Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொண்டாட்டத்தின் இன்னொரு பெயர் ஷேவாக்! #HappyBirthdayViru

சர்வ நிச்சயமாக கிரிக்கெட் வரலாற்றில்  கொண்டாடப்பட வேண்டியவர்  வீரேந்திர ஷேவாக்.  அதிரடி, சரவெடி தீபாவளியை  டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த உலகக்கு அறிமுகப்படுத்தியதே ஷேவாக் தான். கிரிக்கெட்டில் யார் யாரெல்லாம் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என  ஷேவாக் காலத்தில் கொண்டாடப்பட்டார்களோ அத்தனை பந்துவீச்சாளர்களையும் கதற விட்டவர் ஷேவாக். சென்னை சேப்பாக்கம் ஆகட்டும், பாகிஸ்தானின் மூல்தான் ஆகட்டும், இலங்கையின் கல்லே ஆகட்டும், தென்னாபிரிக்காவின் ஜோக்கன்னஸ்பார்க் ஆகட்டும், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகட்டும், நியூசிலாந்தின் வெலிங்டன் ஆகட்டும் எந்த நாட்டிலும், எந்த வகையிலான பிட்சிலும் ஷேவாக்கின் அதிரடி என்றைக்கும் மாறியதே கிடையாது. இன்னும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் டெஸ்ட், ஒருதின போட்டி, டி20 என எந்த ஃபார்மெட்டாக இருந்தாலும் கவலைப்படாமல் தனது பாணியில் அடித்து நொறுக்கியவர் ஷேவாக். 

பெரிய அளவிலான கால் நகர்த்தல்கள் இல்லாமலேயே சுழற்பந்து மைதானங்களில் முரளிதரன், வார்னேவை புரட்டியெடுக்க ஷேவாக்கால் மட்டுமே முடியும்." எனக்கு இது தான் வரும், என்னுடைய பாணி இது தான், எந்த சாதனை பற்றியும் எனக்கு கவலை இல்லை, எந்தச் சூழ்நிலையிலும் நான் பேட்டிங் செய்யும்போது ஒரு பந்தை பந்துவீச்சாளர் வீசுகிறார் எனில், அதை எப்படி எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்ப முடியும் என்பதில் தான் என் கவனம் இருக்கும்" ஷேவாக் தனது ஆட்டம் குறித்து சொன்ன வார்த்தைகள் இவை. 

ஷேவாக்கின் ஆட்டம் மட்டுமல்ல ஷேவாக்கை பற்றி பேசுவதே 90 களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். டி20 போட்டிகள் அறிமுகமாவதற்கு முன்னரே ரசிகர்களுக்கு  தொடர்ந்து விருந்தளித்து வந்தவர் ஷேவாக்.  முதல் ஓவரின் முதல் பந்தையே  பவுண்டரிக்கு விரட்டுவது, அரைசதத்தை பவுண்டரியிலும், சதம், இரட்டை சதம், முச்சதம் என எதுவானாலும் சிக்ஸருக்கு விரட்டி 'நான் தில்லான ஆள்' என கெத்தாக எதிரணிக்கு முன் நிற்கும் ஷேவாக்கை நினைத்தால் இப்போதும் டிவியில் ஷேவாக்கின் ஆட்டத்தை கண்டவர்களுக்கு கூட சிலிர்க்கும். அப்படி ஷேவாக் ரசிகர்களை சிலிர்க்க வைத்த மிக முக்கியமான ஐந்து இன்னிங்ஸ் பற்றிய நறுக் சுருக் ஷேவாக் பாணி குறிப்புகள் இங்கே! 

1. முதல் முச்சதம் கண்ட இந்தியன்

 

 

2004-ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. மூல்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஷேவாக்கும், சோப்ராவும் தொடங்கினார்கள். இரண்டாவது ஓவரில் ஷேவாக்குக்கு  பேட்டிங் கிடைத்தது. முதல் மூன்று பந்துகளில் ரன் இல்லை. முகமது சமி வீசிய நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஷேவாக். அந்தச் சமயத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களுக்கு தலைவலி ஆரம்பித்தது. சச்சின் டெண்டுல்கரின் 194 ரன்கள் எடுத்த அந்த மேட்சில் சச்சினை தவிர்த்துவிட்டு எல்லோரும் ஷேவாக்கை கொண்டாட ஆரம்பித்தார்கள். அதற்கு காரணம் ஷேவாக்கின் கூல் இன்னிங்கிஸ். 375 பந்துகளை சந்தித்து 39 பவுண்டரி, ஆறு சிக்ஸர் உட்பட 309 ரன்கள் எடுத்து  ரசிகர்களை  பரவசப்படுத்தினார் ஷேவாக். 

2.  உலக இறுதிப்போட்டியில் தனி ஒருவன் :- 

 

 

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி. ஜோகன்னஸ்பார்க் மைதானத்தில் இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் கோப்பைக்கு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர். முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை துவைத்து காயப்போட்டனர். 358 ரன் என்ற இமாலய இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரிலேயே மெக்ராத்தின் சாதுர்யமான பந்தில் சச்சின் அவுட்டாக, 'நான் இருக்கிறேன்' என இறங்கி விளாசினார் ஷேவாக். கங்குலி 24 ரன்னில் அவுட் ஆனாலும் கூட, இந்திய அணியின் ரன் ரேட் குறையவில்லை. அதற்கு காரணம் ஷேவாக்.மெக்ராத் , பிரட் லீ இரண்டு பேராலும் ஷேவாக்கை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஷேவாக் களத்தில் இருக்கும் வரை இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. 24 ஓவரில் 147  ரன் எடுத்திருந்தது இந்திய அணி. அப்போதைய காலகட்டத்தில் 24 ஓவர்களில் இவ்வளவு  ரன்களை குவிப்பது மிகப்பெரிய விஷயம். பந்துவீச்சாளர்கள் ஒருபக்கம் ஷேவாக்கை வீழ்த்தமுடியாமல்  திணறிக்கொண்டிருக்க ஷேவாக் தேவையின்றி ரன் அவுட் ஆனார். இக்கட்டான, எக்கச்சக்க பிரஷர் உள்ள அந்த போட்டியில் 80 பந்தில் 10 பவுண்டரி, மூன்று சிக்ஸர் உட்பட 82 ரன்களை எடுத்தார் ஷேவாக். ஆஸ்திரேலிய வீரர்களில் கண்ணில் இருந்த குழப்பம் ஷேவாக் அவுட்டான பிறகு தான் நீங்கியது. அது தான் ஷேவாக். 

3.  ஆல்டைம் பெஸ்ட் மெல்போர்ன் இன்னிங்ஸ்

 

 

ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக விளையாடும்போது எதிரணி வீரர்கள் எப்போதுமே திணறுவது வழக்கம். 2003-ம் ஆண்டு மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடந்தது, முதல் இன்னிங்ஸை இந்தியா துவங்கியது. சச்சின் டெண்டுல்கர் உட்பட நான்கு இந்திய வீரர்கள் டக் அவுட்டான டெஸ்ட் போட்டி அது. முதல் இன்னிங்ஸில் இந்தியா அடித்த ரன்கள் 366. அதில் ஷேவாக் குவித்த ரன்கள் 53.27% . முதல் நாள் ஷேவாக் பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்தார். ஒரே நாளில் இரட்டை சதம் எடுத்து சாதனை புரிவார் என எதிர்பார்த்த சமயம் அது. 195 ரன்கள் இருந்தபோது சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார் ஷேவாக். இரட்டை சதம் அடிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறதா என பிற்பாடு ஷேவாக்கிடம் கேட்க, "அந்த ஐந்து ரன்னை விட 195 ரன்கள் பெரியது" என்றார். இன்றளவும் ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட சதங்களில் மிகச்சிறப்பானதாக இது கருதப்படுகிறது. 

4. இரட்டை சதம்   அடித்த இரண்டாவது இந்தியர்

 

 

2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். சச்சின் டெண்டுல்கர் அடித்த குவாலியர் ஸ்டேடியத்தில் இருந்து 500 கி.மி தொலைவில் இருக்கும் இந்தூரில் சச்சின் சாதனையை உடைத்தார் ஷேவாக். கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய அந்த போட்டியில், தனது பாணியில்  இரட்டை சதம் விளாசினார். கீமார் ரோச், சுனில் நரேன், டேரன் சமி, பொல்லார்டு, சாமுவேல்ஸ், ரஸ்ஸல், ராம்பால் என  வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அனைவரும் வரிசையாக வந்து ஷேவாக்கிடம் வெளுப்பு வாங்கிக் கொண்டு சென்றனர். சச்சின் டெண்டுல்கர் ஐம்பதாவது ஓவரில் இரட்டை சதம் எடுக்க, ஷேவாக்கோ 44 ஓவரிலியே அந்த சீனை முடித்து விட்டார். 46.3 ஓவரில் ஷேவாக் அவுட்டானார். அப்போது இந்திய அணியில் ஸ்கோர் 376. ஷேவாக் எடுத்த ரன்கள் 219. "வாழ்க்கையில் ஒருமுறையாவது முதல் ஓவரில் இருந்து ஐம்பதாவது ஓவர் களத்தில் நின்று ஆட வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. அது இன்றும் பலிக்கும் என எதிர்பார்த்தேன். மிஸ்ஸாகி விட்டது" என போட்டி முடிந்த வருத்தப்பட்டுச் சொன்னார் ஷேவாக். ஒருவேளை அன்றைய தினம் ஷேவாக் 50 ஓவர் வரை நின்றிருந்தால்! 

5 . சி.எஸ். கே வை மிரள  வைத்த ஷேவாக்

 

 

ஷேவாக் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஆடிய போட்டிகள் மிகக்குறைவு. ஆனால் இன்று வரை ஐ.பி.எல் போட்டியில் கெயிலுக்கு அடுத்தபடியாக அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது ஷேவாக் தான். டி20 போட்டிகளில் ஷேவாக் யார் என்பதைச் சொல்ல இந்த புள்ளிவிவரம் போதுமானது. 2014-ம் ஆண்டு ஐ.பி.எல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. பஞ்சாப் அணிக்காக ஷேவாக் அன்று ருத்ர தாண்டவமாடினார். நெஹ்ரா, அஷ்வின், ஜடேஜா, மோஹித் ஷர்மா என ஒருவரையும் விட்டு வைக்க வில்லை. தோனியின் பச்சா ஷேவாக்கிடம் அன்றைய தினம் பலிக்கவில்லை. என்ன ஃபீல்டிங் செட் செய்தாலும் பந்தை பறக்க விடுவதிலேயே குறியாக இருந்தார் ஷேவாக். வெறும் 58 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி, 8 சிக்ஸர் உட்பட 122 ரன்களை விளாசித்தள்ளினார் ஷேவாக். ஐ.பி.எல் வரலாற்றில் மிரட்டல் இன்னிங்ஸ் இது. 

ஹேப்பி பர்த்டே வீரு!

- பு.விவேக் ஆனந்த்   

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ