Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராகுல் அவுட், கம்பீர் இன்... ஒருநாள் அணியில் யுவராஜ்?... #SportsBytes

கே.எல்.ராகுல் அவுட், கம்பீர் இன்...

கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் ஃபீல்டிங் செய்தார். அநேகமாக ராகுல் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று ஃபிட்னஸ் தேர்வில் தேறி விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ராகுல் விலகல் குறித்தும், கம்பீர் வருகை குறித்தும் பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை. கம்பீர் கடைசியாக 2014ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், இரு இன்னிங்சிலும் சேர்த்து 3 ரன்களே எடுத்தார். அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இதற்கிடையே, கம்பீர் வந்து விட்டால் ஷிகர் தவன் என்ன ஆவார் என பிளேயிங் லெவனை தீவிரமாக செலக்ட் செய்து வருகின்றனர் சில ஆர்வக் கோளாறுகள்.

ஒருநாள் அணியில் யுவராஜ்?


கவுதம் கம்பீர் செய்தி ஒருபுறம் இருக்க, யுவராஜ் சிங் நாளை உடற்தகுதி தேர்வுக்கு செல்ல இருப்பதாகவும், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்படலாம் என்றும் சோசியல் மீடியாவில் பேச்சு அடிபடுகிறது. ‘அதெல்லாம் இல்லை. ஒப்பந்த வீரர்கள் அனைவரும் மாதம் இருமுறை ஃபிட்னஸ் தேர்வில் பங்கேற்க வேண்டும்’ என்பது பிசிசிஐ விதிமுறை. அதன்படி யுவராஜ் உடற்தகுதியில் பங்கேற்கிறார். மற்றபடி எதுவும் இல்லை.. நீங்க ஓவரா கற்பனை பண்ணாதிங்க’ என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். 


முதலிடத்துக்கு வாய்ப்பு!


கொல்கத்தாவில் நடக்க உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் இந்தியா முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. கான்பூரில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 500வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தரவரிசையில் கணிசமான புள்ளிகள் கிடைத்துள்ளது. தற்போது பாகிஸ்தான் 111 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. எனவே, விரைவில் இந்தியா மீண்டும் நம்பர் - 1 இடத்துக்கு முன்னேறும் என்பது உறுதி. 

அஸ்வின் அபாரம்!


கான்பூர் டெஸ்டில் அஸ்வின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்துடன் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த அசத்தல் பந்துவீச்சு தரவரிசையிலும் எதிரொலித்தது. டெஸ்ட் பவுலர்கள் ரேங்கிங்கில் அஸ்வின், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலிடத்தில் நீடிக்கிறார். கொல்கத்தா டெஸ்டில் அஸ்வின் அசத்தும் பட்சத்தில் இந்த ஆண்டு அவர் முதலிடம் பெற வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின்தான் நம்பர் - 1. 


சபாஷ் சத்தியன்!


சென்னையை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன். ரேங்கிங்கில் 152வது இடத்தில் உள்ள அவர் சமீபத்தில், பெல்ஜியத்தில் நடந்த வேர்ல்ட் டூர் பெல்ஜியம் ஓபன் தொடரில், தரவரிசையில் 113வது இடத்தில் உள்ள பெல்ஜியம் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ப்ரோ டூர் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் மற்றொரு சென்னை வீரர் சரத் கமல், இந்த சாதனையைப் படைத்திருந்தார். செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் சத்தியன் ‘‘ஃபைனலுக்கு முன்னேறியது, சாம்பியன் ஆனதை இப்போதும் கூட என்னால் நம்பமுடியவில்லை’’ என்கிறார். 

தடகளத்தில் முத்திரை!

ஓபன் நேஷனல் தடகள சாம்பியன்ஷிப் லக்னோவில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன் 14:16.07 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்துள்ளார்.  பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் எல்.சூர்யா 16:05.90 நிமிடத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றுள்ளார்.

டி வில்லியர்ஸ் விலகல்!


ஆஸ்திரேலியா செல்லும் தென் ஆப்ரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப் பயணத்தில் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நியூஸிலாந்து தொடரின்போது டி வில்லியர்ஸின் முழுங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது காயம் இன்னும் குணமடையாததால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை. இது தென் ஆப்ரிக்க அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 


-தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ