Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோப்பையை தக்கவைப்பார்களா ‘சூப்பர் மச்சான்ஸ்’!

  

 

 “ உலகமே நாங்க காலினு நினைச்சுது, ஆனா நாங்க ஒன்னா நின்னோம். ஃபைனல்ஸ் ஆடுறதுக்கு முன்னாடியே சாம்பியன் ஆனோம்” – கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள சோகத்தையும், அதற்கிடையே சென்னையின் FC கோப்பை வென்ற மகிழ்ச்சியான நினைவையும் நம் மனதிற்குள் கடத்துகிறது சென்னை அணியின் புரோமோ வீடியோ. மகிழ்ச்சி என்னும் உணர்வு மறையாமல் இருக்க வேண்டுமே. அதற்கு சென்னை அணி மீண்டும் மகுடம் சூட வேண்டுமே. நடக்குமா?
 
    “கோப்பையை வெல்வதைவிட, அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம் என்று நான் அறிவேன். கடந்த ஆண்டு மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்ட நிலையில் கோப்பையை வென்றோம். அது அவர்களின் துயரைத் துடைத்திருக்காது. ஆனாலும் அது அவர்களுக்காகத்தான். இம்முறையும் அவர்களுக்காக இம்முறையும் வெல்வோம்” என்று நம்பிக்கை விதைக்கிறார் அணியின் பயிற்சியாளர் மார்கோ மடரசி. 

எலானோ, மெண்டோசா இல்லை!

    சென்னை அணியின் மிகப்பெரிய பலமாய், அவர்களின் வெற்றிக்கு மாபெரும் உந்து சக்தியாய் விளங்கிய இருவர் மெண்டோசா மற்றும் எலானோ. அணியின் மார்க்கீ பிளேயராகவும் கேப்டனாகவும் இருந்து அசத்திய எலானோ இம்முறை ஐ.எஸ்.எல் தொடரில் பங்கேற்கவில்லை. முதல் சீசனில் 8 கோல்கள் அடித்து ‘கோல்டன் பூட்’ விருதை வென்று அசத்தினார். இரண்டாவது சீசனில் எலானோவின் ரோலை மெண்டோசா செய்து முடித்தார். 2015 சீசனில் 13 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை வென்றதோடு மட்டுமல்லாமல், அணி கோப்பை வெல்லவும் மிகப்பெரிய காரணமாய் அமைந்தார். அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் விளையாடி வருவதால் அவரும் இவ்வருடம் பங்கேற்கவில்லை. இந்த இரு பெரும் தலைகள் இல்லாமல் சென்னை அணி எப்படி ஜொலிக்கும்? இதுதான் அனைவரின் கேள்வியும்.

 

ஆரோக்கியமான மாற்றம் 

    இதை ஒரு வகையில் பாசிடிவாகவும் எடுத்துக்கொள்ளலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஐ.பி.எல்லின் கில்லி. தொடக்கத்தில் வெறுமனே ஹஸ்ஸி, அல்பீ, முரளி ஆகியோரை நம்பியிருந்த சமயம் சிறப்பாய் செயல்பட்ட போதும், அதுவும் ஒரு சாதாரன அணியாகவே பார்க்கப்பட்டது. எப்போது ரெய்னா, விஜய், அஷ்வின், ஜடேஜா, மோகித் என்று இந்தியர்களை மையமாக வைத்து செயல்படத் தொடங்கியதோ அப்போதுதான் மாபெரும் அணியாக உருவெடுத்தது. அப்படியான மாற்றத்தைத் தான் இப்போது சென்னையின் FC யில் பார்க்க முடிகிறது. இம்முறை அணியின் ‘கோர்’-ஆக விளங்குவது, ஜீஜே, தோய் சிங், பல்ஜித் சன்னி, மோகன் ராஜ், தனபால் கனேஷ் ஆகியோர் தான். இனி சென்னையின் FC ‘ஒன் மேன் டீம்’ கிடையாது. ஃபாரின் வீரர்களை மட்டுமே நம்பிக் களம் காணும் அணி கிடையாது. இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் மட்டுமின்றி, அடையாளம் தெரியாத 3 U-19 வீரர்களையும் அணியில் இணைத்துள்ளார் பயிற்சியாளர் மடரசி. சென்னை அணிக்கு மட்டுமல்லாமல் இந்திய கால்பந்திற்கும் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

    சூப்பர் கிங்ஸ்னா நம்ம பார்வை எப்பவுமே ரெய்னா, தோனி, அஷ்வின், மெக்குல்லம் மாதிரி சில பேர் மேல தான் இருக்கும். அப்படி சூப்பர் மச்சான்ஸ் டீம்ல யார் மீதெல்லாம் நாம கண்ணு வைக்கனும். ( கண்ணு வச்சுடாதீங்க…நம்ம பயக பெர்ஃபார்ம் பண்ணனும்ல..!)

ஜீஜே லால்பெக்லுவா

 

    இனி சென்னை அணிக்கு எல்லாமுமாக இருக்கப் போவது இந்த 25 வயது மிசோரம் இளைஞன் தான். இந்த வருடம் அவரது வாழ்வில் மறக்க முடியாததாகவே இருக்கும். இந்திய அணிக்காக கடைசி 7 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து பட்டையைக் கிளப்பிவருகிறார் ஜீஜே. கடந்த ஐ.எஸ்.எல் சீசனில் 6 கோல் அடித்த ஜீஜே தான், ஐ.எஸ்.எல் வரலாற்றில் அதிக கோல்கள் (10) அடித்த இந்திய வீரராவார். மெண்டோசாவும், எலானோவும் இல்லாத இடத்தில், இப்போது அணியின் முதுகுலெம்பு இவர்தான். இவர் மீது மடரசியும் அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அந்த நம்பிக்கையை ஜீஜே நிச்சயம் பொய்யாக்க மாட்டார். 

பெர்னார்ட் மெண்டி

 

    சென்னை அணியின் சுவர். சாதாரன சுவர் அல்ல. இதுவொரு பிரெஞ்சுப் பெருஞ்சுவர். 2015 சீசனில் குறைவான கோல்கள் அடித்த அணி சென்னை தான். அதற்கு மிகமுக்கிய காரணம் மெண்டி. அணியின் பின்களத்தை ஒருங்கிணைத்தது மட்டுமின்றி எலானோ இல்லாத நேரங்களில் கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தினார் இந்த முன்னாள் பி.எஸ்.ஜி அணி வீரர். ஐரோப்பிய கால்பந்துத் தொடர்களில் விளையாடிய அனுபவம் இருப்பதால், எதிரணி வீரர்களை எளிதில் மடக்கவிடுகிறார். அதுமட்டுமின்றி ஐ.எஸ்.எல் தொடரில் 3 கோல்களும் அடித்து அசத்தியுள்ளார். எதிரணி வீரர்கள் சென்னையின் கோல்கம்பத்தை நெருங்க வேண்டுமானால் மெண்டியைத் தாண்டியாக வேண்டும்.

ஜான் ஆர்னே ரீசே

 

    டெல்லி அணியிலிருந்து இப்போது சென்னை அணியின் மார்க்கீ பிளேயர் ஆகியிருக்கிறார் ரீசே. கிளப் போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் என இதுவரை சுமார் 650 போட்டிகளில் விளையாடிய அனுபவசாலி. லிவர்பூல், ரோமா உள்ளிட்ட முன்னனி அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முக்கியக் காரணமாகவும் விளங்கினார். இளைஞர்கள் நிறைந்த சென்னை அணிக்கு அவரின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். தடுப்பாட்டத்தில் இடதுபுறம் ஆடும் ரீசே மெண்டியோடு இணைந்து மாபெரும் அரணை உருவாக்கப்போகிறார்.

தனபால் கனேசன்

 

    சென்னையைச் சேர்ந்தவரான தனபால் கனேசன் பெரிய நட்சத்திரம் கிடையாது. ஆனால் நட்சத்திரமாய் ஜொலிக்கப் போவது நிச்சயம். 22 வயதுதான். இந்திய அணிக்காக 5 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியாற்று. இப்போது ஐ.எஸ்.எல் தொடரில் சர்வதேச வீரர்களோடு சேர்ந்து விளையாடும் அற்புத வாய்ப்பு. இனி தனபாலின் கால்பந்து வாழ்க்கை ஜெட் போல் உயரப்போகிறது. கால்பந்தில் மிகவும் கடினமான பொசிஷன் எதுவென்றால் ‘டிஃபன்சிவ் மிட்ஃபீல்டு’ தான். தடுப்பாட்டக்காரர் முதல் ஃபார்வார்டு வரை அனைத்து வீரர்களையும் கனெக்ட் செய்ய வேண்டும். ஒரு மெஷின் போல இரு கோல்கம்பங்கள் இடையே ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இந்த பொசிஷனில் விளையாடும் வீரர்கள், ‘கம்ப்ளீட் ஃபுட்பாலர்’களாக என்றும் புகழப்படுவார்கள். மெகலாலே, பிர்லோ, ராய் கீன், பேட்ரிக் வியரா என இவ்வகை வீரர்களைக் காண்பது அரிது. அந்த வகையில் உலக அரங்கில் தனபால் காலடி எடுத்து வைக்க இந்த ஐ.எஸ்.எல் ஒரு வாய்ப்பாய் இருக்கும் என்று நம்புவோம்.

நல்லப்பன் மோகன்ராஜ்

 

    கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு தமிழன். போன சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய மோகன்ராஜ் நாமக்கலைச் சேந்தவர். அணியின் மார்க்கீ வீரர் ரீசே விளையாடும் அதே ‘லெஃப்ட் பேக்’ பொசிஷன். அதனால் வாய்ப்புகள் மங்கக்கூடும். ஆனால் ரீசே நடுகளத்திலும் விளையாடக்கூடியவர் என்பதால் மோகன்ராஜுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும் சில சமயங்களில் மடரசி மார்க்கீ வீரர்களை பெஞ்சில் அமர வைத்ததுண்டு. எலானோவையே பல போட்டிகளில் அமர வைத்தார். ரீசேவுக்கும் அவர் ஓய்வு கொடுக்க நினைத்தால் மோகன்ராஜ் இன்னும் அதிக வாய்ப்புகள் பெறலாம். இந்திய அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய மோகன்ராஜ், தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட வேண்டும்.

    இது டிரெய்லர் மட்டும் தான். மெயின் பிக்சர் இன்னும் நீளும். கோல்கீப்பர் எடர், நம்பிக்கைக்குறிய மெஹ்ராஜுதீன் வடூ ஆகியோர் தடுப்பாட்டத்திற்கு மேலுமொரு வைரக்கற்கள். ஜெயேஷ் ரானே, டேவிட் சக்கி, டூடு ஒமாக்பேமி ஆகியோர் கொண்ட முன்களம் எந்த எதிரணியையும் போட்டுப் புரட்டியெடுத்துவிடும். மேனுவேல் பிலாசி, பெலுசோ போன்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் அறிமுக தொடரில் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்கள்.

    சென்னை அணியைப் பொறுத்தவரையில் மிகப்பிரகாசமாய் தெரியும் சூரியன் ஏதும் இல்லை. ஆனால் அருகில் சென்று பார்த்தால் சுட்டெரிக்கும் சிறிய வால் நட்சத்திரங்கள் ஏராளமாக உள்ளன. கோப்பையை தக்கவைப்பது என்பது மிகப்பெரிய சவால் தான். ஆனால் சென்னை என்ற பெயர் கொண்ட ஒரு அணிக்கு அதுவொன்றும் பெரிய விஷயமல்ல. லெட்ஸ் ஃபுட்பால் வித் சூப்பர் மச்சான்ஸ்!
        

மு.பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close