Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முந்திய கேரளா... அலட்சிய தமிழ்நாடு!? #2017FIFAU-17WorldCup

‛‛கொச்சி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) நடத்தும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து நடக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள் கேரளா’’ என ட்விட்டரில் ஒருவர் பெருமையுடன் ட்விட் வெளியிட்டிருந்தார். அதை உலகெங்கும் உள்ள கேரள மாநிலத்தவர்கள் பெருமையுடன்  ரீ-ட்விட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நிலைமை தலைகீழ்.

இந்தியாவில் 2017 ல் அண்டர் -17 வேர்ல்ட் கப் நடத்தப்படும் என ஃபிஃபா தகவல் வெளியிட்டதுமே,  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில கால்பந்து சங்கங்களும் சுறுசுறுப்பாகின. கொச்சி , புனே, மும்பை, சென்னை, கோவா, பெங்களூரு, கவுகாத்தி, நவி மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்கள் உலகக் கோப்பை நடத்துவதற்கு தகுதியான இடங்களாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதையறிந்து அந்தந்த மாநில கால்பந்து சங்கங்கள் தங்கள் மண்ணில் உலக கோப்பை நடக்க வேண்டும் என வேகமெடுத்தன.

பொதுவாக, ஃபிஃபா நடத்தும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களை வெற்றிகரமாக நடத்துவது, மாநில மற்றும் தேசிய கால்பந்து சங்கங்களின் முயற்சியால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் அல்ல.  வீரர்கள் பாதுகாப்பு உள்பட பல விஷயங்களுக்கு, மத்திய, மாநில அரசின் உதவி தேவை. மாநில கால்பந்து சங்கத்துடன், அந்த மாநில அரசும் கை கோர்த்தால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம்.

‛எங்கள் கிரவுண்டில் உலகக் கோப்பை நடத்துங்கள். போதிய வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம்’ என கேரளா கால்பந்து சங்கம் உடனடியாக, இந்திய கால்பந்து சங்கத்துக்கு அப்ளை செய்திருந்தது.  உங்கள் மாநில அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்கி வர வேண்டும் என இந்திய கால்பந்து சங்கம் தெரிவித்ததும், இரண்டே வாரங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, மாநில அரசின் அனுமதியைப் பெற்று, ஒப்புதலும் வாங்கி விட்டது கேரள கால்பந்து சங்கம். ஃபிஃபா தொழில்நுட்பக் குழு கொச்சி மைதானத்தை ஆய்வு செய்து, ‛ஓகே’ என டிக் செய்து விட்டது. முதல் ஆளாக உலகக் கோப்பை நடத்தும் உரிமத்தை பெற்று விட்டது கேரளா. இதற்காகத்தான் தற்போது மலையாளிகள் பெருமைப்படுகின்றனர். 

சென்னை நேரு மைதானம் எந்த வகையிலும் வேறு மைதானங்களுக்கு குறைந்தது அல்ல. ஆனால், சென்னையில் உலகக் கோப்பை நடக்க வேண்டும் என, தமிழ்நாடு கால்பந்து சங்கமும் மெனக்கிடவில்லை. தமிழ்நாடு அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.  இதனால், சென்னையில் உலகக் கோப்பை நடக்காது என பட்டவர்த்தனமாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ஒரு ஸ்டேடியத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக போட்டியை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில் ‛ஸ்டேண்ட் பை’ ஸ்டேடியம் ஒன்று தயார் நிலையில் இருக்கும். அந்த ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சென்னை நேரு மைதானம் இல்லை என்பது கொடுமை. 


இது சம்பந்தமாக அப்போது நாம் தொடர்புகொண்டபோது,  ‘தம்பி, ஃபிஃபாவுலயே இப்ப பிரச்னையா இருக்கு. அதுவும் இல்லாம நம்ம ஸ்போர்ட்ஸ் மினிஸ்டரை பிடிக்கவே முடியலை’ என்றார் தமிழ்நாடு  கால்பந்து சங்கத் தலைவர் ஜெசய்யா வில்லவராயர்.  ‛நான் சென்னைலதான் இருக்கேன். அவங்க என்னை வந்து பாக்கவே இல்லை’ என அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜ் பதில் சொன்னார். ஆக, இரு தரப்பின் நீயா நானா பிரச்னையால் உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பு மிஸ் ஆனது.

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும்போது, இடைவேளையின்போது தொழிலதிபரை கூப்பிட்டு,மாலை மரியாதை செய்யத் தெரிந்த தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு, உரிய நேரத்தில் உலக கோப்பைக்கு விண்ணப்பிக்க தெரியவில்லை. ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவியிடம் தகாத முறையில் பேசத் தெரிந்த அமைச்சருக்கு, கால்பந்து சங்கத்துக்கு உத்தரவிட்டு, பணிகளை முடுக்கி விடத் தெரியவில்லை. உலகக் கோப்பை போன்ற ஒரு தொடர் சென்னையில் நடந்தால், நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனை பேர் பயன்பெறுவர் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. 

மூன்று சீசன்களாக சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நடக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் சாராசரியாக 20,000 ரசிகர்கள் மைதானத்துக்கு வருகின்றனர். கடந்த டிசம்பரில் சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோதும் கூட, சென்னை - மும்பை மோதிய போட்டியை 12,000 ரசிகர்கள் பார்த்தனர். ரசிகர்கள், மைதானத்தின் தரம் என எந்த விதத்திலும் டில்லி, மும்பையைவிட சென்னை தாழ்ந்து விடவில்லை. ஆனால் அசோஸியேஷன், அமைச்சர், அதிகாரிகளின் அலட்சியம், ரசிகனின் கொண்டாட்டத்துக்கு வழியில்லாமல் செய்து விட்டது.  மைதான விஷயத்திலேயே இப்படி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அலட்சியமாக இருந்தால் இந்தியாவில் மெஸ்ஸி-க்களும், ரொனால்டோக்களும் எப்படி உருவாக முடியும்?


 - தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ