Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் மூன்றாவது சீசன், கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நார்த்ஈஸ்ட், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளின் பலம், பலவீனம் குறித்து அலசி வருகிறோம். அந்த வரிசையில் இன்று, மும்பை, நார்த் ஈஸ்ட் யுனைடட், டெல்லி டைனமோஸ் அணிகள் பற்றிய விவரம்.

இந்த மூன்று அணிகளுமே இதுவரை ஐ.எஸ்.எல் ஃபைனலுக்குள் நுழைந்ததில்லை. டெல்லி அணி மட்டுமே அரையிறுதி வரை சென்றுள்ளது. பல மாற்றங்களுடன் களம் காணும் இவ்வணிகளுக்கு இந்தத் தொடரை வெல்ல எந்த அளவிற்கு வாய்ப்பு உள்ளது? 


மும்பை சிட்டி FC


ஐ.பி.எல்லிற்கு ஆர்.சி.பி என்றால் ஐ.எஸ்.எல்லிற்கு மும்பை அணி. பெரிய பெரிய நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்பார்கள், தொடருக்கு முன்பாக அந்த அணிதான் பலமாக அணியாக தெரியும். ஆனால் கடைசியில் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே. முதலிரண்டு சீசன்களில் ஜுன்பெர்க், அனெல்கா போன்ற மாபெரும் வீரர்களை மார்க்கீ வீரர்களாகக் கொண்டிருந்த மும்பை அணி இம்முறை மேலும் ஒருபடி மேலே போய் உருகுவே ஜாம்பவான் டீகோ ஃபோர்லானை ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னாள் மார்க்கீ பிளேயர்களால் மும்பை அணியின் வெற்றிக்கு அணு அளவும் பலன் இல்லை. எனவே ஃபோர்லான் மீது தொடக்கத்திலேயே பிரஷர் எகிறியுள்ளது. 

2010 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்கள் (5) அடித்தது மட்டுமல்லாமல் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதையும் வென்று அசத்தியவர் ஃபோர்லான். புகழ்பெற்ற அணிகளான மான்செஸ்டர் யுனைடட் மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடியவர். கோல் கம்பத்திற்கு வெகுதொலைவிலிருந்து கோல் அடிப்பதில் வல்லவர். அவரது வருகை மும்பை அணிக்கு மட்டுமல்ல, இந்தத் தொடருக்கே ஒரு மிகப்பெரிய பிளஸ்.

ஃபோர்லானோடு சேர்ந்து முன்களத்தில் கலக்கக் காத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. கடந்த சீசனில் ஹாட்ரிக் அடித்து அசத்திய சேத்ரி இம்முறையும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். அனுபவம் வாய்ந்த ஃபோர்லான் சேத்ரி கூட்டணி நிச்சயம் எதிரணிக்கு சிம்மசொப்பனமாய் விளங்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும். AFC கோப்பை கால்பந்துத் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் சேத்ரி அணியோடு இணைவதற்கு ஓரிரு வாரங்கள் ஆகும். அதுவரை மும்பை அணி எதிரணிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் கேள்வியே. 

கடந்த சீசனில் தங்கள் அணிக்கு எதிராக ஹாட்ரிக் அடித்து அலறவைத்த இந்திய வீரர் ஹவோகிப்பை அலேக்காக அள்ளி வந்த்விட்டது மும்பை அணி. மேலும் கோல்கீப்பிங்கில் அசத்திய அம்ரிந்தர் சிங், ஜாகிசந்த் சிங், லால்ரிமுவானா போன்ற திறமையான இந்திய வீரர்களைக் கொண்டுள்ள மும்பை அணி, தங்களின் மோசமான பயணத்திற்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மிட் ஃபீல்டில் அசத்தும் சோனி நார்டே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க வல்லவர். அதுவும் மும்பை அணிக்கு மிகப்பெரிய பலம்.

மும்பையைப் பொறுத்தவரையில் அவர்களின் தலைவலியெல்லாம் தடுப்பாட்டம் தான். ஃபகுண்டா கர்டோசா, வால்டர் இபினெஸ் தவிர்த்து பெரும்பாலானோர் அனுபவம் இல்லாதவர்களே. கோல்கீப்பர்களும் இளம் வீரர்களாக இருப்பதால் தடுப்பாட்டக்காரர்களை எந்தளவு அவர்களால் ஒருங்கிணைக்க முடியும் என்பது சந்தேகம்தான். அதை சரிசெய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்போடும், மும்பை அணியை அரையிறுதிக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற கனவோடும் பயிற்சியாளராய்ப் பொறுப்பேற்றுள்ளார் அலெக்சாண்டர் கிமாரஸ்.

 துபாயில் அணியின் பயிற்சியை முடித்து வந்திருக்கும் கிமாரஸ், “அந்தக் கடும் வெயிலில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தேவையான நேரத்தில் தேவையான பங்களிப்பை அளித்தனர். அவர்களோடு இங்கு 35 நாட்களாய் இருக்கிறேன். இது அணியோடு ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்று தனது அணியைப் பற்றி பாசிடிவாகவே பேசியுள்ளார். அதற்கேற்ப பயிற்சியில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் திரும்பியுள்ளது முப்மை அணி. இதே ஃபார்மை தக்கவைத்தால் நிச்சயம் அரையிறுதிக்குள் நுழையலாம்.


பயிற்சியாளர் : அலெக்சாண்டர் கிமாரஸ்
மார்க்கீ பிளேயர் : டீகோ ஃபோர்லான்
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ஃபோர்லான், சோனி நார்டே, சாங்கோய்
இந்திய நம்பிக்கைகள் : சேத்ரி, ஹவோகிப், அம்ரிந்தர் சிங், ஜாகிசந்த் சிங்நார்த் ஈஸ்ட் யுனைடட்


மும்பை ஆர்.சி.பி என்றால், நார்த் ஈஸ்ட் அணி ஐ.எஸ்.எல்லின் ராஜஸ்தான் ராயல்சாக இருந்து வந்தது. அசாமின் கவுகாத்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், வடகிழக்கு இந்தியாவின் ஆறு மாநிலங்களக்குமே தாங்கள் பிரதிநிதிகள் என்று கூறினார் அணியின் உரிமையாளரான நடிகர் ஜான் ஆபிரகாம். அதுமட்டுமின்றி அந்த ஆறு மாநிலங்களைச் சார்ந்த இளம் வீரர்களுக்கே அணியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த இரண்டு சீசன்களிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் அணி வீரர்களை மட்டுமல்லாது தங்கள் ஃபார்முலாவையும் சேர்ந்து மாற்றியுள்ளனர். கடந்த சீசனில் விளையாடிய 6 வீரர்களை மட்டுமே இவர்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

நெலோ வெங்கடே எனும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை நியமித்து தங்கள் மாற்றத்தைத் தொடங்கியது அவ்வணி. ‘புரொஃபசர் என்று பயிற்சியாளர் வட்டத்தில் அழைக்கப்படும் இவர் அணியின் பாதையை மாற்றுவதற்கு சரியான சாய்ஸ். இந்திய அணியின் கோல்கீப்பரும், ‘ஸ்பைடர் மேன்’ என்று கால்பந்து உலகால் வர்ணிக்கப்படும் சுப்ரதா ராயையும் ஒப்பந்தம் செய்துள்ளது நார்த் ஈஸ்ட். நடுகளத்தில் அரணாய் விளங்கக்கூடிய டிடியர் சகோராவை கோவா அணியிலிருந்து மார்க்கீ பிளேயராக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரோடு மிட் ஃபீல்டில் கலக்க மோகன் பாகன் அணியின் துணைக்கேப்டன் காட்சுமி யுசாவும் காத்துக்கொண்டிருக்கிறார். 

முன்களத்தில் நார்த் ஈஸ்டின் நம்பிக்கை நாயகனான இளம் வீரர் நிகோலஸ் வெலசையே அணி இம்முறையும் சார்ந்துள்ளது. அவரோடு இணைந்து கோல்களை அடுக்க, உருகுவேயின் அல்ஃபாரோ, சாஷா அனேஃப் இணையையும் இணைத்துள்ளனர். நிர்மல் சேத்ரி, சௌவிக் கோஷ், குருங் போன்ற இளைஞர்கள் அசத்தக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் வகையில் தடுப்பாட்டத்தில் ஒரு பெரும் புள்ளி இல்லை. இது நார்த் ஈஸ்ட் அணிக்கு பின்னடைவாக அமையலாம். 

அணியின் கோர் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது. அனைவரும் தரமான வீரர்கள் என்றாலும், மேட்ச் வின்னர் என்று சொல்லுமளவிற்கு பெரிய வீரர் யாரும் இல்லை. புதிய பயிற்சியாளர், புதிய வீரர்கள் செட் ஆவதற்கு எப்படியும் சில காலம் ஆகும். இவையெல்லாம் ஸ்ட்ரைக் ஆனால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும்.


பயிற்சியாளர் : நெலோ வெங்கடே
மார்க்கீ பிளேயர் : டிடியர் சகோரா
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : வெலெஸ், அல்ஃபாரோ, யூசா
இந்திய நம்பிக்கைகள் : சுப்ரதா ராய், குருங், ஃபனாய்டெல்லி டைனமோஸ்


பார்சிலோனா அணிக்காக விளையாடியவரான 39 வயது சம்ப்ரோட்டாவை ராபர்டோ கார்லோசின் இடத்தில் உட்கார வைத்துள்ளது டைனமோஸ் அணி. கடந்த சீசன் அரையிறுதியில் கோவா அணியிடம் தோற்று ஃபைனல் வாய்ப்பை இழந்த அணி, இம்முறை சீரமைக்கப்பட்டு புதிய தோற்றத்தோடு களம் காண்கிறது. அணியிலிருக்கும் 25 வீரர்களில் 14 பேர் ஐ.எஸ்.எல் தொடருக்குப் புதியவர்கள். இத்தொடரில் விளையாடிய பரீட்சையம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு டெல்லி அணி எப்படி கரை சேரப்போகிறது என்பதுதான் கேள்வியே.

இரண்டாவது சீசனில் 8 அசிஸ்டுகள் செய்து அசத்திய மலௌடா தான் டெல்லி அணியின் மார்க்கீ பிளேயர். செல்சி அணிக்கு விளையாடிய இவர், ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வல்லவர். இவர் மட்டுமல்லாது தேவ்தாஸ், பெலிசாரி, சௌவிக் என அசத்தலான நடுகளம் அணிக்கு மிகப்பெரிய பலம். பிரேசிலைச் சேர்ந்தவரான பெலிசாரி, முதலிரு சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடி 7 கோல்கள் அடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டெல்லியின் நம்பிக்கை’ ரிச்சார்ட் கட்சேவோடு இணைந்து கலக்க, செனிகலின் இளம் வீரர் பட்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவின் ஸ்டார் பிளேயர் ராபின் சிங் அணியிலிருந்து வெளியேறியிருப்பது அணிக்குப் பெரும் இழப்பு. இந்திய வீரர் அர்ஜுன் டூடுவும் அவ்வப்போது அணிக்குக் கைகொடுக்கலாம். 

தடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் பிற அணிகளைப் போல் பலவீனமாக இல்லாமல் சற்று பலமாகவே உள்ளது டெல்லியின் பின்களம். இத்தொடரின் ஸ்டார் கோல்கீப்பரான டோனி டப்லஸ் எதிரணிக்கு நிச்சயம் குடைச்சல் தருவார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி லா லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களை வென்றவரான தடுப்பாட்டக்காரர் ரசோ அவ்வணிக்கு அனுபவம் சேர்க்கிறார். அவரோடு இணைந்து கலக்கக் காத்திருக்கிறார் இந்தியாவின் அனாஸ் எடதொடாகியா. இவர்கள் இணை டெல்லியின் பின்களத்திற்கு மிகப்பெரிய பலம். அவர்களோடு சேர்ந்து கானாவின் டேவிட் ஏடி, சிங்லென்சனா ஆகியோரும் தடுப்பாட்டத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றனர்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் கலக்கத் தேவையான திறமைகளைக் கொண்ட அணியாகத்தான் தெரிகிறது. ஆனால் அவர்களின் ‘கன்சிஸ்டென்சி’ தான் அவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது. முன்களம் மற்ற அணிகளை விடவும் சற்றே பலவீனமாகத் தெரிகிறது. அந்த அணியின் ஸ்ட்ரைக்கர்கள் ஃபார்மில் இருந்தால் நிச்சயம் அவர்கள் வெற்றிகளைக் குவிப்பார்கள். அதுமட்டுமின்றி மார்க்கீ வீரர் மலௌடாவையே மிகவும் சார்ந்திருப்பது அணிக்கு நெகடிவாக அமைந்துவிடும். அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கிறது.


பயிற்சியாளர் : சம்ப்ரொட்டா
மார்க்கீ பிளேயர் : மலௌடா
வெளிநாட்டு நட்சத்திரங்கள் : ரோசா, கட்சே, பெலிசாரி, மலௌடா
இந்திய நம்பிக்கைகள் : எடதொடிகா, தேவ்தாஸ், சௌவிக் சக்ரபோர்டி, டூடு

-மு.பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close