Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி காக் ஆடிய 'டிவில்லியர்ஸ்' ஆட்டம்... அதிர்ந்த ஆஸ்திரேலியா!

ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில்   சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஐந்து ஒருதின போட்டிகள் ஆடுவதற்காக  வந்திருக்கிறார்கள்.  ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டு பெரிய அணிகளும்  ஒருநாள் போட்டியில் மோதியிருக்கின்றன. ரிசல்ட் என்ன? 

செஞ்சூரியன் பார்க் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக முதல் ஒருநாள் போட்டி  நடந்தது. தென் ஆப்பிரிக்க  அணியின்  சூப்பர் ஸ்டார்  டிவில்லியர்ஸ் காயம் காரணமாக விலக, அம்லாவும் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கபட, கேப்டன் பதவியை ஏற்றார் ஃபாப் டூ பிளசிஸ். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், மாக்ஸ்வெல், ஹாசில்வுட் ஆகிய நட்சத்திர வீரர்கள் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கே சேர்க்கப்படவில்லை. 

டாஸ் வென்ற  கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ்  சேஸிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. முதல் ஓவரை ஸ்டெயின் வீச மூன்று ரன்கள் வந்தது. இரண்டாவது ஓவரை இளம் பவுலர் ரபாடா வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் இரண்டு அட்டகாசமான பவுண்டரி அடித்தார் வார்னர். ஓவருக்கு சராசரியாக ஆறு  ரன்களுக்கு மேல் விறுவிறுவென சேர்த்தது  ஆஸி. ஆனால் பத்தாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வார்னர் நடையை  கட்டினார்.  அடுத்த ஓவரை அனுபவமற்ற பவுலர்  ஃபெலுக்வாயோ வீச, பதினாறு ரன்கள் சாத்தினார் ஆரோன் பிஞ்ச். ஆனால் தன்னுடைய இரண்டாவது ஓவரிலேயே பழி தீர்த்தார் ஃபெலுக்வாயோ. ஆரோன் விக்கெட் மட்டுமில்லாமல் ஆஸி அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும், அதே ஓவரில்  வீழ்த்தினார். 

 

 

மிட்சேல் மார்ஷ், டிராவிஸ்  ஹெட், மாத்யூ வேட் கொஞ்சம் தாக்குப்போக்கு காட்டினாலும் அவசர அவசரமாக  ரன் குவிக்க முயன்று அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அப்போது அணியின் ஸ்கொர் 29 ஓவரில் 196/6.  களத்தில் ஜார்ஜ் பெய்லியும், பவுலர் ஹாஸ்டிங்கும் இருந்தனர். ஆஸி 250  ரன்களை எடுப்பதற்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும் என்ற நிலை உருவான போது, 'நாங்க வேற மாதிரி' என ஆட்டம் காட்டியது பெய்லி -ஹாஸ்டிங்ஸ் இணை. 

விக்கெட் விழக்கூடாது என்பதில்  மிகுந்த கவனம் செலுத்தியது இந்த ஜோடி, நேரம் செல்லச்  செல்ல இருவரும் விளாச ஆஸி ஸ்கோர் எகிறியது. 45 ஓவர்களில் 271 ரன் எடுத்திருந்தபோது, ஹாஸ்டிங்ஸ் 51 ரன்னில் அவுட்டானார். அதன் பின்னர் விக்கெட் வீழ்ச்சி தொடர, 50 ஓவரில் 294/9 எடுத்தது ஆஸ்திரேலியா. 

295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு  களம் இறங்கியது தென்னாபிரிக்கா. விக்கெட் கீப்பர் டீ காக்குடன் இன்னிங்ஸை தொடங்கினார் ரிலே ரஸவ். வழக்கமாக மெதுவாக இன்னிங்ஸை துவக்கி, நேரம் செல்லச் செல்ல டாப் கியர் எடுப்பது தட்டுவது தான் தென் ஆப்பிரிக்காவின் வழக்கம். ஆனால் டீக்காக நேற்று வேறு முடிவோடு களமிறங்கினார். இறங்கிச் சாத்திவிட்டு மேட்சை முடித்துவிட்டு விரைவில் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டார் போல. 

மிட் ஆஃப், டீப் பாயிண்ட், கவர் பாயிண்ட் என கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்ஸர்களையும், பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். தன் பங்குக்கு ரிலே ரஸவ்வும் போட்டி போட்டு ரன் குவிக்க, தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் தாறு மாறாக எகிறியது. 17 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 145 ரன்களை எடுத்திருந்த போது முதல் விக்கெட்டாக வெளியேறார் ரஸவ். ரஸவ் வெளியேறிய அடுத்த பதினைந்து நிமிடங்களிளிலேயே  74 பந்தில் சதமடித்து அசத்தினார் டி காக்.

சதத்தை தொட்ட பிறகு ஜெட் வேகத்தில் ரன் குவிக்க ஆரம்பித்தார் டிகாக். அவர் ஆடிய விதத்தை பார்க்கும்போது இது ஒரு நாள் போட்டியா இல்லை டி20 போட்டியா என ரசிகர்களுக்கே குழப்பம் வந்திருக்கும். சதத்துக்கு பிறகு அடுத்த 39 பந்துகளில் 78 ரன்கள் குவித்து மிரள வைத்தார். ஒருவழியாக டி காக் 178 ரன்னில் அவுட்டாக, ஆஸி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் 14 பந்தில் மேட்சை முடித்து ஆஸிக்கு குட்பை சொன்னது டேவிட் மில்லர்- பெஹர்தீன் இணை. வெறும் 36.2 ஓவரில் 294 ரன்களை சேஸ் செய்து ஆஸியை அலற விட்டது தென்னாபிரிக்கா. நேற்றைய போட்டியை பார்க்கும் போது பலருக்கும் இன்றுவரை நம்பர் 1 சிறந்த சேஸிங் மேட்ச் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆஸ்திரேலியாவின் 434 ரன்களை தென்னாபிரிக்கா சேஸ் செய்த மேட்ச் நியாபகத்துக்கு வந்தது. இதனை நெட்டிசன்கள் ஹேஷ் டேக் உருவாக்கி நியாபகங்களை பகிர்ந்து கொண்டனர்.

113 பந்தில் 16 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் விளாசி 178 ரன்களை குவித்த டி- காக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  டி- காக்கிற்கு இரண்டு வாரம் முன்பு தான் அவரது காதலியோடு திருமணம் நடந்தது என்பது கூடுதல் தகவல்." மேரேஜ் ஆன பிறகு எனது கேரியரில் இதுவரை முன்னேற்றம் தான், இன்னும் தடம் புரளவில்லை . மேரேஜ் நல்ல விஷயம் தான் போல " என விருது வாங்கும்போது சிரித்துக் கொண்டே கேலியாகச் சொன்னார் டி-காக். ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அணியில் இல்லாத நிலையில் தென் ஆப்பிரிக்கா கடும்  தடுமாற்றத்துக்கு உள்ளாகும் என்றே பலர் கணித்திருந்தார்கள். ஆனால் அந்தக் குறையை போக்க 'டிவில்லியர்ஸ் ஆட்டம்' ஆடியிருக்கிறார் டி காக்.

குவிண்டன் டி காக்கிற்கு இப்போது தான் 23 வயது ஆகிறது. ஆனால் இதுவரை ஆடிய 65 போட்டிகளில் 11 சதம், ஏழு அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இந்தியா, யு.ஏ.இ, தென்னாபிரிக்கா, இலங்கை. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சதம் விளாசியிருக்கிறார்.எந்த நாட்டுக்கு எதிராக இருந்தாலும் சரி, எந்த பிட்சாக இருந்தாலும் சரி, எந்த ஃபார்மெட்டாக  இருந்தாலும் சரி , டி காக்கின் கனவு ஓட்டம் தொடர்கிறது. 

இந்த ஆண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டி,டி20 மூன்றிலும் சதம் கண்ட ஒரே தென்னாபிரிக்க வீரர் டி காக். குழந்தை முகம், எந்த பேட்டியாக இருந்தாலும் ஒற்றை வரி பதில், அணி வீரர்களுடன்  குறும்புச் சேட்டை இவை மட்டுமல்ல இந்த இன்னிங்ஸும் இனி டி காக் இன்ட்ரோவுக்கு உதவும். 

 

- பு.விவேக் ஆனந்த்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close