Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தோல்வியிலிருந்து மீண்டு சாதித்த ஜிது ராய்!

ஒரு மாதம் முன்பு இந்திய விளையாட்டுத்துறையின் விருதுகள் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டன. மிகவும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது நால்வருக்கு வழங்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்ஷி மாலிக், இதயங்களை வென்ற தீபா கர்மாகரோடு இணைந்து, ஒலிம்பிக்கில் ஏமாற்றம் தந்தவராகக் கருதப்பட்ட ஜிது ராய்க்கும் அவ்விருது வழங்கப்பட்டது.

ஆம் பெரிதாக ஏமாற்றியவர்தான் ஜிது. ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகப்பெரிய பதக்கக்கனவாகக் கருதப்பட்டார். தங்கமகன் அபினவ் பிந்த்ரா மீது இருந்த எதிர்பார்ப்பைக் காட்டிலும் ஜிதுவின் மீது சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் பங்கேற்றவர் இரண்டு மெடல்கள் வெல்வார் என்றுகூட வல்லுநர்கள் கனவு கண்டனர். ஆனால் பிற இந்தியர்களைப் போல் தானும் பிரஷரின் பிடியில் சிக்கிச் சொதப்பினார். 10 மீ ஏர் பிஸ்டலில் 8-வது இடமும், 50 மீ பிஸ்டலில் 12-வது இடமுமே பிடித்தார். ஆனாலும் அந்த உயரிய விருது வழங்கப்பட்டதன் காரணம் என்ன? அனைவர் மனதிலும் ஒரு கோவமான கேள்வி….

ஜிது ஒன்றும் தேசியப் போட்டிகளில் மட்டும் சோபிக்கும் சாதாரண வீரர் கிடையாது. 2014-ம் ஆண்டு ஆசியப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கம், உலகக்கோப்பைப் போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளிகள், 2014 வோர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2015 உலகக்கோப்பையில் ஒரு வெண்கலம், 2016 உலகக்கோப்பையில் ஒரு வெள்ளி என பதக்கங்கள், அரசியல்வாதியின் கழுத்தில் விழும் மாலையைப் போல் ஜிதுவிற்கு விழுந்தவண்னம் இருந்தன. அவற்றையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு ஒலிம்பிக் என்னும் மிகப்பெரிய அரங்கினுள் நுழைந்தார். ஒரு இந்தியன் கூட கண்டுகொள்ளாத சமயங்களிலேயே விளையாடிப் பழகியவர் அல்லவா அவர். ஒலிம்பிக் சமயத்தில் மட்டுமே வாய்திறக்கும் நம்மூர் ஆர்வர்களின் எதிர்பார்ப்பு என்னும் பிரஷர் அனகோண்டாவைப் போல் அவரை விழுங்க, தடுமாறினார். இலக்கும் தவறியது, பதக்கமும் தவறியது. வழக்கம் போல் வசைகள். ஆனால் சிலசமயங்களில் திறமைகளை உதாசீனப்படுத்திவிட முடியாதே. உலகக்கோப்பையில் தோற்ற இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை வெல்வதை கொண்டாடத்தானே செய்கிறோம். அதுபோலத்தான் மற்ற விளையாட்டுகளும். ஒலிம்பிக்கில் வெல்வது மட்டுமே வெற்றி கிடையாது. ஆசியப்போட்டி, காமன்வெல்த், உலகக்கோப்பை, உலக சாம்பியன்ஷிப் என்று அனைத்திலும் அசத்தியிருக்கும் ஒரு திறமை நிச்சயம் போற்றக்கூடியதே. அதற்காகத்தான் ஜிதுவிற்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்கள்.

ஜிது, ஒலிம்பிக் தோல்வியில் மூழ்கிவிடவில்லை. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேல் ரத்னா விருதுக்கு அர்த்தம் சேர்க்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். இதோ இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை சேர்த்துவிட்டார் ஜிது ராய். வியாழக்கிழமை இத்தாலியில் நடைபெற்ற ISSF உலகக்கோப்பையில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் ஜிது ராய். உலகின் டாப் 10 வீரர்கள் மோதிய இறுதிப்போட்டியில் 188.8 புள்ளிகள் பெற்ற ஜிது, சீனாவின் வெய் பாங்கை விட 1.8 புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்று தங்கத்தைத் தவறவிட்டார்.

“ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு இப்போதுதான் போட்டியில் கலந்துகொள்கிறேன். ஒலிம்பிக்கில் எனது செயல்பாடு திருப்தியாக இல்லை. தேசிய சாதனையோடு பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என் பயிற்சிக்கு உதவிய ராணுவம், NRAI, OGQ அமைப்புகளுக்கு நன்றி” என்று ஜிது ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டில் திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன. அதற்கான தகுந்த மரியாதை கிடைக்கும்போது இன்னும் சீற்றத்தோடு அவை வெளிப்படுகின்றன. ஜிது அதற்கு மிகச்சிறந்த உதாரணம்! இன்னும் ஒலிம்பிக் தோல்வியையே கூறிக் கொண்டிருக்காமல், அதில் சோபித்தவர்களுக்கு மரியாதை செய்வோம். நிச்சயம் வெற்றிகள் வசப்படும்.

- பிரதீப் கிருஷ்ணா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close