Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நம்பர் -1 மட்டும் போதுமா? மைல்ஸ் டு கோ கோஹ்லி டீம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மீண்டும் நம்பர் - 1. இது இந்திய டெஸ்ட் வரலாற்றில் உன்னத தருணம். அனில் கும்ப்ளேவிடம் இருந்து கேப்டன்சியை வாங்கிய பின், 2009ல் முதன்முதலாக இந்தியாவை டெஸ்ட் அரங்கில் நம்பர் -1 அணியாக மாற்றி இருந்தார் தோனி. இந்த முறை விராட் கோஹ்லி.  

கோஹ்லி கேப்டன்சியில் இளம் இந்திய அணி எழுச்சி என நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்,  ‛நல்லா படிக்கிற பசங்க வராத டைம்ல நடந்த எக்ஸாம்ல, ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குற மாதிரி,  இந்தியா நம்பர் - 1 வந்துருச்சு’ என்ற பேச்சும் அடிபடுகிறது. 

 ‛‛சொந்த மண் அல்லாத இடங்களில் நடக்கும் தொடரின் முடிவுகளைப் பொருத்தே, டெஸ்ட் நம்பர் -1 நியமிக்கப்பட வேண்டும்’ என, தென் ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் ட்விட்டரில் கொளுத்திப் போட்டிருந்தார். இந்தியா இனி ஆடப் போகும் டெஸ்ட் அனைத்துமே சொந்த மண்ணில் என்பதால், கொஞ்ச காலத்துக்கு இந்தியாவின் நம்பர் -1 இடத்தை யாரும் அசைக்க முடியாது. இதை மனதில் வைத்தே ஸ்மித் அப்படி 'பத்த' வைத்திருந்தார். யோசிக்க வேண்டிய விஷயமும் கூட. 


இதுஒருபுறம் இருக்க... தோனி தலைமையில் 2009ல் நம்பர் 1 , கோஹ்லி தலைமையில் தற்போது நம்பர் -1, இதில் எது பெஸ்ட் என இந்திய ரசிகர்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர்.  தோனி தன் கிரிக்கெட் வாழ்வின் அந்திம காலத்திலும், கோஹ்லி உச்சத்திலும் இருக்கும் இந்த சூழலில், இருவரின் கேப்டன்சியையும்  கம்பேர் செய்வது சரியல்ல. இருந்தாலும், எது பெஸ்ட் என  ஓட்டெடுப்பு நடத்தினால், தோனி தலைமையில் இந்தியா 2009ல் முதன்முதலாக நம்பர் -1 ஆனதுக்கே ஓட்டுகள் அதிகம் கிடைக்கும். 

நம்பர் -1 என்பது குறிப்பிட்ட காலத்துக்கு முதலிடத்தில் நீடிப்பது மட்டுமே அல்ல. அந்த நம்பர் -1 டீமில் இருந்து குறைந்தது 2 வீரர்களாவது வேர்ல்ட் லெவன் டீமுக்கு தேர்வு செய்யும் விதத்தில் இருக்க வேண்டும். அந்த வரிசையில் பார்த்தால், 2009 தோனி தலைமையிலான அணியில்  சேவாக், சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், விக்கெட் கீப்பருக்கு தோனி, பவுலிங்கில் ஜாகிர்கான், ஹர்பஜன் என ஆல்டைம் ஃபேவரைட் வீரர்கள் அதிகம். எப்போது ஆல் டைம் வேர்ல்ட் லெவனை தேர்வு செய்தாலும், குறைந்தது இதில் நான்கு வீரர்கள் இடம்பெறுவர்.


விராட் கோஹ்லி தவிர்த்து தற்போதுள்ள  அணியில் ஒரு வேர்ல்ட் கிளாஸ் பிளேயராவது இருக்கிறாரா என்றால், இல்லை என்பதுதானே நம் பதில்?  ஏன், விராட் கோஹ்லியும் கூட லிமிட்டெட் ஓவரில் இருக்கும் ஃபார்மை, டெஸ்ட் போட்டிகளுக்கு கன்வெர்ட் செய்வதில் இன்னமும் சிரமப்படுகிறார். கேப்டன்சி அவரது பேட்டிங் திறமையை நசுக்குகிறது என்பது வேறு சப்ஜெக்ட். கோஹ்லியின் நிலையே அப்படி எனில் ரஹானே, கே.எல்.ராகுல் பெயரை முன் வைத்தால், 'போங்க பாஸ் அந்தப் பக்கம்...' என கிண்டல் செய்வார்கள்தானே? பந்துவீச்சில் அஷ்வின் தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. அஷ்வினும் சப் கான்டினென்ட்டில்தான் விக்கெட் எடுப்பார் என, வேர்ல்ட் லெவனில் ரிஜக்ட் செய்யப்படலாம்.

வேர்ல்ட் லெவன் அணி எப்படி தீர்மானிக்கப்படுகிறது? தியரி சிம்பிள். ‛‛கபில்தேவ், சச்சின் இருக்கும்போது ,இங்க இருந்து ஒரு பிளயேர் போனா, அங்க இருக்குற ஒருத்தனை தூக்கிட்டு இவனை வச்சிக்கலாம்னு தோனுனாலே அவன் வேர்ல்ட் கிளாஸ் பிளேயர்னு சொல்லுவாங்க. அதான் கண்டிஷன்.  அதே மாதிரி ரகானோவால் ஆஸ்திரேலியாவிலோ, தென் ஆப்ரிக்காவிலோ ஒருத்தரை ரீப்ளேஸ் பண்ண முடியுமா?’’ என்கிறார் காலகாலமாக கிரிக்கெட்டை கவனிக்கும் ரசிகர் ஒருவர்.  அதுவும் சரிதான். 

அதேசமயம், கோஹ்லியின் கேப்டன்சியை அதற்குள் கணித்துவிட முடியாது. அவர் செல்ல வேண்டியது இன்னும் தூரம். இருந்தாலும், இந்த நம்பர் ஒன்னை பெரிதாக கொண்டாடிட முடியாது. காரணம், இப்போதைய சூழலில் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் இரண்டுமே டெஸ்டில் பலம் வாய்ந்த அணிகள் இல்லை. சொந்த மண்ணிலும், நமக்கு சாதகமான மண்ணிலும்தான் இந்தியா ஜெயிக்கிறதே தவிர, ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் அல்ல. தோனியின் கேப்டன்சியிலும் இது விதிவிலக்கல்ல. 

ஆஸ்திரேலிய ஆடுகங்கள்... என்றதும் ட்விட்டரில் வெளியான பதிவுதான் நினைவுக்கு வருகிறது. ''இந்தியாவோட ஆல் டைம் லெவனை வச்சும், ஆஸ்திரேலியாவுல நம்மால ஒரு டெஸ்ட் சீரிஸ் வின் பண்ண முடியாது!.'' இதுதான் அந்த யோசிக்க வைத்த ட்விட்.  இந்த பதிவை வெளியிட்ட முரளிக்கண்ணனிடம் விளக்கம் கேட்டோம். 

''டெஸ்ட் வெற்றி என்பதை எளிதான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், 20 விக்கெட் எடுப்பது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எனில் மூன்று டெஸ்ட்டில் வென்றாக வேண்டும். அப்படி ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று டெஸ்டிலும் தொடர்ச்சியாக 20 விக்கெட் எடுக்கவல்ல பவுலர்கள் நம்மிடம் இருக்கிறார்களா? இந்திய அணியின் ஆல் டைம் வெவனிலும்  கூட அப்படிப்பட்ட பவுலர்கள் இல்லை.  கபில்தேவ்,  ஜாகிர் கான், ஸ்ரீநாத் மூன்று பேரும் பவுலிங் போட்டாலுமே, அவர்களை நாம் ஆல் அவுட் செய்ய முடியுமா என்றால் அது சந்தேகமே'

ஆனால், பாகிஸ்தான் ஆல் டைம் லெவன் என்றால், அவர்கள் எளிதாக ஆஸ்திரேலியாவை ஜெயித்து விடுவார்கள். இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சாக்லைன் முஸ்டாக், இன்ஜமாம் உல் ஹக், அமீர் சோகலை் ஆகியோர் அடங்கிய அணி எனில், அவர்களால் விக்கெட்டும் எடுக்க முடியும். எவ்வளவு நேரமானாலும் பேட்டிங்கும் ஆடி விட முடியும். ஆனால் நம் பவுலர்களால்  அது முடியாது.  தென் ஆப்ரிக்கா ஆல் டைம் போனால் கூட ஜெயித்து விட முடியும்.  அங்கே டொனால்டு, ஸ்டெயின் என ஒரு பட்டாளம் இருக்கிறது'

அதே நேரத்தில், இங்கிலாந்தில் நாம் வென்று விடலாம். ஏனெனில் அங்கு ஸ்விங் கண்டிஷன்.  ஜாகிர், கபில்தேவ் இருவரும் ஒரு எண்டில் இருந்து போட்டாலே விக்கெட் எடுத்துடுலாம்.  ஆனால், ஆஸ்திரேலியாவில் அது சாத்தியமில்லை’’ என காரணங்களை அடுக்குகிறார் முரளிக்கண்ணன். 

‛‛அதனாலதான் சொல்றேன். இன்னும் கோஹ்லி தலைமையிலான அணி இன்னும் சவாலான டெஸ்ட் மேட்ச் ஆடவே இல்லை.  இன்னும் இந்த அணி தங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. தற்போதுள்ள அணி ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க ஆடுகளத்தில் டெஸ்ட் தொடரை ஜெயித்தால் அப்போது அப்ரிசியேட் பண்ணலாம். அதனால், இந்த நம்பர் -1 அந்தஸ்தை கொண்டாட முடியாது'' என முடித்தார்.

நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் தொடரை வெல்லுமா?
வெல்லும்
முடியாது
தொடரை வெல்லாவிட்டாலும், ஒரு மேட்ச் ஆவது ஜெயிக்கும்
நோ கமெண்ட்ஸ்
Poll Maker
 
 
 
 
 
 


- தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close