Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்று அகதி… இன்று ஃபுட்பால் ஸ்டார்…!


காம்பியா – ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ஒரு பாவப்பட்ட தேசம். சர்வாதிகாரம் மற்றும் வறுமையின் பிடியில் அகப்பட்டு வாடும் தேசம். எச்.ஐ.வி, டைபாய்டு, ரேபிஸ் போன்ற நோய்களால் அடிக்கடி உயிரிழக்கும் மக்கள் என சராசரி வாழ்க்கை என்பது அங்கு கேள்விக்குறிதான். நல்லதோர் வாழ்க்கையைத் தேடிப் பலரும் பிற தேசங்களுக்கு அகதிகளாய்ப் போய் விடுகின்றனர். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் அகதியாய் தஞ்சம் அடைந்தவர் தான் ஓஸ்மான் மன்னே. அன்று வாழ்க்கையைத் தேடி ஓடிய மென்னா, அடுத்த இரண்டே ஆண்டுகளில், இன்று ஜெர்மன் கால்பந்து லீக்கில் ஒரு இளம் நட்சத்திரமாய் ஜொலிக்கிறார்.

ஜெர்மனி மண்ணில் கால்பதிக்கையில் மன்னேவிற்கு வயது 17 தான். குடும்பத்தினர் யாருமின்றி தனியே வந்தவருக்கு ஆறுதலாயும் அரவணைப்புமாய் இருந்தது அவர் விரும்பிய கால்பந்து தான். தனது சொந்த ஊரான பகாவில், அமெரிக்க கால்பந்து கிளப்பான ‘ரஷ் சாக்கர் அகாடெமி’யில் தனது 7 வயதிலேயே பயிற்சி பெற்றிருந்தார். அதனால் கால்பந்தின் நுணுக்கங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். ஜெர்மனியின் இரண்டாம் தர கிளப்பான, புளூமந்தேளர் என்னும் சிறிய கால்பந்து கிளப்பில் இணைந்தார் மன்னே. அந்தக் கிளப்பின் 18 வயதுக்குட்பட்டோர் அணியில் களமிறங்கிய மன்னே, அடுத்து 19 வயதுக்குட்பட்டோர் லீக்கிலும் விளையாடினார். அத்தொடரில் பட்டையைக் கிளப்பியவர் வெறும் 11 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தினார். அவரது செயல்பாட்டைக் கண்டு ஷாக்கான பண்டஸ்லிகா தொடரின் முன்னணி அணிகளான வோல்ஸ்பெர்க், ஸ்கால்கே, ஹேம்பர்க் ஆகியவை மன்னேவை தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்வதற்காக சோதனை செய்தனர். இறுதியில் மன்னேவை வெர்டர் பெர்மன் அணி ஒப்பந்தம் செய்து, அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது.

வெர்டர் பெர்மன் அணிக்கு ஒப்பந்தமான போதும், அணியின் ‘ரிசர்வ்’ டீமுக்காகத்தான் மன்னே முதலில் விளையாடினார். தனது முதல் போட்டியிலேயே கோலடித்து அணியை வெற்றி பெறவும் வைத்தார் மன்னே. அதன்பின் நான்கே நாட்களில் முதல் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. விலேம்ஷேவன் என்னும் மிகச்சிறிய அணிக்கெதிரான நட்பு ரீதியிலான அந்தப் போட்டியில் 60-வது நிமிடத்துக்குப் பிறகு மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார் மன்னே. 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து அசத்திய அவர் ஜெர்மன் கால்பந்து வட்டத்தில் பிரபலமடையத் தொடங்கினார்.

அவரது வளர்ச்சிக்கு வெர்டன் பெர்மன் இளைஞர் அணியின் பயிற்சியாளர் அலெக்சாண்டர் நௌரியும் பெரும் பங்கு வகித்தார். இந்நிலையில் அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளர் விக்டர் ஸ்கிரிப்னிக் பதவி நீக்கம் செய்யப்பட, நௌரிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தன்னோடு சேர்ந்து மன்னேவையும் முதல் அணிக்கு அழைத்துச் சென்ற நௌரி அவருக்கு பண்ட்ஸ்லிகா தொடரில் விளையாடும் மிகப்பெரிய அரிய வாய்ப்பையும் அளித்தார். முதல் 3 போட்டிகளில் கோலடிக்காவிட்டாலும் மன்னே மீதான நம்பிக்கை அவருக்குக் குறையவில்லை. பலம் வாய்ந்த பேயர்ன் லெவர்குசான் அணிக்கெதிரான போட்டியில் தொடர்ந்து 4-வது முறையாகவும் அவரைக் களமிறக்கினார். இதன்மூலம் பண்டஸ்லிகா தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய முதல் காம்பிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு மட்டும் நிற்காமல் தன் பயிற்சியாளரின் நம்பிக்கையைக் கெடுக்காமல் அப்போட்டியில் கோலடித்தும் அசத்தினார் மன்னே.

வீரர்கள் ஒரு கோலடிப்பதெல்லாம் கால்பந்தில் பெரிய நிகழ்வே இல்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்னர் வாழ்வாதாரத்துக்காக கஷ்டப்பட்ட ஒரு இளைஞன் இன்று கால்பந்து ஜாம்பவான்கள் முன்னிலையில் ஒரு சக வீரனாய் உயர்ந்து நிற்பதைப் பார்த்துத்தான் கால்பந்து உலகம் மெய்சிலிர்த்துப் போயிருக்கிறது. இந்த நிகழ்வுகளை மன்னேவால் கூட நம்ப முடியவில்லை, “பேயர் லெவர்குசான் அணியின் சிகாரிடோ போன்ற ஒரு வீரரோடு நானும் கால்பந்து விளையாடியிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று அதிசயிக்கிறார் மன்னே.

நெதர்லாந்து வீரர் ராபின் வேன் பெர்சியின் ரசிகரான மன்னே, ஜெர்மன் கால்பந்து லீக்கில் கலக்கி வரும் லெவண்டோஸ்கி, அபாமயாங் போன்ற வீரர்களைப் போல் தானும் ஒரு கோல் மெஷினாக வலம் வர வேண்டுமென்று விரும்புகிறார். கொடிகட்டிப் பறக்கும் நட்சத்திரங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படும் ரசிகர்களெல்லாம், வாழ்க்கையின் பள்ளத்திலிருந்து எழுந்து சிகரத்தைத் தொட்டிருக்கும் மன்னேவுடன் செல்ஃபியாக எடுத்துத் தள்ளுகின்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணியும் போட்டிகளில் கலந்து கொண்டது. கால்பந்து அணியான ரியல்மாட்ரிட் அணி அகதிகளுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ரூ. 6 கோடி நன்கொடையாக வழங்கியது நினைவிருக்கலாம். உலகெங்கும் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கும் பலருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. இந்நிலையில் அவர்களில் இன்னும் ஒருவர் இன்று வெற்றியின் உச்சானிக் கொம்பில் நின்று வாழ்க்கையில் இன்பத்தைச் சுவைத்திருப்பது அவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கை மீதான நம்பிக்கையைத் தந்திருக்கும். போராடுவது தானே வாழ்க்கை. ஒருசில போராளிகள் தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருப்பார்கள். அப்படியொருவர் தான் மன்னே. ஆனால் கால்பந்து உலகில் அவர் தொட வேண்டிய தூரம் இன்னும் நிறையவே உள்ளது. யாருக்குத் தெரியும் வறுமையையும் வாழ்க்கையும் வென்றவன், கால்பந்தையும் வென்று ஒரு மெஸ்ஸியாகவோ ரொனால்டோவாகவோ கூட உருவாகலாம்!

- பிரதீப் கிருஷ்ணா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ