந்திருக்கிறோம்...உங்கள் நாட்டில் பிரபலமான விளையாட்டு எது?"

"கிரிக்கெட்"

"கிரிக்கெட்டா??? அப்படின்னா என்ன? அதை எப்படி விளையாடுவாங்க? எங்கள் நாட்டில் எல்லோரும் பேஸ்பால் தான் விளையாடுவோம்." கேட்டது சச்சின்!!!

சொன்னது தான் தாமதம். அந்த டாக்சி டிரைவர் கிரிக்கெட் என்றால் என்ன, அதை எப்படி விளையாட வேண்டும் என்று கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அதன் உச்சமாக, நீங்கள் கிரிக்கெட் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா என்று இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள்... அவர்களின் விளையாட்டைப் பாருங்கள் என்றார். இத்தனையிலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சிரிக்க ஆரம்பித்துவிட்டோம்... ஆனால், சச்சினோ களத்தில் எப்படி சீரியஸாக விளையாடுவாரோ, அதேபோல ரொம்ப சீரியசாக அவரிடம் பேசி வந்தார். அந்த டிரைவருக்கு  இக்கட்டான சூழலை தந்திடக் கூடாது என கடைசி வரை தான் தான் சச்சின் என்பதை அவரிடம் சொல்லவேயில்லை... சச்சின்டா!!!!!!!!!

2. இது "பேய்" கேப்டன் !!!


கூல் கேப்டன் தோனி இந்திய அணியில் சேர்வதற்கு முன் சில காலம் ரயிலில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்து வந்தார். 2001 காலகட்டங்களில் மேற்குவங்கம் கோரக்பூர் ரயில்வே காலனியில் தன் நண்பர்களுடன் குடியிருந்தார் தோனி. இரவு நேரங்களில் உடம்பில் வெள்ளை பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு நண்பர்களுடன் ஒளிந்திருப்பார் தோனி. ஏதாவது வண்டி வந்தால், திடீரென அனைவரும் பாய்ந்து ஓடுவார்கள். அவர்களும் ..." பேய்...பிசாசு...பூதம்..." என்று அலறியடித்துக் கொண்டு ஓடுவார்களாம். நம்ம கேப்டனோ தரையில் விழுந்து...உருண்டு,புரண்டு சிரித்துக் கொண்ருப்பாராம்...

3. தண்ணீரில் நனைந்த "தாதா" :


சின்ன வயதில் இருந்தே சச்சினின் சேட்டைகளை தாங்க முடியாது என்கிறார் சச்சினின் சகோதரர் அஜித். ஒரு முறை இந்திய கிரிக்கெட் அணியின் "தாதா" கங்குலி, ரூமில் தூங்கிக் கொண்டிருந்தார்.  போரடித்துப் போயிருந்த சச்சின்... ஒரு பெரிய ஹோஸ் பைப்பை கதவின் இடுக்கில் விட்டு தண்ணீரை திறந்துவிட்டு விட்டார். ரூம் முழுக்க தண்ணீர் நிரம்பி... கங்குலியின் கிரிக்கெட் கிட்டே தண்ணியில் மிதந்து சென்று போய்... கங்குலியை தட்டி எழுப்பியிருக்கிறது. 

4. இது அன்பு "கலாய்" :
நியூசிலாந்தில் மேட்சிற்காக சென்றிருந்தது இந்திய அணி. அப்பொழுது அஜித் வாடேக்கர் இந்திய அணியின் மேனஜராக இருந்தார். மார்ச் 31 ஆம் தேதியின் நள்ளிரவு நேரம்... அஜித்தின் ரூமைத் தட்டினார் சச்சின்... தூக்கக் கலக்கத்தில் வந்த அஜித், ரொம்ப சீரியசாகவும், சோகமாகவும் நின்றுகொண்டிருந்த சச்சினைக் கண்டு பதற்றமாகி என்ன ஆனது? என்று கேட்டார். " கபில் தேவிற்கு ஏதோ ஆகிவிட்டது... உடனே வாருங்கள்...அவசரம்" என்று இழுத்துக் கொண்டு போனோர். அந்த அறை முழு இருட்டில் மூழ்கியிருந்தது. பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார் அஜித்... திடீரென கூச்சல் போட்டு, லைட்களை ஆன்செய்தபடி இந்திய கிரிக்கெட் அணியின் மொத்த வீரர்களும் வாழ்த்து பாடியபடி, கையில் கேக்குடன் வந்தனர். அன்று அஜித் வாடேக்கர் பிறந்தநாள்... மெய்சிலிர்த்துப் போனார் அஜித்... முழுக்க முழுக்க சச்சினின் ஐடியா!!!

5. காரம் மச்சி...இது மிர்ச்சி :

இர்ஃபான் பதான் டீமில் இணைந்திருந்த புதிது. அனைவரும் டின்னருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சூச்சி என்றொரு உணவு வகை இருந்திருக்கிறது. அதற்கு முன் அதை சுவைத்ததில்லை என்பதால் அது எப்படி இருக்கும் என்று சச்சினிடம் கேட்டிருக்கிறார் இர்ஃபான். " அது செம ஸ்வீட்டா இருக்கும்... நிறைய எடுத்து சாப்பிடு..." என்றார் சச்சின். நல்ல பிள்ளையாக, முதல் முறையிலேயே நிறையே எடுத்து வாயில் போட்டிருக்கிறார் இர்ஃபான். தாங்க முடியாத காரத்தை தணிக்க தண்ணீர் தேடி ஓடியவர் தான்... பின்பு, நீண்ட நாட்களுக்கு நாக்கில் சுவையே தெரியவில்லையாம் பதானுக்கு!!!

6. மட்டையடி வாங்கிய மட்டை வீரர்கள்: 
2005ஆம் ஆண்டு, கொச்சினில் ஒரு முறை மொத்த டீமும் சேர்ந்து ஒரு சேட்டை செய்திருக்கிறார்கள். யுவ்ராஜ் மற்றும் ஹர்பஜன் இந்த சம்பவத்தின் மாஸ்டர் மைன்ட்ஸ்... கேப்டன் கங்குலி தன் சக வீரர்களைப் பற்றி தவறாக பேசியது போன்ற ஒரு செய்தித்தாளை தயார் செய்துவிட்டார்கள். மீட்டிங்கிற்கு வந்த கங்குலியிடம் அதைக் காட்டி, யுவ்ராஜ், நெஹ்ரா போன்றோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை நான் சொல்லவில்லை என்று போராடிய கங்குலி ஒரு கட்டத்தில் உடைந்து போய், கேப்டன் பதவியையே நான் ராஜினாமா செய்கிறேன் என்றளவிற்குப் பேச ஆரம்பித்துவிட்டார். நிலைமை கை மீறி போவதை உணர்ந்த ராகுல் டிராவிட் "தாதா"விடம் உண்மையை சொல்லியிருக்கிறார். அவ்வளவு தான்... வங்கப் புலி கையில் மட்டையுடன் வேட்டைக்கு கிளம்பிவிட்டது. அன்று அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் விழுந்தது "மட்டையடி..."

7. புஸ்ஸான பஸ் !!!!
கிரிக்கெட்டில் இருந்தபோது மட்டுமில்லை, ரிட்டையர் ஆன பின்பும் கூட சச்சினின் சேட்டைகள் தொடர்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில், ஒரு பஸ் ஸ்டாப்பில் இருப்பது போன்ற போட்டோவைப் போட்டார். இங்கிலாந்தின் கிரேட் ஹஸ்லியில் கடைசி பேருந்தை தவற விட்டுட்டேன். யாராவது லிப்ட் கொடுக்க முடியுமா??? என்று போட்டார். அவ்வளவு தான்... "என்ன சைதை தமிழச்சி தாக்கப்பட்டாரா?? "என்ற கோப்பில், ஆளாளுக்கு வண்டிய கட்டி கிளம்பிட்டாங்க ரசிகர்கள். பின்பு, சில மணி நேரங்களிலேயே... "நான் பேருந்தை விடவில்லை, நீங்கள் தான் என் ஜோக்கை கவனிக்க தவறிவிட்டீர்கள்! "...என்று போட்டாரே பார்ப்போம்!!!

 

அடேங்கப்பா...அடேங்கப்பப்பப்பா... அதெப்படி இவ்வளவையும் பண்ணிட்டு அந்த மூஞ்ச குழந்த மாதிரி வெச்சிருக்கியோ... தெரிலடா சாமி...!!!!!!

- இரா.கலைச்செல்வன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close