Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலி பாஸ்... தோனி ரிசல்ட் என்ன? #firstODIpreview


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது. அத்துடன் டெஸ்ட் ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் -1 இடத்தைப் பிடித்தது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் தர்மசாலாவில் இன்று மதியம் தொடங்குகிறது. இது இந்தியாவின் 900வது ஒருநாள் போட்டி. இதில் இந்தியா தோனி தலைமையில் களமிறங்குகிறது.  கோலி தலைமையிலான அணி டெஸ்டில், நம்பர் -1 இடத்தைப் பிடித்ததால், தற்போது தோனி மீது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் தரவரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திலும், நியூஸிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த தொடரை 4-1 என வென்றால் மட்டுமே இந்தியா மூன்றாவது இடம் பிடிக்க முடியும். வரலாறு மற்றும் புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்தியாவுக்கே சாதகமாக இருப்பதால், தொடரை வெல்வதில் சிரமம் இருக்காது. 

இதற்கு முன் 1988, 1995, 1999, 2010ல் இந்தியாவில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான நான்கு தொடர்களிலும் நியூஸிலாந்து தோல்வியே அடைந்துள்ளது. கடைசியாக 2010-ல் நடந்த தொடரில், இந்திய அணி ரெகுலர் வீரர்கள் இல்லாமல் கவுதம் கம்பீர் தலைமையில் களமிறங்கி 5-0 என தொடரை முழுமையாக வென்றது. ஆனால், பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் 18-11 என நியூஸிலாந்தின் கையே ஓங்கி உள்ளது.

இரு அணிகளும் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 46, நியூஸிலாந்து 41  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஐந்து போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. ஒரு போட்டி ‛டை’ ஆனது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஐந்தில் நான்கு போட்டிகளில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. 

தோனி மீண்டும் அணிக்குத் திரும்பி இருப்பது ஒருபுறம் உற்சாகம் அளிக்கும். ஆனால், எதிர்கால தொடரை கருத்தில் கொண்டு ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடஜோ, முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா ஏற்கெனவே காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர்.  அஷ்வின், ஜடேஜா இருவரும் இல்லாதது நிச்சயம் தோனிக்கு தலைவலியாக இருக்கும். ஏனெனில் சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் அஷ்வின் மட்டுமே 27 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். 


இந்த பவுலர்களுக்குப் பதிலாக ஜயந்த் யாதவ், அக்ஷர் படேல், தவல் குல்கர்னி வாய்ப்பு பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ‛ஏ’ தொடரில் ஹர்டிக் பாண்ட்யா பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளத்துக்கு ஏற்ப ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர் தேவை என்பதை மனதில் வைத்து அவர் பெயர் டிக் செய்யப்பட்டிருக்கலாம். அசத்தல் ஃபார்மில் இருக்கும் மணிஷ் பாண்டேவை சேர்த்தது நல்ல விஷயம். 

சாம்பியன்ஸ் லீக் இலக்கு

பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோலி, டெஸ்ட்டில் காட்டிய ஆட்டத்தை ஒன்டேயிலும் தொடர்வார். இது தோனிக்குத்தான் நெருக்கடியாக இருக்கும். ஏனெனில் தோனி 2015ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 92 ரன்கள் அடித்ததே சமீபத்திய அவரது பெஸ்ட் ஆட்டம்.  பெர்சனல் பெர்ஃபார்மன்ஸ் தவிர்த்து, வைரஸ் காய்ச்சல் காரணமாக சுரேஷ் ரெய்னா, கட்டை விரல் காயம் காரணமாக ஷிகர் தவன் விலகியிருப்பதால், பேட்டிங் லைன் அப்பை தீர்மானிக்கும் சிக்கலும் தோனிக்கு  உள்ளது.

சீனியர் வீரர்களுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க, இந்த தொடர் ஒரு நல்ல களம்.  ஏனெனில் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருப்பதால், அதற்குள் ஒரு நல்ல டீமை ஃபார்ம் செய்வது அவசியம். தற்போது அணியில் இருப்பவர்களில் ஜயந்த் யாதவ் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்தவர்கள். அதேநேரத்தில், சீனியர் வீரர்களும் போதிய அளவு விளையாடவில்லை என்பதும்  கவனிக்க வேண்டிய விஷயம். 2015 உலக கோப்பைக்குப் பின் இந்தியா 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஏழு வீரர்கள் மட்டுமே 12க்கும் மேற்பட்ட போட்டிகளில்  பங்கேற்றுள்ளனர். மற்ற வீரர்கள் அடிக்கடி ஓய்வில் இருந்துள்ளனர். 

அதேபோல, இன்னொரு புள்ளி விவரம் இந்திய அணிக்கு எதிராகவே உள்ளது. உலக கோப்பைக்குப் பின் இந்தியா பங்கேற்ற 19ல் ஒன்பது போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக பங்கேற்ற ஐந்தில் மூன்று தொடர்களில் தோல்வி. ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். அதனால், சொந்த மண்ணில் விளையாடுகிறோம், டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்து விட்டோம் என, மெதப்புடன் இருக்க முடியாது. 

டெஸ்ட் தொடரை இழந்ததால், ஒருநாள் தொடரை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி.  மிரட்டல் பவுலர் டிம் சவுதி, கோரி  ஆண்டர்சன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளது. 

அணிகள் விவரம்:

இந்தியா: தோனி (கேப்டன்), விராட் கோலி, ரகானே, ரோகித் ஷர்மா, மணிஷ் பாண்டே, ஜயந்த் யாதவ், அக்ஷர் படேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, கேடர் ஜாதவ், மன்தீப் சிங், அமித் மிஷ்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், ஹர்டிக் பாண்ட்யா.


நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், பிரேஸ்வெல், ஆன்டன் டேவ்சிச், மார்டின் கப்டில், டாம் லாதம், மாட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், லூக் ரோஞ்சி, மிச்செல் சான்ட்னர், சோதி, ராஸ் டெய்லர், வாட்லிங், டிம் சவுதி. 

இடம்: தர்மசாலா
நேரம்: மதியம் 1:30
டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ