Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியன் சூப்பர் லீக் – 3: கோப்பையை வெல்லப்போவது யார்? #ISL

ஐ.பி.எல் தொடருக்கு நிகராக பிரபலமடைந்து வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் காலெடுத்து வைக்கப்போகிறது ஐ.எஸ்.எல். வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி மூன்றாவது சீசனை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சென்னை அணியைத் தவிர்த்து மற்ற ஏழு அணிகளிலும் பயிற்சியாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

மெண்டோசா, எலானோ போன்ற சில முன்னனி வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனில் இல்லை. ஆனாலும் டீகோ ஃபோர்லான், ஆரோன் ஹூக்ஸ் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் புதிதாய் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். பல வீரர்களும் கடந்த முறை விளையாடிய அணிகளிலிருந்து வேறு அணிக்கு மாறியுள்ளன. 

அதுமட்டுமின்றி ஐரோப்பிய அணிகளைப் போல நம் அணிகளும் வெளிநாட்டில் பயிற்சி முகாம் நடத்தியுள்ளன. ஒட்டுமொத்தத்தில் முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் புத்தம்புது பொலிவுடனே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். கொல்கத்தா, சென்னை அணிகளைத் தொடர்ந்து சாம்பியன் ஆகப்போகும் அந்த அணி எது? 8 அணிகளுக்கும் சாம்பியன் ஆவதற்கான வாய்ப்பு எப்படியுள்ளது. தினமும் இரண்டு அணிகள் வீதம் ஐ.எஸ்.எல் அணிகளைப் பற்றி அலசுவோம்…..

இந்தியன் சூப்பர் லீக்

 

அட்லெடிகோ டி கொல்கத்தா
கொல்கத்தா இளவரசர் கங்குலி சக உரிமையாளராக உள்ள இந்த அணியை இண்டோ - ஸ்பெயின் அணி என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியின் பயிற்சியாளராக இருந்த ஆன்டோனியோ ஹபாஸ் ஊதியப் பிரச்சனை காரணமாக புனே அணிக்கு மாறிவிட மீண்டும் ஸ்பெயினில் இருந்தே பயிற்சியாளரை இறக்கியுள்ளனர். ஐ.எஸ்.எல் லின் முதல் சாம்பியன் என்னும் பெருமைக்குறிய கொல்கத்தா அணியை இம்முறை ஜோஸ் மொலினோ வழிநடத்தப்போகிறார்.

 கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே காயமடைந்து வெளியேறிய ஹெல்டர் போஸ்டிகா இம்முறையும் மார்க்கீ பிளேயராக நீடிக்கிறார். போர்ச்சுகல் அணிக்காக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா உடன் விளையாடிய அனுபவம் பெற்ற போஸ்டிகா அணிக்கு மிகப்பெரிய பலம். அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் 11 கோல்கள் அடித்து அசத்திய இயான் ஹியூம், போஸ்டிகாவுடன் இணைந்து எதிரணியை துவம்சம் செய்யவல்லவர். கேப்டன் போர்ஜா ஃபெர்னாண்டஸ், சமீங் டௌடி, ஜாவி லாரா, ரால்டே ஆகியோர் உள்ளடங்கிய கொல்கத்தா அணியின் நடுகளம் போல வேறு எந்த அணியும் மிட்ஃபீல்டில் பலமாக இல்லை. இவர்களோடு சேர்த்து ஸ்காட்லாந்து லீக்கில் பட்டையைக் கிளப்பிய ஸ்டீவன் பியர்சனையும் ஒப்பந்தம் செய்து மாஸ் காட்டுகிறது கொல்கத்தா.

  கடந்த சீசனில் வெறும் வெளிநாட்டு வீரர்களையே நம்பியிருந்தனர். ஆனால், இந்த முறை பிரபீர் தாஸ், லால்தலுமுனா போன்ற பல இந்திய வீரர்களையும் இறக்கியுள்ளது. அதனால் அணியின் பலம் கூடியிருக்கிறது. கோல்கீப்பர் மஜும்தாரும்  அணிக்கு வலு சேர்க்கிறார். ஆனால் கொல்கத்தா அணிக்கு தடுப்பாட்டம்தான் பிரச்னை. கடந்த இரண்டு சீசன்களில் குறைவான கோல்கள் விட்டுக்கொடுத்த அணி கொல்கத்தாதான். ஆனால் பல வீரர்கள் மாறிவிட்டதால் பின்களம் சற்று பலம் குறைந்துள்ளது. அர்னாப் மொண்டால், டிரி ஆகியோர் தவிர்த்து வேறு எவரும் அனுபவசாலிகளாக இல்லாதது சற்று பின்னடைவு.  இந்திய நட்சத்திரங்கள் இசுமி, ரினோ ஆன்டோ ஆகியோர் அணி மாறியுள்ளதும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. பின்களத்திலுள்ள பிரச்சனைகளை சரிசெய்து, புதிய பயிற்சியாளரின் வழிமுறைகளுக்கு சரியான முறையில் தங்களை தயார்படுத்திக்கொண்டால் நிச்சயம் இந்த வங்கப்புலிகள் சீறும்! கோப்பைய மீண்டும் வெல்ல கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

பயிற்சியாளர்: ஜோஸ் மொலினோ
கேப்டன்     : போர்ஜா ஃபெர்னான்டஸ்
மார்க்கீ பிளேயர் : ஹெல்டர் போஸ்டிகா
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : போஸ்டிகா, ஹியூம், பியர்சன், டௌடி
இந்திய நம்பிக்கைகள் : ரால்டே, அர்னாப் மொண்டால், மஜும்தார்

கேரளா பிளாஸ்டர்ஸ்
        மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் அணி. முதல் சீசனில் ரன்னராக வந்த இந்த அணி, இரண்டாவது சீசனில் சொதப்பி, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோல் அடிப்பதிலும் தடுமாறி, எதிரணியின் கோல் முயற்சிகளையும் தடுக்க முடியாமல் திணறி, பயிற்சியாளரைப் பாதியில் மாற்றி அப்பப்பா…ஆனால் இந்த முறை வெகுண்டெழ வேண்டுமென்ற நோக்கில் பல மாற்றங்களை செய்துள்ளது அணி நிர்வாகம். பிரீமியர் லீக்கின் முன்னனி அணியான மான்செஸ்டர் சிட்டி அணயின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீவ் காபெல் தான் கேரளா அணியின் தற்போதைய பயிற்சியாளர்.

 2016 யூரோ தொடரில் அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஆரோன் ஹூக்சை மார்கியூ பிளேயராகவும், இந்திய அணியின் முன்னனி வீரர் ரினோ ஆன்டோவையும் ஒப்பந்தம் செய்து தங்கள் அணியின் தடுப்பாட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளளனர். 
ஐ.எஸ்.எல் தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது இந்தியரான ஹவோகிப்பும் இம்முறை கேரளாவின் மஞ்சள் உடையில்தான் கலக்கப்போகிறார். 2014 ஐ-லீக் தொடரில் அதிக கோலடித்த வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் கடைசி 9 போட்டிகளில் 6 கோல்களும் 3 அசிஸ்டுகளும் செய்து கலக்கிய ஆன்டோனியோ ஜெர்மன்தான் இம்முறை அணியின் முதுகெலும்பாக இருப்பார். லெஃப்ட் விங்கில் ஆடக்கூடிய சிறந்த தடுப்பாட்டக்காரர் எவரும் இல்லாதது மிகப்பெரிய மைனஸ். நடுகளம் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது. அதனால் முன்களத்திற்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. 

வினீத், ஆன்டோ ஆகியோர் ஏ.எஃப்.சி கோப்பை அரையிறுதியில் பெங்களூரு அணிக்காக விளையாட இருப்பதால் கேரளா அனியின் முதல் 4 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இது பிளாஸ்டர்சுக்கு மேலும் பின்னடைவு. சென்ற ஆண்டை விட இம்முறை தடுப்பாட்டம் பலமடைந்தாலும், எதிரணியின் அரணை உடைத்து கோல் அடிப்பதில் தேர்ந்து விளங்கினால் மட்டுமே கேரளா அணி எதிரணியை பிளாஸ்ட் செய்ய முடியும். 

அனைத்தையும் விட கேரளா அணி கடந்த சீசனில் இழந்தது தங்கள் முதல் சீசன் கேப்டன் டேவிட் ஜேம்சின் தலைமையைத்தான். அவரது அபார தலைமையும் வழிநடத்தலும்தான் அணியை முதல் சீசனில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது. அந்தக் குறையை ஹியூக்ஸ் போக்கினால் முன்னேற்றம் காணலாம். அரையிறுதி வாய்ப்பு 50-50 தான்!

பயிற்சியாளர் : ஸ்டீவன் காபெல்லோ
கேப்டன் & மார்க்கீ பிளேயர் : ஆரோன் ஹியூக்ஸ்
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ஆன்டோனியோ ஜெர்மன், ஜோசு குரியாஸ்,  ஹெங்பெர்ட்
இந்திய நம்பிக்கைகள் : முகமது ரஃபி, ஜிங்டன், ஹவோகிப், ரினோ ஆன்டோ 


-மு.பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close