Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபடி உலக கோப்பை வென்றது எப்படி?  தமிழக வீரர் சொல்லும் திக் திக் நிமிடங்கள்..

'இன்று இரவு மட்டும் தாய்மார்கள் ஒரு 40 நிமிடம் உங்கள் குழந்தைகளை டிவி பார்க்க அனுமதியுங்கள்.  இன்று  மட்டும் அலுவலக மேலாளர்கள் உங்கள் ஊழியர்களை 40 நிமிடத்துக்கு முன்னதாக, வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். உலக கோப்பையில் இத்தனை நாள் நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு இன்று இரவுதான் பலன் கிடைக்கும். உங்கள் பொன்னான நேரத்தில் 40 நிமிடம் எங்களுக்காக ஒதுக்கி, ஆதரவு தாருங்கள்’ என, இந்திய கபடி அணியின் கேப்டன் அனுப் குமார் விடுத்த அறிக்கை, சனிக்கிழமை காலை வாட்ஸ்அப்பில் விறுவிறுவென பரவியது. 

'நீங்கள் சொல்லாவிடினும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு’ எனும் வகையில், இந்திய கபடி அணிக்கு ஆதரவு குவிந்தது. சனிக்கிழமை இரவு 8 - 9 மணி வாக்கில் ட்விட்டர், ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் கபடி, கபடி, கபடி. 'எப்ப இருந்துடா நீங்க கபடி பார்க்க ஆரம்பிச்சிங்க...’ என வியக்கும் வகையில் திடீர் கபடி ஃபேன்ஸ் முளைத்திருந்தனர். விளையாட்டு பிரியர்கள் அல்லாதவர்களும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 45 நிமிடங்கள் மூழ்கி இருந்தனர். 

கபடி என்றாலே இந்தியா கில்லி என்பது நாடறிந்ததே. ஆனால், உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவை எதிர்க்க இருப்பது ஈரான் என்பதால், கொஞ்சம் கிலி. தென் கொரியா தவிர்த்து மற்ற அணிகளை கிள்ளுக்கீரையாக டீல் செய்த இந்திய அணிக்கு ஈரான் சிம்ம சொப்பனமாக இருந்தது. அதற்கேற்ப ஈரான் முதல் பாதியில்  முன்னிலை பெற்றது.

பொதுவாக, கபடியைப் பொறுத்தவரை ஒருமுறை ஆல் அவுட் செய்து விட்டாலே, அதில் இருந்து மீண்டு வருவது சிரமம். மீண்டு வருவதற்குள் ஆட்டம் முடிந்து விடும்.  முதல் பாதியில் இந்தியாவை ஈரான் ஒருமுறை ஆல் அவுட் செய்திருந்தது. நம்பிக்கை இல்லாமல்தான் இரண்டாவது பாதியைப் பார்த்தோம். ஒரு கட்டத்தில்  அஜய் தாக்கூர் இரண்டு ஈரான் வீரர்களை அவுட் செய்தார். ஆட்டத்தின் திருப்புமுனையும் அதுவே. அதே சூட்டில் இந்தியா முன்னிலை பெற்று, ஈரானை ஆல் அவுட் செய்தது. அதன்பின், ஈரானை  முந்தவிடவே இல்லை.  முடிவில், இந்தியா வெற்றி

ஆனால், இந்தியா சொல்லும்படி உருப்படியாக கேட்ச் போடவே இல்லை. சில சமயங்களில் இந்திய அணியில் ஆறு பேர் இருந்தபோதும் கூட, ஈரான் வீரர்கள் எளிதாக போனஸ் லைனை மிதித்துச் சென்றனர்.  இதற்கு என்ன காரணம் என, இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சேரலாதன் தர்மராஜிடம் கேட்டோம்.


''முதல் பாதியில் ஈரான் முன்னிலை பெற்றிருந்ததால், ரைடில் பாயின்ட் எடுக்க நினைத்து முழுக்க முழுக்க, அதிக ரைடர்களை இறக்கி இருந்தோம். தேர்ந்த கேட்ச்சர்கள் இல்லை. இதனால், ஈரான் வீரர்கள் இறங்கி பாடியபோது நம்மால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அதையெல்லாம் விட, அவரைப் பிடிக்காமல் விட்டால் ஒரு புள்ளிதான் போகும். சரியாக கேட்ச் போட்டால் மட்டுமே ரைடர் பிடிபடுவார். இல்லையெனில் நழுவிச் சென்று விடுவார். அப்போது இரண்டு மூன்று புள்ளிகள் வரை இழக்க நேரிடும்.
முடிந்த வரை லூஸ் கேட்ச் போட்டு பாயின்ட்டை இழக்காமல், ரைட் சென்று பாயின்ட் எடுக்க திட்டமிட்டிருந்தோம். நம் ரைடர் அவுட்டானால், ஒரு புள்ளிதான் போகும். அதுவே டிஃபன்ஸில் தப்பு செய்தால் மளமளவென பாயின்ட்டும் போகும், ஆட்டமும் மாறி விடும்’’ என டெக்னிக்கலாக விளக்கினார். 


''மற்ற போட்டிகளில் நாம் முன்னிலையில் இருந்தோம். அதனால், டிஃபன்சும் வலுவாக இருந்தது. வந்தவர்களை எல்லாம் தூக்கி அமுக்கினோம்.  ஃபைனலில் நிலைமை தலைகீழ். ஈரான் லேசுப்பட்ட டீம் அல்ல. ஒரு கட்டத்தில் மெயின் டிஃபண்டர்களை கூட வெளியே எடுக்க வேண்டியதாகி விட்டது. ஆரம்பத்தில் செய்த சின்னச் சின்ன மிஸ்டேக்கினால், அவர்கள் முன்னிலை பெற்று விட்டனர்’’ என்றார். 
''இடைவேளையின்போது  பதட்டப்பட வேண்டாம். ஒருமுறை அவர்களை ஆல் அவுட் செய்தால் கேம் நம் பக்கம் மாறிவிடும்.  முடிந்தவரை ரைடில் பாயின்ட் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தினோம். அதற்கேற்ப யாருடைய ரைட் செட்டாகிறது என மாறி மாறி வீரர்களை அனுப்பினோம்.  அஜய் தாக்கூர் மற்றும் நிதின் தோமர்  இருவரும் பாயின்டுடன் வந்ததால், அவர்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் ரைட் அனுப்பினோம். முன்னிலை பெற்றபின், அதே டெம்போவை மெயின்டன் செய்தோம். வெற்றி வசமானது’’ என திருப்தி அடைந்தார் சேரலாதன்.

கடந்த ஆண்டு ப்ரோ கபடி லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா அணியின் கேப்டனாக இருந்த சேரலாதன், உலக கோப்பையில் ஃபைனல் தவிர்த்து மற்ற போட்டிகளில் களமிறங்கி இருந்தார். 

‛‛ஃபைனல் ஆடாதது கொஞ்சம் வருத்தம்தான். சூழலைப் பொருத்து, ஜுனியர்ஸ் ஆடட்டும்னு இருந்துட்டேன். முழுக்க முழுக்க ரைடர்கள் தேவை அதிகம் இருந்ததால், நான் இறங்க முடியாமல் போய் விட்டது. ஒட்டுமொத்தமாக அணி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி’’ என்றார்.


- தா.ரமேஷ் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close