Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவங்கதான் கபடி கில்லிகள்! #KabadiWorldCup

கை பிடி...கைபிடி ...கைபிடி என பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  பழந்தமிழர்கள் ஆரம்பித்து வைத்த விளையாட்டு கபடி.  இன்றைய நிலவரப்படி,  இந்தியாவில் கிரிக்கெட், கால்பந்துக்கு அடுத்தபடியாக வெறித்தன வளர்ச்சியில் இருப்பது கபடி தான். அக்டோபர் ஏழாம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை  சர்வதேச உலகக்கோப்பை  கபடித்தொடர்  குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடக்கிறது.

 சொந்த ஊர் பலம், பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி, ஸ்டார் ஸ்போர்ட்டிஸின்  லைவ் கவரேஜ் என இந்தியா முழுவதும் கபடி உலகக்கோப்பை களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. , அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட12 நாடுகள் மல்லுக்கட்டப்போகும் நிலையில், கவனிக்க வேண்டிய பிளேயர்கள் யார் யார் ? இந்த உலகக்கோப்பையில் என்ன ஸ்பெஷல் உள்ளிட்ட விறுவிறு ட்ரைலர் இங்கே. 

ஸ்டார் பிளேயர்ஸ் : -

1. ஜாங் குன் லீ -  தென் கொரியா 

உலகின் தி பெஸ்ட் ரெய்டர். தென் கொரியாவை விட இந்தியாவில் ஜாங் குன் லீ ரொம்பவே பிரபலம். இந்தியாவில்,  ப்ரோ கபடி ஆரம்பிக்கப்பட்ட போது முதன் முதலில்  சேர்த்துக்கொள்ளபப்ட்ட வெளிநாட்டு  வீரர் ஜாங். நான் கபடி ஆடப்போகிறேன் என ஜாங்  தனது பெற்றோர்களிடம் சொன்ன போது கடுமையாக்க கண்டித்திருக்கிறார்கள். கபடி ஒரு பிரபலமடையாத விளையாட்டு, அதை தேர்வு செய்யாதே என எல்லோரும் சேர்த்து வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் நான் கபடி தான் ஆடுவேன் என பல்கலைகழக கபடி கிளப்பில் சேர்ந்தார். ஜூடோ, டேக்வாண்டோ, மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் கபடியில் இறக்க, கபடி ஆடும்போது  இந்த பையன் ஏதோ ஏதோ பண்ணி ரெய்டுல நழுவிடறான்பா என மற்ற வீரர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.  விறுவிறு முன்னேற்றத்தில் இப்போது  தென் கொரியாவின் கபடி சூப்பர் ஸ்டாராகி விட்டார் ஜாங். இந்தியாவின் பெருமை மிகு ரெய்டர் அனுப்குமாருக்கும், கொரியாவின் நம்பர் 1 ரெய்டர் ஜாங் குன் லீக்கும் , இந்த உலகக்கோப்பையின் ரெய்டர் பாயிண்ட்ஸில் செம ரேஸ் காத்திருக்கிறது.

2. மீரஜ் ஷேக்  - ஈரான் : -

மீரஜுக்கு  இன்ட்ரோ கொடுத்தது ப்ரோ கபடி. இப்போது ஈரான் அணிக்கு கேப்டனாகி விட்டார். கபடியில் மீரஜூக்கு இளம் வயதில் ஆர்வம் இருந்தாலும், சர்வதேச அளவில் தன்னை திரும்பி  வைக்க என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தார். உள்ளூரில் செமத்தியான கபடி பிளேயர் என்றாலும் யாரும் கண்டுகொள்ள வில்லை. ப்ரோ  கபடியின் முதல் சீஸனில் எந்த அணியும் திரும்பிப்பார்க்க கூட இல்லை. ஆனால் அதே வருடம் ஈரானுக்கு மீரஜ் ஆடிய விதம் இங்கே உள்ளவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்த சீஸனில் நேரடியாக தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஆனார் 

மீரஜ் உலகின்  சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ரெய்டு போகச்சொன்னாலும் சரி, டிஃபன்ஸ் பண்ணச் சொன்னாலும் சரி கச்சிதமாக செய்வார்.  ஈரான் ஏன்  இந்தியாவிடம் மட்டும் அடிக்கடி தோற்றுவிடுகிறது என எப்போதும் யோசிப்பேன். இந்தியா வந்த பிறகு அதற்கான விடை கண்டுபிடித்து விட்டேன். கபடியில்  விவேகத்தை காட்டிலும் அக்ரஸிவ் மனப்பான்மை இந்திய வீரர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதை நானும் கத்துக்கொண்டேன். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை ஜெயித்து காட்டுவோம் என முஷ்டி முறுக்கியுள்ளார் மீரஜ்.

3. ராகுல் சவுதாரி - இந்தியா 

இந்தியாவில் எக்கச்சக்க பெண் ரசிகைகள் ராகுல் சவுதாரிக்கு உண்டு. உத்தர பிரதேசத்தில் உள்ள பிஜினார் என்ற கிராமத்தில் இருந்து வந்தவர் ராகுல். கிராமத்தில் உள்ள படங்களுடன் அடிக்கடி கபடி விளையாடச் சென்றுவிடுவார் . கபடி ஆடிக் கொண்டிருக்கும்போதே பெற்றோர்களிடம் இருந்து அடி விழும். ஒழுங்காக படிக்கிற வழியை பாரு, கபடி ஆடி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே என பெற்றோர்கள் அறிவுறுத்த, நான் கபடி தான் ஆடுவேன் என பிடிவாதம் பிடித்தார் ராகுல். நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க, சோத்தை போடுவது மட்டும் எங்களோட கடமை என சொல்லிவிட்டு  தண்ணி தெளித்துவிட்டார்கள் பெற்றோர்கள். பிடிவாதம் பிடித்த ராகுல் பெற்றோர்களிடம் சரியாக பேசுவதையே நிறுத்தி விட்டார். முழு கவனத்தையும் கபடியில் குவித்தார். வருடங்கள் உருண்டோட, மாவட்ட அணி, மாநில அணி என ராகுல் முன்னேறினார். 

கபடியை பொறுத்தவரை  தோனியின்  ஆட்டிடியூட் கொண்டவர் ராகுல். சாதாரணமாக  ரெய்டு செல்வதை விட அணி இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும் போது புள்ளிகளை குவித்து மேட்சை மாற்றும் மேட்ச் வின்னர். ராகுலுக்கு இது முதல் சர்வதேச உலகக்கோப்பை. எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது வரம். எந்தவொரு போட்டியிலும் தோற்காமல், அத்தனை போட்டியிலும் ஜெயித்து கோப்பையை மீண்டும் தக்க வைப்போம் என உறுதியோடு பேசுகிறார்.

சந்தீப் நர்வால் :-

இந்த வருடம் தான் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் கவனிக்க வேண்டிய வீரர்கள் பட்டியலில் சந்தீப் இடம் பெற்றிருப்பது கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கலாம். இந்திய அணியில் தற்போது நம்பர் ஒன் டிஃபண்டர் சந்தீப் தான்.  எதிரணி வீரர்கள் ரெய்டுக்கு வரும்போது சந்தீப்பின் உடும்புப்பிடியில் சிக்கினால் மீண்டு வருவது கஷ்டம். இதனாலேயே சந்தீப் அருகில் ரெய்டுக்கு செல்ல வேண்டுமென்றால் எதிரணி வீரர்கள் ஜெர்க் அடிக்கிறார்கள். படு வேகம், செம துல்லியம் இரண்டும் தான்  சந்தீப்பின் பிளஸ். சந்தீப்புக்கு 23 வயது தான் ஆகிறது. இந்திய அணிக்கு கிடைத்த சொத்து  சந்தீப், இந்த உலகக்கோப்பை முடிந்த பிறகு சந்தீப் வைரலாவார் என சர்டிபிக்கேட் தருகிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் பல்வான் சிங். 

சர்க்கிள் ஃபார்மெட் Vs  சர்வதேச ஃபார்மெட் .

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் கபடி உலகக்கோப்பை நடக்கிறது. 2003, 2007 ஆண்டுகளில் உலகக்கோப்பை நடந்தது. அதன் பின்னர் போதிய நிதி வசதி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு ஒன்பதாண்டுகளுக்கு பிறகு இப்பொது தான் நடத்தப்படுகிறது.

இடையில் 2010 -2014 வரை கபடி விளையாடும் நாடுகளை அழைத்து சர்க்கிள் ஃபார்மெட் முறையில் உலகக் கோப்பை நடத்தியது இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட இந்த தொடரை உலகக் கோப்பை என சொல்ல முடியாது என அறிவித்தது சர்வதேச கபடி சம்மேளனம். சர்க்கிள் ஃபார்மெட் என்பது வெட்ட வெளியில் புல் தரையில் நடக்கும், கிட்டத்தட்ட கால்வாசி கால்பந்து மைதானம் அளவுக்கு கபடி மைதானம் இருக்கும். அதில் விதிமுறைகள் வேறு. 

இந்த உலகக்கோப்பை  சர்வதேச ஃபார்மெட்டில் நடக்கிறது. ப்ரோ கபடி உள்ளிட்ட லீக் தொடர் நடப்பதும் இந்த ஃபார்மெட்டில் தான். இதில் நம்மூரில் விளையாடுவது ஒன்று செவ்வக வடிவில் மைதானம் இருக்கும். போனஸ் லைன், பல்க் லைன் என இரண்டு லைன்கள் இருக்கும். கபடி ரெய்டுக்கு வரும் வீரர் பல்க் லைனை நிச்சயம் தொட வேண்டும், போனஸ் லைனை தொட்டால் ஒரு பாயிண்ட் கிடைக்கும், கூடுதலாக எத்தனை வீரர்களை தொடுகிறோமோ அத்தனை பாயிண்டுகள் உண்டு. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஏழு வீரர்கள் களத்தில் இருக்கலாம். ஒரு ரெய்டுக்கு முப்பது நொடிகள்  தான் டைம். ரெய்டு  செல்லும்போது கபடி பாட வேண்டியது அவசியம். 

கபடி குரூப் :-

உலகக் கோப்பை தொடரில் ஆடவுள்ள 12 அணிகளும் இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளது.  

குரூப் ஏ - இந்தியா, வங்கதேசம், தென் கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. அர்ஜென்டினா 

குரூப் பி - ஈரான், தாய்லாந்து, ஜப்பான், அமேரிக்கா, போலாந்து, கென்யா

- பு.விவேக் ஆனந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close