Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூஸிலாந்துக்கு அடி... பாகிஸ்தானுக்கு வலி... இந்தியா இப்ப நம்பர் 1


கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இதன்மூலம், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்தது.

கடந்த 1988 ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதே இல்லை. கொல்கத்தா ஈடர்ன் கார்டனில் நான்காவது இன்னிங்சில் அதிகபட்சமாக 325 ரன்கள் அடித்து பத்து ஆண்டுகளாகி விட்டது.  இந்த இரண்டு விஷயங்களும் நியூஸிலாந்து வீரர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 376 ரன்களை எட்ட முடிந்தவரை போராடிப் பார்த்தது. ம்ஹும் முடியவில்லை. 

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. கான்பூர் டெஸ்டில் இந்தியா வெற்றி. இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.  இதில் வென்றால், ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் - 1 என்ற சூழல்.

புஜாரா 87, ரஹானே 77, விக்கெட் கீப்பர் ரித்திமான் சாகா ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் அடிக்க, இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் யாரும் அரை சதம் அடிக்காததால், 204 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆனால், இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து பவுலர்களின் கை ஓங்கி இருந்தது. இதனால், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 227 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரோகித் மட்டும் 82 ரன்கள் அடித்திருந்தார். 


நான்காம்நாள் ஆட்டம் இன்று 12,068 ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது.  ரித்திமான் சாகா ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடிக்க, மற்றவர்கள் யாரும் நீண்ட நேரம் நிற்கவில்லை. முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 263 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், ஹென்றி, சான்ட்னர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்துக்கு 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஓபனிங் பேட்ஸ்மேன் டாம் லதாம் மட்டுமே அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்து போராடி பார்த்தார். ரெகுலர் கேப்டன் வில்லியம்சனுக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பேற்ற ராஸ் டெய்லர் 4 ரன்களில் அஸ்வினிடம் சிக்கினார். கப்டில், நிகோலஸ் தலா 24 ரன்களுடன் திருப்தி அடைந்தனர். லூக் ரோஞ்சி தன் பங்குக்கு 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் சொல்லும் படி ரன் அடிக்கவில்லை. 

கடைசி ஒரு மணி நேரத்தில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் விழிபிதுங்கி நின்றனர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஒருபுறம் சுழலில் மிரட்டுகிறார்கள் எனில், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் இருவரும் ரிவர்ஸ் ஸ்விங்கில் அச்சுறுத்துகின்றனர். விளைவு, நியூஸிலாந்து 56 ரன்களை எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது. 

முடிவில், இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் வென்றது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா, அஷ்வின், சமி மூவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் பாகிஸ்தானை விட அதிக புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. 

இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த ரித்திமான் சாகா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மூன்றாவது டெஸ்ட் வரும் 8-ம் தேதி இந்தூரில் நடக்க உள்ளது.

 

இந்தியாவின் வின்னிங் மொமன்ட்ஸைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

 

 


 - தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ