Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொந்த மண்ணில் சென்னை முதல் வெற்றி #ISL

 

 

 

கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். லீக் போட்டியில், அரை மணி நேரத்திலேயே 2 கோல் அடித்ததால், 2-0 என வெற்றி பெற்றது  சென்னையின் எஃப்.சி. இது சென்னை சொந்த மண்ணில் பதிவு செய்த முதல் வெற்றி. சென்னை நேரு மைதானத்தில் 18,213 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்.சி, கோவா அணிகள் மோதின.

சொந்த மண்ணில் நடந்த கடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் அணியில் மானாவரியாக மாற்றம் செய்திருந்தார் சென்னை கோச் மார்கோ மடாரசி. அனுபவ வீரர்களான மெண்டி, மோகன்ராஜ், ஜெஜே பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. மடாரசியின் இந்த மாற்றம் சரியென்பதை நிரூபிக்கும் வகையில் 15-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது சென்னை. லெஃப்ட் விங் திசையில் இருந்து ரஃபேல் அகஸ்டோ செட் செய்து கொடுத்ததை கோவா பின்களத்துக்கு போக்கு காட்டி அற்புதமாக கோல் அடித்தார் ஹான்ஸ் முல்டர். அரங்கம் ஆர்ப்பரிக்க, சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த சிறிது நேரத்தில் சென்னை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றிருந்த ரைட் பேக் மெஹ்ரஜூதின் வாடூ யதார்த்தமாக இலக்கை நோக்கி அடித்த ஷாட், கோவா பின்கள வீரர் ரஃபேல் டுமாஸ் தலையில் பட்டு வலைக்குள் புகுந்த்து. ஆக, 26-வது நிமிடத்திலேயே ஆட்டத்தின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது. இது கோல் என்பதை வாடூவால் நம்ப முடியவில்லை. சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடி வந்து பெஞ்சில் இருந்த வீரர்களை கட்டி அணைத்தார். அரை மணி நேரத்துக்குள் 2 கோல்களுடன் சென்னை முன்னிலை பெற்றது. மடாரசி மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரங்கமும் ஹேப்பி.

இடைப்பட்ட நேரத்தில் கோவா இலக்கை நோக்கி ஒரு ஷாட்கூட அடிக்கவில்லை. முதல் பாதி முடிவில் சென்னை 2-0 என கெத்தாக முன்னிலை பெற்றது. இந்த டெம்போவை அப்படியே மெயின்டன் செய்தால் போதும் என்ற மனநிலையில் இரண்டாவது பாதியில் சென்னை களம்புகுந்தது. கோவா தரப்பில் நிலைமை தலைகீழ்.

இரண்டாவது பாதியிலும் சென்னையின் கையே ஓங்கியிருந்தது. 57-வது நிமிடத்தில் டேவிட் சூச்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் கோவா அணிக்கு கிடைத்த வாய்ப்புகளை சென்னை டிஃபண்டர்ஸ் உடனடியாக கிளியர் செய்தனர். ஒரு கட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சிக்காததால் ஆட்டம் டல்லானது. இருந்தாலும் 77-வது நிமிடத்தில் ரஃபேல் அகஸ்டோ கொடுத்த பாஸை டூடூ, முல்டருக்கு கொடுக்க, அவர் பக்காவாக ரைட் விங்கில் இருந்த பல்ஜித் சஹ்னிக்கு செட் செய்தார். ஆனால், அவர் அதை வலைக்கு வெளியே அடித்து வீணடித்தார். ஒரு சான்ஸ் கிரியேட் செய்த விதத்துக்காக கைதட்டி அப்ரிசியேட் செய்தனர் சென்னை ரசிகர்கள். ஆனால் கோவா தரப்பில் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் சென்னை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடந்த சீசன் ஃபைனலில் தங்கள் மண்ணில் சென்னையிடம் தோல்வியடைந்ததற்கு பழி தீர்க்க நினைத்த கோவா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேநேரத்தில் ஒரு வழியாக சென்னை சொந்த மண்ணில் வெற்றி முத்திரையைப் பதித்தது.

 

- தா.ரமேஷ்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ