Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிடானை வசை பாடிய ரொனால்டோ!

தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.

ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான்.

இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் வெளியேறினார். சக வீரர்களிடம் பெயரளவுக்கு கை கொடுத்தார். பொதுவாக, களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களை கைகுலுக்கி வாழ்த்துவது, பயிற்சியாளர்களின் வழக்கம். அந்த வகையில், எல்லையில் நின்றிருந்த ஜிடான், ரொனால்டோவை நோக்கி கையை நீட்டினார். ஆனால், ரொனால்டோவோ ஜிடான் முகத்தைக் கூட பார்க்காமல், பேருக்கு கை கொடுத்து விட்டு அமர்ந்தார்.

அப்போதும் சீற்றம் குறையவில்லை. தண்ணீர் பாட்டிலை கசக்குவது, மாற்று வீரர்கள் அணியும் சீருடையை தூக்கி வீசுவது என ஏக கடுப்பில் இருந்தார். அதையெல்லாம் விட, கெட்ட கெட்ட வார்த்தைகளில் சரளமாக வசைபாடினார். ரொனால்டோவின் கோபத்துக்கு வலு சேர்க்கும் வகையில், போட்டி முடிய 5 நிமிடங்கள் இருந்தபோது, லாஸ் பல்மாஸ் அணியின் செர்ஜியோ அராஜுவோ ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 2&2 என டிரா ஆனது. இதையெல்லாம் பார்த்து உள்ளூர கொதித்துக் கொண்டிருந்தார் ரொனால்டோ.

ரொனால்டோ கோபத்தில் இருப்பது ஜிடானுக்கும் தெரியும். ரொனால்டோ காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதாலும், இன்று சாம்பியன்ஸ் லீக் போட்டியில் புரூஸியா டார்ட்முண்ட் அணிக்கு எதிரான முக்கியமான மோதல் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜிடான், அவருக்கு ஓய்வு அளித்தார். ‘‘ரொனால்டோ எப்போதுமே களத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவார். சாம்பியன்ஸ் லீக் போட்டி இருப்பதால், அவருக்கு ஓய்வு தேவை’’ என, ஜிடான் காரணம் சொல்லி இருந்தார்.


கால்பந்து அரங்கில் இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணம். தற்போது சோசியல் மீடியாக்களின் தாக்கத்தால், இந்த விஷயம் உலகெங்கும் வைரலாகி உள்ளது. ரொனால்டோவை களத்தில் இருந்து வெளியே வர வைத்ததில் இருந்து, பெஞ்சில் அமர்ந்து கெட்ட வார்த்தையில் திட்டுவது வரை, ஒவ்வொரு நொடியையும் விலாவரியாக விளக்கி யூ டியூப்பில் வீடியோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போதாக்குறைக்கு போர்ச்சுக்கீசிய மொழியில் அவர் திட்டியதற்கு டிரான்ஸ்லேஷன் வேற....

 

 

 

 

இப்போது நிலைமை சகஜமாகி விட்டது. ‘‘எல்லாம் சரியாகி விட்டது. ரொனால்டோ மட்டுமல்ல, களத்தில் இருந்து வெளியே எடுத்தால் எந்த வீரருக்கும் கோபம் வரும். நாங்கள் ஏற்கனவே சாம்பியன்ஸ் லீக் போட்டியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டோம. ரொனால்டோவின் நல்லதுக்காகவே நான் அந்த முடிவை எடுத்தேன்’’ என்றார் ஜாம்பவான் ஜிடான்.


- தா.ரமேஷ்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ