Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கில்லர் மில்லர், ஹாட்ரிக் சதம் அடித்த பாக் பேட்ஸ்மேன்! நறுக் 4 பிட்ஸ்

தென்னாப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் இரண்டு  ஒருதின போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த போட்டியை ஜெயித்தே ஆக வேண்டும் என நேற்று நடந்த களமிறங்கியது ஆஸ்திரேலியா. டர்பனில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் இருந்தே அடித்து நொறுக்கி இன்னிங்ஸை ஆரம்பித்தனர் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள். பவுண்டரிக்கும் சிக்ஸருக்கமாக பந்துகள் பறந்து கொண்டே இருக்க ஸ்டெயின், ரபாடா திணறிப்போயினர். ஆரோன் பின்ச் 33 பந்தில் 54 ரன் எடுத்து அவுட்டானாலும், அதன் பிறகு களத்தில் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித், வார்னருடன் இணைந்து தென்னாபிரிக்க பவுலர்களை பிரித்து மேய்ந்தார்கள். இருவரும் சதம் அடித்து அவுட்டாயினர். கடைசி கட்டத்தில் டிராவிஸ் ஹெட், விக்கெட் கீப்பர் மாத்யூ இருவரும் அதிரடி ஆட்டம் ஆட, ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 371 ரன்களை குவித்தது. நேற்றைய தினம் ஸ்டெயினுக்கு மிக மோசமாக அமைந்தது இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் பத்து ஓவரில் 96 ரன்கள் வாரி இறைத்தார். 

டர்பனில்  ஒருதின போட்டிகளில் இவ்வளவு  ரன்களை ஒரு அணி குவிப்பது இதுவே முதல் முறை என்பதால், ஆஸ்திரேலியா எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என தெம்புடன் பவுலிங்கை தொடங்கியது. ஹாஷிம் அம்லா ஆரம்பம் முதலே அதிரடி காட்ட, அவரது பேட்டில் பட்ட 30 பந்துகளில் 9 பந்துகள் பவுண்டரியை நோக்கி ஓடின. ஆஸ்திரேலியாவை போலவே நல்ல ஓப்பனிங் தென்னாப்பிரிக்காவுக்கும் கிடைத்தது. அதன்பிறகு டு பிளசிஸ், ரஸவ், டுமினி ஆகியோர் அதிக நேரம் களத்தில் நிற்கவில்லை. குவிண்டன் டி காக், 49 பந்தில் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். 217/5 விக்கெட்டுகள் இழந்து  தடுமாறியது தென்னாப்பிக்கா. அப்போது களத்தில் மில்லருடன், டெயிலெண்டர்கள் மட்டுமே  இருந்தனர். எப்படியும் போட்டி நமக்குத் தான் என நம்பிக்கையோடு பந்து வீசியது ஆஸி. ஆனால் வேற லெவல் ஆட்டம் ஒன்றை ஆடினார் மில்லர். 

மில்லரும், ஃபெலுக்வாயோவும் இணைந்து விக்கெட் விழாமல் அதே சமயம் அதிரடியாகவும் ஆட ஆரம்பித்தனர். ஆஸ்திரேலியா பக்கம் இருந்த போட்டி மெல்ல மெல்ல தென்னாபிரிக்கா பக்கம் சரியத் தொடங்கியது. இறுதியில் 49.2 ஓவரில் 372 ரன்களை சேஸ் செய்து மேட்ச்யும், தொடரையும் வென்றது தென்னாபிரிக்கா. ஃபெலுக்வாயோ 39 பந்தில் 42 ரன்னும், மில்லர் 79 பந்தில் 10 பவுண்டரி, ஆறு சிக்ஸர் உட்பட 118 ரன்னும் அடித்தனர். 'கில்லர்' மில்லரின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் இது மிக முக்கியமானது. போட்டி முடிந்த பின்னர்  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சொன்னது இது தான், " இந்த மண்ணில்  371 ரன்கள் எடுத்தது வரலாற்றுச் சாதனை புரிந்திருந்தோம், ஆனால் மில்லரிடம் தோற்றுவிட்டோம்". 

2.  வெஸ்ட் இண்டீஸ் அணி யு.ஏ.இ மண்ணில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட், மூன்று ஒருதின போட்டி, மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது வெஸ்ட் இண்டீஸ். உலகின் நம்பர் 1 அணி மற்றும் உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை மூன்று டி 20 போட்டியிலும் வீழ்த்தி அதிர்ச்சி தந்திருந்தது பாகிஸ்தான். இந்நிலையில் ஒருதின தொடரிலும் மூன்று போட்டியை வென்று வெஸ்ட் இண்டீசை கலங்கடித்திருக்கிறது  பாகிஸ்தான். 21 வயது பாபர் அஸாம் மூன்று ஒருதின போட்டியிலும் சதம் அடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இவ்வளவு குறைந்த வயதில் ஹாட்ரிக் சதம் எடுத்தது மட்டுமின்றி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருதின தொடரில் உலகில் வேறு எவரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் பாபர்.  மூன்றே போட்டிகளில் 360 ரன்கள் அடித்த முதல் வீரர் பாபர் அஸாம் மட்டும் தான். 

3.  இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருதின தொடருக்கான அணி இன்று  அறிவிக்கப்படுகிறது. அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் மற்றும், 2019 உலகக்கோப்பை ஆகியவற்றை கருத்தில்  கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. ஷிகர் தவானுக்கு பதில் ரஹானே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மணிஷ் பாண்டே, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு அணியில் இடமா கிடைக்குமா என்பது சஸ்பென்ஸாக உள்ளது. 

4.  கே.எல். ராகுல், ஷிகர்  தவான், இஷாந்த் ஷர்மாவை தொடர்ந்து புவனேஷ் குமாரும் இப்போது நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதுகு வலி காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மும்பை பவுலர் ஷர்துல் தாகூர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 24 வயதாகும் ஷர்துல் கடந்த ரஞ்சி சீஸனில் அபாரமாக பந்துவீசி 41 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷர்துல் சேர்க்கப்பட்டிருந்தாலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தூர் டெஸ்டிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

- ஆனந்த் 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ