Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அக்.6-ம் தேதி, இந்திய கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ அதை லோதா கமிட்டி செய்யும்!”


டந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட்டின் நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டு வரவும், நிதி ஒதுக்கீடுகளை பராமரிக்கவும் உச்ச நீதிமன்றம் லோதா கமிட்டியை உருவாக்கியது. அன்று முதல் லோதா கமிட்டி மற்றும் பி.சி.சி.ஐ இடையே கசப்பான உறவே நிலவி வந்தது. இதற்கிடையே கமிட்டியின் பரிந்துரையின் பேரில் யெஸ் வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கிகளில் இருந்த பி.சி.சி.ஐ கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நடந்த பி.சி.சி.ஐ அவசர சந்திப்பில் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. 60 கோடியிலிருந்து 70 கோடியாக நிதி அதிகரிக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் சாம்பியன்ஸ் லீக் போட்டி நடக்காததால் ஸ்டார் நிறுவனம் கொடுத்த 1600 கொடி ரூபாயிலிருந்து 756 கோடியை மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு பி.சி.சி.ஐ ஒதுக்கியது. ஆனால் வழக்கமான நிர்வாகம் தவிர வேறு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்த முடிவு மீறுவதால், லோதா கமிட்டி இரண்டு வங்கிகளையும் பி.சி.சி.ஐயின் கணக்குகளை முடக்குமாறு கூறியுள்ளது.

கமிட்டியின் தலைவர் கோபால் சங்கர நாராயணன் வங்கிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியது,

"செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடந்த சந்திப்பில் பி.சி.சி.ஐ மாநில நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. வழக்கமான செயல்பாடு தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற உச்ச நீதிமன்ற விதிமுறை உங்களுக்கே தெரியும். ஆகஸ்ட் 31-ம் தேதி இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தது. ஆனால் பி.சி.சி.ஐயின் புதிய நிதி ஒதுக்கீடு முடிவு வழக்கமான செயல்பாட்டின் கீழ் வராது. மேலும் இந்த நிதி ஒதுக்கீடு அவசரமும் இல்லை. பி.சி.சி.ஐ உச்ச நீதிமன்ற முடிவையும் லோதா கமிட்டியின் விதிமுறைகளையும் மீறியுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி நடக்கவிருந்த கமிட்டி சந்திப்பை பி.சி.சி.ஐ மதிக்கவில்லை.

இந்த விதிமீறல் அக்டோபர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பி.சி.சி.ஐக்கு எந்த நிதியும் நீங்கள் அனுப்பக் கூடாது. மீறினால் உச்ச நீதிமன்ற விதி மீறலின் கீழ் உங்கள் மீதும் புகார் தொடுக்கப்படும்."

இதை பற்றி பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது,

"நிதி இல்லாமல் நாங்கள் எப்படி நியூஸிலாந்து தொடரை நடத்துவோம்? எங்களுக்கு தொடரை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை. நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பணம் கொடுக்கக் கூட நிதி எங்கள் வசம் இப்போது இல்லை"

இதற்கு பதிலளித்த லோதா கமிட்டி அதிகாரி,
"அக்டோபர் 6-ம் தேதி வரை காத்திருங்கள். அன்று இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த முடிவு சரியானதோ அந்த முடிவு எடுக்கப்படும்" என்றார்.

நியூஸிலாந்து தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியும் ஐந்து ஒரு நாள் போட்டியும் மீதம் இருக்கும் நிலையில் இந்த சர்ச்சை தொடரை பாதிக்கும் என்று தெரிகிறது.

பிசிசிஐயின் அனுராக் தாகூர் தற்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிசிசிஐ-யின் அனைத்து அக்கௌன்ட்டுகளையும் முடக்கியுள்ளனர்.இது மிகவும் துரதிர்ஷடவசமானது. எவ்விதமான போட்டிகளையும் நடத்த முடியாது " என அறிவித்துள்ளார்

 

 

- சக்கரராஜன் மதுசூதனன்

(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ