Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரியர்கள் அல்ல... கால்பந்து வெறியர்கள் நிறைந்த கோவா..! #LetsFootball

இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடரின் மூன்றாவது சீசன் நாளை தொடங்குகிறது. ஐஎஸ்எல் வரவால் இந்தியாவில் கால்பந்து கலாசாரம் வேகமாக பரவி வருகிறது என்பதால், முந்தைய சீசன்களை விட இந்த சீசன் பரப்பரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா, கேரளா அணிகளின் பலம், பலவீனம் பற்றி நேற்று அலசினோம். இன்று கோவா அணி, புனே அணிகளின் நிலவரம். 

FC கோவா


        இயக்குநர் ராம் பாணியில் சொன்னால், “கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவின் வரைபடத்திலிருந்து களவாடப்பட்டு, கால்பந்தின் சொர்க்கமான ஐரோப்பாவோடு இணைக்கப்பட்ட, மெஸ்ஸி ரசிகர்களும், ரொனால்டோ வெறியர்களும் வாழும் ஊர்” தான் கோவா. அவர்களுக்காகத்தான் கடந்த சீசனின் இறுதிப் போட்டி மிகச்சிறிய மைதானமாய் இருந்தாலும் கோவாவில் நடத்தப்பட்டது. அந்த ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கோவா அணி. 

        இரண்டு சீசன்களிலும் புள்ளிப்பட்டியலில் டாப் இரண்டு இடங்களுக்குள் வந்த கோவா அணியால் கோப்பையைத்தான் வெல்ல முடியவில்லை. கடந்த சீசன் ஃபைனலில் கடைசி 10 நிமிடம் வரை கோப்பை கோவாவின் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருந்தது.  ஆனால் சென்னை அணியின் மேஜிக்கால் அது மீண்டும் எட்டாக் கனியானது. இரண்டு முறை தவறவிட்ட கோப்பையை இம்முறை கைப்பற்றியே தீருவது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் பயிற்சியாளர் ஜிகோ.

        தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோவா அணியை வழிநடத்தப்போகும் பிரேசிலைச் சார்ந்த ஜிகோ, இம்முறையும் பலமான அணியையே களமிறக்கப் போகிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் லூசியோ தான் மார்க்கீ பிளேயர். கோவா அணியைப் பொறுத்தவரையில் முழுதும் பிரேசில் வீரர்களே. 10 வெளிநாட்டவர்களில் 8 பேர் அந்நாட்டவரே. அதனால் ஜிகோவிற்கு அவர்களை ஒருங்கிணைப்பது மிகவும் எளிது. இரண்டாவது சீசனில் கோவா தான் அதிக கோல்கள் அடித்த அணி. அவர்களின் முன்களம் அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது. இம்முறையும் ரீனால்டோ, ஜூலியோ சீசர் போன்ற வீரர்கள் கோவாவிற்கு பலமாய் அமைந்துள்ளனர். ஆனால் கடந்த சீசனில் அசத்திய ஹவோகிப், டூடு உள்ளிட்ட சில முன்னனி இந்திய வீரர்களை அந்த அணி தக்கவைத்துக்கொள்ள தவறிவிட்டது.

      கடந்த சீசன் ஃபைனல் முடிந்ததும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோவா உரிமையாளர்களுக்கு தடை இருந்தது. அதனால் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கோவா அணிக்கு சில நாட்கள் பிரச்சனை இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் சரிசெய்து முன்னணி இந்திய வீரர் ராபின் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த முறை டெல்லி அணி அரையிறுதி வரை செல்லக் காரணமாய் அமைந்த ராபின் சிங் கோவா அணிக்கு மிகப்பெரிய பிளஸ். ரோமியோ ஃபெர்னாண்டெஸ், மந்தர் ராவ் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளதால் கோவாவின் நடுகளமும் பிரமிக்க வைக்கிறது. ஸ்பெயினின் ஜோஃப்ரே அவர்களின் நடுகளத்திற்கு வேகமும் அனுபவமும் கூட்டுகிறார்.

        கோவா அணியின் பலம் பலவீனம் இரண்டும் இம்முறை அவர்களின் தடுப்பாட்டம்தான். உலக அரங்கில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் – லூசியோ, சப்ரோசோ, டென்சில் ஃபிரான்கோ போன்றோர் எதிரணிக்கு அரணாய் விளங்குவர். ஆனால் வெளிநாட்டு வீரர்களெல்லாம் 30 வயதுக்கும் அதிகமானவர்கள் என்பதால் 90 நிமிடங்களும் அவர்களால் எதிரணி வீரர்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி போட்டிகள் அனைத்தும் 2-3 நாள் இடைவெளியிலேயே நடப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுமளவிற்கு அவர்களது உடல் ஒத்துழைக்குமா என்பதும் மிகப்பெரிய சந்தேகம். கோல்கீப்பிங்கைப் பொறுத்தவரையில் கடந்த சீசனில் கலக்கிய கட்டிமானியைத் தான் இப்போதும் நம்பியுள்ளது. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் இல்லாதது சற்று பின்னடைவுதான். கடந்த சீசனில் 8 அசிஸ்டுகள் செய்து அசிஸ்ட் கிங்காக விளங்கிய லியோ மௌராவை கோவா அணி ரொம்பவே மிஸ் செய்யும்.

இதுபோன்ற சில பலவீனங்கள் தென்பட்டாலும் மொத்தமாகப் பார்க்கும்போது கடந்த இரண்டு சீசன்களைப் போல இந்த சீசனிலும் கோவா அணி பலமானதாகவே காணப்படுகிறது. “சிறப்பாக விளையாடுவதற்குத் தகுந்த வாய்ப்பும், தொலைநோக்கு எண்ணம் கொண்ட உரிமையாளர்களும் இருக்கும்போது, நமது செயல்பாடு பல மடங்கு அதிகரிக்கும். கால்பந்தைப் பொறுத்தவரையில் முடிவுகளே முக்கியம். கடந்த இரண்டு சீசன்களில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. இந்தப் புதிய சீசனிலும் நல்ல முடிவுகள் கிடைக்கும்” என்று கூறும் ஜிகோ, தனது அணியை ‘பிரீ-சீசன்’ பயிற்சிக்கு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள தனது அகாடமியில் வைத்து டிரில் கொடுத்துள்ளார்.
கோவா அணியின் மிகப்பெரிய பலமே, அவர்களின் நிலைத்தன்மை தான். அதனை இம்முறையும் தொடரும்பட்சத்தில் அணியின் சக உரிமையாளர் விராத் கோலியின் கர்ஜனையோடு கோப்பையை முத்தமிடலாம்!

 

பயிற்சியாளர் : ஜிகோ
கேப்டன் & மார்க்கீ பிளேயர் : லூசியோ
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ரீனால்டோ, ஜெஃப்ரே, சப்ரோசா, லூசியோ
இந்திய நம்பிக்கைகள் : ராபின் சிங், கட்டிமானி, ரோமியோ ஃபெர்னாண்டெஸ்,  மந்தர் ராவ் தேசாய்.புனே சிட்டி FC


        ஐ.எஸ்.எல் கோப்பையை முதல் முதலாய் முத்தமிட்ட மானேஜரான ஆன்டோனியோ ஹபாஸ் இப்போது கோப்பையை புனேவிற்கு கடத்தும் முனைப்பில் முறுக்கிக்கொண்டு நிற்கிறார். ஐ.எஸ்.எல்லின் வெற்றிகரமான பயிற்சியாளர்களுள் ஒருவரான ஹபாஸ், இரண்டு சீசனிலும் 6வது மற்றும் 7வது இடம் என சொதப்பிய புனேவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல், ஐ.எஸ்.எல் தொடரில் சாதித்துக் காட்டிய வீரர்களையெல்லாம் வளைத்துப் போட்டுள்ளது புனே. “வீரர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்து, அவர்களின் உடலைப்பற்றி அவர்களை உணரச்செய்துள்ளோம். வீரர்களின் உடல்திடம் தான் மிக முக்கியம்” என்று கூறிய ஹபாஸ் ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து செயல்பட்டு வருகிறார். 

        ஒவ்வொரு பொசிஷனுக்கும் தேவையான தகுதியான வீரர்களை ஒப்பந்தம் செய்தார் ஹபாஸ். ஆனால் சீசன் தொடங்காத நிலையிலேயே அவ்வணிக்குப் பேரடி விழுந்துள்ளது. மார்க்கீ பிளேயராக ஒப்பந்தம் செய்யப்பட்ட குட்ஜோன்சனும் தடுப்பாட்டக்காரர் பிகேவும் காயத்தால் இப்போது தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர்களுக்கு இணையான மாற்று கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2016 யூரோ கோப்பைத் தொடரில் ஐஸ்லாந்து அணிக்காக விளையாடிய குட்ஜோன்சன் தான் இவ்வாண்டு புனேவின் துருப்புச்சீட்டாய் கருதப்பட்டார். இந்நிலையில் அவரக்கு ஏற்பட்ட காயம் அணிக்கு நிச்சயம் பேரிழப்பு தான்.

        முதல் சீசனில் கொல்கத்தா அணிக்காகவும், போன சீசனில் சென்னை அணிக்காகவும் விளையாடி, இரண்டு தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய கோல்கீப்பர் எடல் இவ்வருடம் புனேவுக்காக விளையாடப்போகிறார். இந்த சீசனிலும் இவர் கோப்பையை வெல்லும்பட்சத்தில், உலக வரலாற்றிலேயே முதன் முதலாக மூன்று வேறு அணிகளுக்காக தொடர்ந்து மூன்று கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அவரது அதிர்ஷ்டம் புனே அணிக்குக் கைகொடுத்தால் நிச்சயம் சரித்திரம் படைக்கலாம்.

புனேயில் தமிழக வீரர்: 
புனே அணியில் இருக்கும் கவனிக்கத்தக்க மற்றொரு வீரர் ராவணன். திருச்சியைச் சேர்ந்த இவரை, தொடர்ந்து மூன்று சீசன்களாக புனே அணி தக்க வைத்துள்ளது. அதைவிட, எல்லா போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் தவறாது இடம்பெற்று விடுவார் சென்டர் பேக் ராவணன். இதுவே அவரது பெருமைக்கு ஒரு சான்று. இந்தமுறையும் அவர் எதிரணியின் ஸ்ட்ரைக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என நம்பலாம். 

    கடந்த ஆண்டு கோவா அணிக்காகக் கலக்கிய ஜொனாதன் லுக்கா, கொல்கத்தாவின் நம்பிக்கை நாயகன் அராடா இசுமி, சிறந்த இடது விங் தடுப்பாட்டக்காரரான நாராயன் தாஸ், புரூனோ அரியாஸ், ஆகஸ்டின் ஃபெர்னாண்டெஸ் என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே இம்போர்ட் செய்திருக்கிறார் பயிற்சியாளர் ஹபாஸ். இளம் நாயகர்களோடு சேர்ந்து அனுபவமிக்க முன்னாள் பார்சிலோனா அணி வீரர்களான டடோ, பிடு ஆகியோரையும் புனே அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் அவ்வணி அனைத்துத் துறைகளிலும் பலம் பொருந்திய அணியாகவே காணப்படுகிறது. முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு தொடரிலிருந்து வெளியேறிய குட்ஜோன்சனுக்குப் பதிலாக சிறந்த முன்கள வீரரை அவர்கள் தேடிப்பிடிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது முன்களம் திக்குத் தெரியாமல் போய்விடும். அணியை பெரிதும் பாதித்துவிடும். இதுமட்டுமே தற்போதைக்குப் புனே அணியின் மிகப்பெரிய பிரச்சனை. அதை சரிசெய்தால் அரையிறுதி வாய்ப்பு நிச்சயம். கோப்பை பற்றிய கனவும் கூட பலிக்கலாம்!

 

பயிற்சியாளர் : ஆன்டோனியோ ஹபாஸ்
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : எடல், லுக்கா, பிடு, டடோ
இந்திய நம்பிக்கைகள் : லிங்டாக். இசுமி, சஞ்சு பிரதான், ஆகஸ்டின் ஃபெர்னாண்டெஸ்

-  மு.பிரதீப் கிருஷ்ணா

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ