Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா கெத்தாக நுழைந்தது இப்படித்தான்! #kabaddiworldcup

பரபரப்பான கிளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது கபடி உலகக்கோப்பை தொடர். பிரிவு ஏ வில் இருந்து இந்தியாவும், கொரியாவும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிட்டன. பிரிவு பியில் ஈரான் மட்டும் தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது இடத்துக்கு கென்யா, தாய்லாந்து இரண்டு அணிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. 

நேற்றைய தினம் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது கபடி ரசிகர்களுக்கு பெரும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த உலகக்கோப்பையில் சில எதிர்பாராத அதிர்ச்சிகரமான முடிவுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவை கொரியா வீழ்த்தியது, ஈரானை போலந்து வீழ்த்தியது, ஜப்பானை கென்யா வீழ்த்தியது உள்ளிட்ட முடிவுகள் ஆச்சர்யம் அளித்துள்ளன. பரபரப்பான இந்த உலகக்கோப்பை தொடரில்  இந்தியா  அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி? விறு விறு ஃபிளாஷ்பேக் கீழே...!

1. இந்தியா Vs கொரியா 

குறிப்பு - படத்தில் பச்சை நிற வரைபுள்ளி  இந்தியாவை குறிக்கிறது 

இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியே இந்தியா - கொரியா மேட்ச் தான். ஆரம்பத்தில்  இருந்தே இரண்டு அணிகளுக்கும் கடுமையான போட்டி  இருந்தது. தொடக்கத்தில் இந்தியா  பின்தங்கியிருந்தது. 7-7 என ஒரு கட்டத்தில் சமநிலைக்கு வந்தபிறகு, இந்திய வீரர்கள்  தங்களுக்கே உரிய பாணியில் அசால்ட்டாக புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தனர். இந்தியா 23 புள்ளிகளை பெற்றிருந்த நேரத்தில் கொரியாவிடம் இருந்தது வெறும் 15 புள்ளிகள் தான். கடைசி கட்டத்தில்  கொரிய அணியின் கேப்டன் ஜாங் லீ அதிரடியாக ரெய்டு புள்ளிகளை ஜெயிக்க,  கடைசி நேர டிவிஸ்ட்டில் மேட்சை ஜெயித்தது கொரியா. முதல் போட்டியிலேயே 32-34 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது இந்தியா.

2. இந்தியா Vs ஆஸ்திரேலியா :-

 முதல் போட்டியில் தோற்றதால் அதிர்ச்சியில் இருந்தது இந்திய அணி. இன்னும் ஒரு மேட்சை தோற்றால் கூட நிலைமை விபரீதமாகலாம் என்பதை உணர்ந்திருந்தது. இந்நிலையில் தான் இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் நடந்தது. நேர்த்தியாக இந்தியா ஆடியதால் ஆஸ்திரேலிய வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியா  23 -3 என அசைக்க முடியாத அளவுக்கு விறுவிறு முன்னிலைக்கு சென்றது.  ஒட்டுமொத்த போட்டியில் வெறும் 9  முறை தான்  தொடு புள்ளிகளை எடுத்தது  ஆஸி. இறுதியில் 54-20 என அபார வெற்றியைச் சுவைத்தது இந்தியா.

3. இந்தியா Vs   வங்கதேசம் :-

இங்கிலாந்தை 34 புள்ளிகளை வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்தியாவை எதிர்கொள்ள  ரெடியானது வங்கதேசம். ஆஸ்திரேலியாவை 34 புள்ளிகளை வித்தியாசத்தில் வீழ்த்திய தெம்புடன் வங்கதேசத்தை நைய்யப் புடைக்க காத்திருந்தது இந்திய அணி.  உலகக்கோப்பையில் இந்தியாவை ஜெயிப்போம் என சூளுரைத்து இறங்கிய வங்கதேசத்தை, மேட்ச் ஆரம்பத்தில்  இருந்தே எழ விடாமல் எகிறியடிக்க வேண்டும்  என முடிவு செய்திருந்தது இந்திய அணி. ஆனால் முதல் புள்ளியே வங்கதேசத்துக்குத்தான் கிடைத்தது. 0-1 என அப்போது லீடிங்கில் இருந்தது மட்டுமே  தான் வங்கதேசத்துக்கு ஒரே ஆறுதல், அதன் பின்னர் மிரட்டியெடுத்தனர் இந்திய வீரர்கள். பர்தீப் நர்வால் எட்டு ரெய்டு புள்ளிகளை எடுத்தார். இறுதியில் இந்திய அணி 57 -20 என 37 புள்ளிகளை வித்தியாசத்தில் ஜெயித்துக்  காட்டியது.

4. இந்தியா vs அர்ஜென்டினா :-

"உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என எங்களுக்கு ஆசையில்லை, எங்களது ஒரே குறிக்கோள் இந்தியாவை அதன் மண்ணில் வீழ்த்த வேண்டும்" இப்படிச்சொன்னவர் அர்ஜென்டினா அணியின்  கபடிப் பயிற்சியாளர். இந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு நடந்த மிகப்பெரிய சீரழிவு இந்தியாவுடன் மோதிய போட்டிதான். அதிரடியாக புள்ளிகளைச் சேர்த்த இந்திய அணி  74 -20 என மெகா வெற்றி பெற்றது. 54 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. 

5. இந்தியா vs இங்கிலாந்து ::-

இங்கிலாந்து அணிக்காக விளையாடுபவர்கள் பலரின் பூர்வீகம் இந்தியா தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்த பலர் இங்கிலாந்து அணியில் இருந்தனர், இந்த மேட்சை ஜெயித்தால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கியது இந்திய அணி. சந்தீப் நர்வால், பிரதீப் நர்வால், அஜய் தாகூர் ஆகியோரைத் தொடர்ச்சியாக ரெய்டுக்கு  அனுப்பினார், இந்திய அணியின் கேப்டன் அனுப்குமார். இந்திய வீரர்களை பிடிக்கவே முடியாமல் திணறிப்போனது இங்கிலாந்து இறுதியாக 69 -18 என அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 51 புள்ளிகள் வித்தியாசத்தில் மேட்சை ஜெயித்தது இந்திய வீரர்களுக்கு பெரும் உற்சாகமூட்டியது. முதல் மேட்சை 2 புள்ளிகளில் இழந்ததன் பின்பு அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றி பெற்றதால் கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்திய அணி. கொரியா, ஈரான், தாய்லாந்து, கென்யா ஆகிய அணிகளில்  யாரைச் சந்தித்தாலும் வெற்றி பெற்று மீண்டும் உலகக்கோப்பை தக்கவைக்க இந்திய கபடி வீரர்களுக்கு நமது வாழ்த்துகளை பகிர்வோம்.  

- பு.விவேக் ஆனந்த்

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close