Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரு கைகளிலும் அசுர வேகத்தில் பந்துவீசும் பவுலர்! (வீடியோ)

வாசிம் அக்ரமையும், வக்கார் யுனிஸையும் மிக்ஸ் செய்து இன்னுமொரு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்ஸை பாய விட்டிருக்கிறது பாகிஸ்தான்.  வலது கையில் பந்து வீசினால் 145 கி.மீ. வேகம், இடது கையில் வீசினால் 135 கி.மீ. வேகம் எனப் பின்னி பெடலெடுக்கிறார் யஸிர் ஜான். சிவாஜி படத்தில் ரஜினி ‛இரண்டு கைகளால்’ எழுதுவது போல,  யாஸிர் ஜான் இரு கைகளிலும் வேகமாக பந்துவீசுவதுதான் பாகிஸ்தானில் ஹாட் டாபிக். 

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதியைச் சேர்ந்தவர் யாஸிர் ஜான். தந்தை காய்கறி வியாபாரி. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஸிர், 2003 உலக கோப்பையில் வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ் வீசிய வேகத்தைப் பார்த்து மிரண்டு நின்றான். ‛நானும் ஒருநாள் அவர்களைப் போல வருவேன்...’  உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

அடித்துப் பிடித்து ராவல்பிண்டி அண்டர் - 16 அணியில் இடம்பிடித்தான். ஒரு உள்ளூர் போட்டியில் ராவல்பிண்டி தோல்வியடையும் நிலையில் இருந்தது. எல்லைக் கோட்டில் இருந்த யாஸிரை அழைத்தார் கேப்டன். ‛நம்ம தோக்குற நிலைமையில இருக்கோம். வித்தியாசமா ஏதாவது பண்ணனும். நீ ஏன் லெஃப்ட் ஹேண்ட்ல பவுலிங் போடக் கூடாது’ என கேப்டன் சொன்னது யாஸிருக்கு ஆச்சரியமாக இருந்தது.  இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாமே என ஓகே சொன்னான். 

எவ்வித பயிற்சியுமின்றி ஓடி வந்து இடது கையில் பந்து வீசினான். ‛இந்தப் பையன் என்ன பண்றான்’ என பயிற்சியாளர்கள் அதிர்ந்து நின்றனர். ஆனால்,  வலது கையில் வீசியதற்கு சற்றும் குறைவில்லாத வேகம். ஒரு பந்து அல்ல அந்த ஓவர் முழுவதையும் இடது கையில் வீசி முடித்தான். கேப்டன், பயிற்சியாளர், சக வீரர்கள் என எல்லோரிடம் இருந்தும் பாராட்டு. யாஸிர் முகத்தில் சாதித்த திருப்தி. மறுநாள் பத்திரிகைகளில் இடம்பிடித்தான் இந்த விநோத பந்துவீச்சாளன். 

ஓரளவு ஃபெமிலியராகி விட்டான். குடும்பம் இஸ்லாமாபாத் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு கிரிக்கெட் பயிற்சிக்கான வசதிகளும் அதிகம். ஒருநாள் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத், லாகூர் கோலண்டர்ஸ் அணிக்கான பவுலர்கள் தேடலில் இருந்தார். ஏற்கனவே யாஸிர் ஜானை பற்றி கேள்விப்பட்டிருந்ததால், உடனடியாக லாகூர் அணியில் அவரை ‛புக்’ செய்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக்  தொடரில் லாகூர் அணி சார்பில் 10 ஆண்டுகள் விளையாடுவதற்கான ஒப்பந்தம் செய்துள்ள யாஸிரின் இலக்கு, பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பதே. 

வேகம் மட்டுமல்ல ஸ்விங், லென்த், வேரியேஷன் என எல்லாமே  பக்கா.  இது நிச்சயம் அவரை ஒருநாள், பாகிஸ்தான் ஜெர்ஸி அணிய வைக்கும் என்பது அவரது பயிற்சியாளர் நம்பிக்கை. ‛‛இந்த திறமை உண்மையில் அணிக்கு சாதகமான விஷயம். வலது மற்றும் இடது என இரு கை பேட்ஸ்மேன்களும் களத்தில் இருக்கும்போது,  யாஸிர் போன்ற ஒரு பவுலர் இருப்பது நிச்சயம் கேப்டனுக்கு உற்சாகம் கொடுக்கும். ஒரு பவுலர் ஒரு ஓவரில் ஒரு கையில்தான் பந்துவீச வேண்டும் என எந்த விதியும் இல்லை’’ என்றார் முகமது சல்மான். 

ஃபிட்னஸ், டயட்  உள்பட மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துவதற்காக, பல பயிற்சியாளர்கள் பணம் கொடுத்து யாசிரை தயார்படுத்தி வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் ஓகே. சர்வதேச அளவிலும் ஜொலிக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னும் பயிற்சி அவசியம். குறைந்தது அதற்கு ஆறு முதல் ஓராண்டு வரை பயிற்சி தேவை. 

‛‛2003 உலக கோப்பையில் வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ் பந்துவீசியதைப் பார்த்துதான் நானும், வேகப்பந்துவீச்சாளன் ஆனேன். எல்லோரையும் போல பாகிஸ்தான் அணிக்காக ஆட வேண்டும் என்பது என் ஆசை. பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து உலகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய மைதானங்களில், பெரிய பெரிய வீரர்களுடன் ஆட வேண்டும். இதுதான் என் கனவு’’ என்றார் யாஸிர். 

அன்று, ஹனிஃப் முகமது ரிவர்ஸ் ஸ்வீப்பை அறிமுகம் செய்தார். அடுத்து இம்ரான் கான், சர்ஃப்ராஸ் நவாஸ் ஆரம்பித்த ‛ரிவர்ஸ் ஸ்விங்’ டெக்னிக்கை பின்னாளில் வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ் கச்சிதமாக செயல்படுத்தினர். இன்று யாஸிரின் இரு கைப் பந்துவீச்சு. கிரிக்கெட்டில் புதுமைகளைப் புகுத்துவதில் நாங்கள் கில்லிகள் என பெருமைப்படுகின்றனர் பாகிஸ்தானியர். 


- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ