Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 முதல் 200 வரை... அஷ்வினின் பவுலிங் பயணம் #Infographics

பெருமையாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள் பாஸ். நம்ம அஷ்வின் தான் இப்போது  டெஸ்ட் போட்டிகளில் அதிவிரைவில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். பொதுவாக பேட்டிங்கில் சாதனை புரிபவர்களை நாம் கொண்டாடுகிறோம். பவுலிங்கில் சாதிப்பவர்களை நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதே இல்லை. அஷ்வின் படைத்துள்ள  ஒவ்வொரு சாதனையும் வேற லெவல். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் இந்த  டெஸ்ட் போட்டியில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் அஷ்வின். ஒரு டெஸ்ட் போட்டியில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை  அஷ்வின் கைப்பற்றுவது, இது ஐந்தாவது முறை. இதன் மூலம் அதிக முறை, ஒரே டெஸ்ட் போட்டியில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் லிஸ்டில் இரண்டாவது இடத்தில்  ஹர்பஜன் சிங்குடன் இணைந்திருக்கிறார். அஷ்வினை விட மேலே இருக்கும் ஒரே ஒருவர் கும்ளே மட்டும் தான். கும்ளே எட்டு முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் திடீரென இந்த சாதனைகள் நிகழ்த்தி விட வில்லை. ஆரம்பத்தில் இருந்தே இதற்கு உழைத்திருக்கிறார். 

கடந்து வந்த பாதை : -

2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சு மோசமாக அமைந்திருந்தது. நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது ஹர்பஜனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அஷ்வினுக்கும், ஓஜாவுக்கும் வாய்ப்பு  வழங்கப்பட்டது.  வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. அங்கே தான் தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்தார் அஷ்வின். சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து டெஸ்ட் கேப்பை பெற்ற பெருமையுடன் பந்துவீசினார். முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் அஷ்வின் கைப்பற்றி அசத்தினார். முதல்  டெஸ்ட் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றியது மட்டுமின்றி அந்த டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருதும் வென்றார். அதே தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார். அறிமுகமான முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருது பெற, தெறி வைரல் ஆனார். அதன் பின்னர் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் எவ்வளவு விக்கெட்டுகளை எடுத்தார் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இன்ஃபோகிராபியைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். 

அதிவேக 200 விக்கெட் : -

அஷ்வினின் முதல் விக்கெட் பிராவோ, ஐம்பதாவது விக்கெட் காம்ப்டன், நூறாவது விக்கெட் டேரன் சமி, நூற்றி ஐம்பதாவது விக்கெட் இம்ரான் தாஹீர். இதோ 200வது விக்கெட்  உலகின் தற்போதைய சிறந்த பேட்ஸ்மேன் என சொல்லப்படும் கேன் வில்லியம்சன். இந்தியாவை பொறுத்தவரை அதிவேகமாக 200 விக்கெட் எடுத்த பெருமைக்கு இதுவரை சொந்தக்காரராக இருந்தவர் ஹர்பஜன் சிங். அவர் 46 போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அவரை விட ஒன்பது போட்டிகள் குறைவாக விளையாடி வெறும் 37வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திவிட்டார் அஷ்வின். ஆஸ்திரேலியாவை சேர்ந்த க்ரிம்மேட்டுக்கு பிறகு அதிவேகமாக இந்தச் சாதனையை புரிந்தவர் அஷ்வின் தான். பந்துவீச்சு உலகின் ஜாம்பவான்கள் ஸ்டெயின், மெக்ராத், வார்னே , முரளிதரன் ஆகியோர் கூட அஷ்வினுக்கு பின்னால் தான் இருக்கின்றனர். 

குறைந்த பந்தில் அதிக விக்கெட் : -

போட்டிகள் அடிப்படையில் பார்த்தால் அஷ்வின் உலகின் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், வீசிய பந்துகள் எண்ணிக்கையையும், விக்கெட் எண்ணிக்கையையும் கணக்கு பாரத்தால் உலகின்  நம்பர்1  அஷ்வின் தான். 

எந்தெந்த ஆண்டில் எவ்வளவு விக்கெட் :-

அஷ்வினின் 200வது விக்கெட்  வரையுள்ள கணக்கின் படி, ஒவ்வொரு ஆண்டும்  அஷ்வின் எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். 2011, 2012, 2013 ஆண்டுகளில் அஷ்வின் வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், நடுவில் 2014 ஆண்டு கொஞ்சம் சோடை போனார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் கொஞ்சம் சுமாராகத்தான் பந்து வீசியிருந்தார் அஷ்வின். 

எந்த நாட்டில் எவ்வளவு விக்கெட் : -

சுழற்பந்தின் சொர்க்க புரியாக திகழும் மைதானங்களில் அஷ்வினின் விக்கெட் வேட்டை அபாரமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் 20 டெஸ்ட் போட்டியில் விளையாடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையிலும், ஆஸ்திரேலியாவிலும் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். தென்னாபிரிக்க மண்ணில், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அஷ்வின் விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டி ஆடி மூன்று விக்கெட்டுகளை மட்டும் கைப்பற்றினார். 

அஷ்வின் vs எதிரணி : -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பத்து டெஸ்ட் போட்டிகளில் ஐம்பது விக்கெட்டையும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒன்பது போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார் அஷ்வின். நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார் அஷ்வின். இங்கிலாந்துடன் மட்டுமே இதுவரை சுமாரான பந்துவீச்சு சராசரி வைத்திருக்கிறார். அந்த அணியுடன் ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஆடி சுமார் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

உலகின் சுழல் மன்னர்கள் என அழைக்கப்படும் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் ஆகியோர்  கூட இவ்வளவு விரைவாக விக்கெட்டுகளை அள்ளியதில்லை. ஆனால் அஷ்வின் விறுவிறுவென விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியாவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்  வரிசையில் ஒன்பதாவது இடத்துக்கு வந்துவிட்டார் அஷ்வின். ஐந்தே ஆண்டுகளில் அஷ்வின் தொட்ட உயரம் மிகப்பெரியது. இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள்  விளையாடும் வாய்ப்பு அமைந்தால், இதே போல முழு பார்மில்  பந்து வீசும் பட்சத்தில் அசைக்க முடியாத பல சாதனைகளை அஷ்வின் படைக்ககூடும். 

- பு.விவேக் ஆனந்த் 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ