Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஷ்வின் Vs ஹர்பஜன் பனிப்போர்..! புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை என்ன?

அஷ்வின் மீது ஹர்பஜன் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பதாக அனல் கக்கும் விமர்சனங்களை  ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் தெரிவித்து  வருகிறார்கள். இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் வைத்தார் ஹர்பஜன் சிங்." ஒரு பந்து கூட இன்னும் வீசப்படவில்லை, ஆனால் இரண்டு நாள் பிட்ச் போல காட்சியளிக்கிறது. என்னுடைய கணிப்புப்படி மூன்றரை நாட்களைத் தாண்டி மேட்ச் செல்லாது" என விமர்சித்திருந்தார் ஹர்பஜன்.

இதற்கு டிவிட்டரில் கடும் பதிலடி கொடுத்தார்கள் நெட்டிசன்ஸ். குறிப்பாக நீங்கள் இந்திய அணிக்கு ஆடும்போது மட்டும் பிட்ச் எப்படி இருந்தது என்ற ரீதியிலான விமர்சனங்கள் தொடர்ந்தன. இந்நிலையில்  ஒரு ரசிகர் " 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஒன்றரை நாள் டெஸ்ட் போட்டியையும், 2008 தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியும் நினைவு கூர்ந்தார். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் அபாரமாக பந்து வீசி எதிரணியை திக்குமுக்காடச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு பதிலளித்த ஹர்பஜன், இப்போதைய  பிட்ச்கள் போல இருந்தால், நானும், கும்ளேவும் இன்னும் எக்கச்சக்க விக்கெட்களை  வீழ்த்தியிருப்போம் என  டிவிட் செய்தார்.  ஹர்பஜன் சொன்னது போலவே மூன்றரை நாளில் டெஸ்ட் போட்டி முடியாவிட்டாலும், நான்காவது நாளின் கடைசி ஓவரில் டெஸ்ட் போட்டி முடிந்தது . ஆக, ஹர்பஜன் சரியாகத்தானே கணித்திருக்கிறார்  என்ற விமர்சனமும் எழுந்தது. 

இந்நிலையில் நேற்றைய தினம் மேட்ச்  முடிந்த பிறகு விராட் கோஹ்லியிடம் பிட்ச் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. கடுப்பான கோஹ்லி, "டர்னிங் பிட்ச்கள் என்றாலும் கூட ஒழுங்காக பந்து வீசினால் மட்டும் தான் விக்கெட்டுகள்  கைப்பற்ற முடியும். இந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க இந்தியா திணறியதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்தியா அந்த போட்டியில் தோற்றது. அப்போது நியூசிலாந்து அணியில் இருந்த அதே பவுலர்கள் இப்போதைய டெஸ்ட் தொடரிலும் இருக்கிறார்கள். இப்போது ஏன் அப்படி பந்துவீசவில்லை? எந்த பிட்ச்சாக இருந்தாலும் ஒழுங்காக பந்து வீசினால் தான்  விக்கெட் கிடைக்கும், அதற்கு பின்னர் கடுமையான உழைப்பு இருக்கிறது. எங்களது முழு உழைப்பையும் கொட்டி தான் இரண்டு  டெஸ்ட் போட்டிகளை நான்கு நாளில் முடித்திருக்கிறோம்" என கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினார் கோஹ்லி.

ஹர்பஜனை ஓரம்கட்டிவிட்டு தற்போது இந்தியாவில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக இருப்பது அஷ்வின்  தான். ஹர்பஜனுக்கு அணியில் இடம் கிடைப்பதே கேள்விக்குறியாகி விட்டது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஹர்பஜனும் ஒருவர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அஷ்வின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அத்தனை அணிகளும், அத்தனை டாப் பேட்ஸ்மேன்களும் அஷ்வினை கண்டு அலறுகிறார்கள். சங்கக்காரா, டிவில்லியர்ஸ், டு பிளசிஸ், அம்லா, சாமுவேல், வில்லியம்சன் என மிகச்சிறப்பான பேட்ஸ்மேன்களுக்கு  கடும் சவால் தந்திருக்கிறார் அஷ்வின். இந்த தொடரில் உச்சக்கட்டமாக மூன்றே டெஸ்ட்  போட்டிகளில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி மலைக்க வைத்திருக்கிறார். 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை அஷ்வின், ஹர்பஜன் இருவரில் யார் எப்படி பந்து வீசியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள  படத்தை கிளிக்கி ஜூம் செய்து பார்க்கவும்.

 

2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  கொல்கத்தா டெஸ்டில் ஹர்பஜன் எடுத்த 13 விக்கெட்டுகளும், அதற்கடுத்த சென்னை டெஸ்டில் தனியொருவனாக 15 விக்கெட்டுகளை ஹர்பஜன் வீழ்த்தியதையும் எவராலும் மறக்கவே முடியாது. ஹைடன், பாண்டிங், கில்கிறிஸ்ட் ஆகிய மூன்று பேரை சர்வதேச போட்டிகளில் அதிக முறை  அவுட் செய்தது ஹர்பஜன் தான். பாண்டிங், ஹெய்டனை  தலா 13 முறையும், கில்கிறிஸ்டை 11 முறையும் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் ஹர்பஜன். காலிஸ், ஸ்மித், டிவில்லையர்ஸ், கிப்ஸ் , ஹெய்டன், பாண்டிங், பெவன், கில்கிறிஸ்ட், ஜெயவர்த்தனே, அட்டப்பட்டு, ஜெயசூர்யா, லாரா, இன்சமாம் உல் ஹக், யூனிஸ்கான், ட்ரெஸ்கொதிக், ஸ்டிராஸ் என டெஸ்ட் போட்டியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கடுமையான சவால்களை தந்தவர் ஹர்பஜன் சிங். 

இப்போதைய தலைமுறையின்  சிறந்த பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்பவர் அஷ்வின். இருவருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கிறது, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலான வேகப்பந்துக்கு சாதகமான மைதானங்களில் விளையாடும்போது இருவருமே தொடர்ந்து திணறியிருக்கிறார்கள்.ஒரு சில இடங்களில் ஹர்பஜனை அஷ்வினும், இன்னும் சில இடங்களில் அஷ்வினை ஹர்பஜனும் முந்துகிறார்கள்.

 

 

அஷ்வின்  டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க ஆரம்பித்த பிறகு இந்தியா எட்டு டெஸ்ட் தொடரில் வென்றிருக்கிறது. இதில் ஏழு முறை தொடர் நாயகன் அஷ்வின் தான்.வெறும் பவுலர்  என்பதையும் தாண்டி அஷ்வின்  சிறந்த மேட்ச் வின்னரும் கூட. தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக அஷ்வின் இருக்கிறார், அதனை நிச்சயம் நாம் கொண்டாட வேண்டும். பேட்டிங்கில் சச்சினை பார்த்து அன்று ஒட்டுமொத்த உலகமும் அலறியது, இன்று அஷ்வினை கண்டு அத்தனை பேட்ஸ்மேன்களும் அரண்டு கிடக்கிறார்கள். நம்பர்கள் தாண்டி  ஹர்பஜன், அஷ்வின் இருவரும் சிறந்த பந்துவீச்சாளர்களே. 

 

 

 

- பு.விவேக் ஆனந்த்.

 

 

எடிட்டர் சாய்ஸ்