Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது இந்தியாவின் 900-வது ஒருநாள் போட்டி! #Throwback

ங்கிலேயர்கள் விட்டுச்சென்றதில் தபால், இரயிலுக்கு பிறகு இன்றளவும் நாம் போற்றிப் பாதுகாக்கும் விஷயம்னா அது இந்த கிரிக்கெட்தான். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் 900-வது ஒருநாள் போட்டி இது. இந்த சாதனையைச் செய்யும் முதல் அணி நாம் தான். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் (889 போட்டிகள்) பாகிஸ்தானும் உள்ளன (866 போட்டிகள்).

இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி:

கிரிக்கெட் வரலாற்றில் 1971 ல் முதன்முறையாக 60 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை ஜூலை 13 ,1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. எனினும் முதல் வெற்றியை அதே ஆண்டில் கிழக்கு ஆப்ரிக்க அணிக்கு எதிராக ருசித்தது.

முதல் உலகக்கோப்பை:

இந்தியா சிறந்த டெஸ்ட் அணியாக விளங்கிவந்தாலும் ஒருநாள் போட்டிகளில் சோபிக்கமுடியவில்லை.சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்ற வீரர்களின் தடுப்பாட்டம் ஒருநாள் போட்டிககளுக்கு ஒத்துவரவில்லை.80களின் தொடக்கத்தில் கபில்தேவ், வெங்சர்க்கார், ரவி சாஸ்த்திரி, அசாரூதின் என ஒரு இளம் படை உருவானது.1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் கபில்தேவ் தலைமையிலான இளம் அணி சாதித்தும் காட்டியது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கோப்பையை கைப்பற்றி.

முதல் ஒருநாள் கேப்டன்:

இந்திய ஒருநாள் அணிக்கு இதுவரை 23 வீரர்கள் தலைமை தாங்கியுள்ளனர். இந்தியாவின் முதல் கேப்டன் அஜீத் வடேகர் ஆவார்.கடைசியாக இந்த பட்டியலில் இணைந்துள்ளவர் ரகானே.ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் சிறந்த கேப்டன் நம் கேப்டன் கூல் தான்.இவர் தலைமை வகித்த 181 போட்டிகளில் 101 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.மேலும் இவர் தலைமையில் நம்ப டீம் 2011 உலகக்கோப்பையையும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஜெயிச்சதும் அனைவரும் தெரிஞ்ச விஷயமே.

சிறந்த பேட்ஸ்மேன்:

கவாஸ்கர் தொடங்கி கோலி வரை பல வீரர்கள் விளையாடினாலும் கூட தனித்து தெரியக்கூடிய ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். கங்குலி டிராவிட் சேவாக் போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தாலும் பல சாதனைகளை தன் வசமாக்கியவர். இவர் சாதனையை முறியடிக்க 10 வயசுல இருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தா தான் முடியும் போல. ஒருநாள் போட்டிகளின் அதிக ரன் ஸ்கோரர் இவர் தான்.16 வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்ச இவர் இதுவரை 463 போட்டிகளில் 18426 ரன்கள் குவித்துள்ளார். அதிக சதம் (49) அதிக அரைசதம் அதிக சிக்ஸர்கள் (195) அதிக பவுண்டரிகள் (2016) என எல்லா சாதனைக்கும் சொந்தக்காரர் இவர் தான். இவ்வளவு ஏன் அதிக டக் அவுட்டும்(20 முறை) இவர் தான்னா பாத்துக்கோங்களேன்.

சிறந்த பந்துவீச்சாளர்:

பிஷன் சிங் பேடி, கபில் தேவ், ஸ்ரீநாத் ஜாகீர் கான் என குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்கள் தான் நிலைத்துள்ளனர்.இந்தியா எந்த சூழ்நிலையிலும் சிறப்பான சூழல்பந்து வீச்சாளர்களை உருவாக்கத் தவறியதில்லை.அந்த வகையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அனில் கும்ளே.இவர் 269 போட்டிகளில் 337 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கும்ளே சாதனையை முறியடிக்க புதிதாக அஸ்வின் கிளம்பியுள்ளார்.

சிறந்த விக்கெட்கீப்பர்:

2006-ன் தொடக்கம் வரை இந்தியாவுக்கு ஒரு நிலையான விக்கெட்கீப்பர் அமையவே இல்லை. அப்பொழுது இந்திய அணியில் நுழைந்தவர் தான் அதிரடி வீரர் மகேந்திர சிங் தோனி. இவரோட அபரிமிதமான விக்கெட்கீப்பிங் திறமை எதிரணியை திணர வைத்தது. இவர் 275 போட்டிகளில் 344 பேரை அவுட் செய்துள்ளார். ஒரு பீல்டராக அதிக கேட்சுகளை பிடித்தவர் நம் முன்னாள் கேப்டன் அசாரூதின் (156 கேட்சுகள்) தான்.

மறக்கமுடியாத தருணங்கள்:

வாழ்க்கையில மட்டுமில்ல சில சமயங்களில் விளையாட்டில் கூட நெகிழவைக்கும் தருணங்கள் வருவதுண்டு.கபில்தேவ் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது; 1996 உலகக்கோப்பை அரைஇறுதியில் வினோத் காம்ப்ளி அழுதுக்கொண்டே பெவிலியனுக்கு திரும்பியது; சச்சினின் 200 ரன்கள்; ரோகித்தின் 264; தோனி சிக்ஸர் அடித்து உலகக்கோப்பையை வென்றது என பல தருனங்கள் உள்ளன. சச்சினின் சாதனையை தொடர கோலி இருக்கிறார். சேவாக்கின் அதிரடியை தொடர ரோகித் வந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

 

900 வது போட்டியில் வெற்றி கிடைக்குமா?
 

இந்திய அணி இதுவரை தான் விளையாடிய 899 போட்டிகளில் 399 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 39 போட்டிகளுக்கு முடிவு இல்லை 7 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.இலங்கை அணிக்கு எதிராக தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளோம் (83 வெற்றி). இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்த 418 ரன்கள் தான் இந்திய அணியின் அதிக ஸ்கோர். டெஸ்ட் போட்டியில் முதலிடம், 500 டெஸ்ட் போட்டிகள், தரவரிசையில் அஸ்வின் முதலிடம் என 2016 இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைத்துள்ளது. தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாய் உள்ளதாக கருதப்படுகிறது. நாளைய வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு வெற்றிக்கேப்டன் தோனி தலைமை தாங்குவதால் இந்தியா வெற்றி பெறும் என நம்பிக்கை அதிகரித்துள்ளது.

வீரர்கள் விபரம்:
 

இந்திய அணிக்காக இதுவரையில் 214 வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். நாளைய போட்டியில் விளையாடப் போகும் அதிர்ஷ்டசாலி வீரர்கள் இவங்கதானுங்கோ..,

தோனி, கோலி, ரோகித், ரகானே, மனீஷ் பாண்டே, ரெய்னா, பாண்டியா, அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, பம்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதர் ஜாதவ்.

- இரா.ஜெயக்குமார்
(மாணவ பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close