Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''கிரிக்கெட் தோல்வி, போர்க்கள வலி...மியான்தத் மீளவில்லை..!'' அனுராக் தாக்கூர் பதிலடி

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. இது குறித்துத் தகவலை மத்திய அரசு வெளியிட்டதும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, ''இரு தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் அரசுகள் பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும் '' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.  அதே வேளை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் கொதித்து எழுந்தார்.

மேலும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ''எங்கள் நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு குழந்தையும் கூட போராடத் தயாராக இருக்கிறது.. இது போன்ற வெத்துக் கூச்சல்களுக்கு நம் நாடு பணிந்து விடக் கூடாது '' என ஆக்ரோஷமாக கூறியிருந்தார். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் போது கவனமாக இருப்பார்கள்.ஆனால் மியான்தத் இதில் இருந்து விதி விலக்கானவர். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போதும் களத்தில் மிகுந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். அதே போன்றே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விஷயத்தில் மியான்தத் தெரிவித்த கருத்து பொறுப்பற்றதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ,  மியான்தத்தின் கருத்துக்கு பிசிசிஐத் தலைவரும் பாரதியஜனதா எம்.பியுமான அனுராக் தாக்கூர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், '' உலகக் கோப்பையில் இந்திய அணியை ஒரு முறை கூட பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியவில்லை. கடந்த 1965, 71ம் ஆண்டுகளில் நடந்த போரிலும் கார்கில் போரிலும் இந்தியாவிடம் போர்க்களத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. இந்த தோல்விகளில் இருந்து மியான்தத்தால் இப்போது வரை மீண்டு வர முடியவில்லை. அந்த விரக்தியிலும் இயலாமையிலும் மியான்தத் இப்படியெல்லாம் பேசுகிறார். தேவைப்பட்டால், கிரிக்கெட்டிலும் சரி போர்க்களத்திலும் சரி இந்தியா பாகிஸ்தானை வருங்காலத்திலும் துவைத்து எடுக்கும் '' என்றார் காட்டமாக.

பிசிசிஐ தலைவர்  நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமையும் விட்டு வைக்கவில்லை. '' முதலில் மியான்தத் தனது உறவினரான தாவூத் இப்ராஹிமை பொதுவெளிக்கு வரச் சொல்லவும். மியான்தத்துக்கு தாவூத் மீது  நம்பிக்கை இருந்தால், அவரை இந்தியாவுக்கு வர சொல்லட்டும். மியான்தத் பேச்சைக் கேட்டு தாவூத் இந்தியா வருகிறாரா என்று பார்ப்போம். மியான்தத் அதையெல்லாம் செய்ய மாட்டார் '' என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அனுராக் தாக்கூரின் பாகிஸ்தான் குறித்த கருத்துக்கு ஐ.சி.சி. முன்னாள் தலைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான ஈஷான் மேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''கிரிக்கெட்டைத் தவிர மற்ற விஷயங்களில் பாகிஸ்தானை விமர்சித்தது குறித்து அனுராக் தாக்கூரிடம் ஐ.சி.சி. விளக்கம் கேட்க வேண்டும்'. என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானுடன் இந்தியா  கிரிக்கெட் விளையாட வாய்ப்பே இல்லையென ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்ட நிலையில், சர்வதேச போட்டிகளிலும் இரு அணிகளையும் வேறு வேறு பிரிவுகளில் இடம் பெறுமாறு  பார்த்துக் கொள்ள  ஐ.சி.சி.க்கு,கோரிக்கை விடுத்துள்ளது.

-எம். குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close