Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவியன் ரிச்சர்ட்ஸ் + சச்சின் + ரிக்கி பாண்டிங் = கோஹ்லி! சொல்வது யார்?

கோஹ்லிக்கு பாராட்டுகள் 360 டிகிரியில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் டர்ன். கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும் பரவாயில்லை என கோஹ்லியை விவியன்   ரிச்சர்ட்ஸ், சச்சின், ரிக்கி பாண்டிங் சேர்ந்த காம்போ என்கிறார் அமர்நாத். கோஹ்லியை பற்றி அவர் வாசித்த பாராட்டுப் பத்திரம் இதோ...

”ஒரே வீரரை திரும்ப திரும்ப புகழ்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், விராட் கோஹ்லியைப் புகழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கோஹ்லியைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேனைப் பார்த்ததில்லை. உண்மையிலேயே இது அவருக்கு மகத்துவமான ஆண்டு. எந்த சூழல் ஆனாலும், டெஸ்ட், ஒன்டே, டி-20 என எந்தவித ஆட்டமானாலும் சரி, விட்டு விளாசுகிறார். குறிப்பாக அவர்  அபாராமாக ஆடும்போதெல்லாம் இந்தியா வெற்றி அடைவதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு விஷயத்தில் தீவிரமாக இருப்பதுவே கோஹ்லியை மற்ற வீரர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. அவர் தருணங்களுக்காக வாழ்கிறார். ஒவ்வொருமுறையும் ரன் குவிக்க வேண்டும் என தாகத்துடன் உள்ளார்.  அதற்காக அவர் தன்னை வற்புறுத்திக் கொள்கிறார். விவியன்  ரிச்சர்ட்ஸ், சச்சின், ரிக்கி பாண்டிங்கின் கலவையாக திகழ்கிறார். 

 

அவர் ஒவ்வொருமுறையும் புத்திக் கூர்மையுடனும்,  தெளிவான திட்டத்துடனுமே களத்துக்கு வருகிறார். ஆரம்பத்தில் அவசரப்படாமல், சில பந்துகளை நிதானத்துடன் எதிர்கொள்கிறார். அதிக ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போதும் கூட, கன்னாபின்னாவென ஷாட் ஆடாமல், தெளிவான கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டுமே ஆடுகிறார். முடிந்தவரை அதிக நேரம் களத்தில் நிற்க ஆசைப்படுகிறார்.

எப்போதும் ஸ்கோர் போர்டில் ரன்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறார். இன்னிங்ஸ் முழுவதும் ஒன்று, இரண்டு என ஓடி ஓடி ரன் எடுக்கிறார். அதற்கேற்ப ஃபிட்னஸில் மெனக்கிடுகிறார். இது மிகைப்படுத்தப்பட்ட பாராட்டாக தெரியலாம். இருக்கட்டும், கோஹ்லி அதற்கு தகுதியுடையவர். எவ்வளவு காலம் அவர் இதேபோல விளையாடுகிறாரோ அவ்வளவு காலம் இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லது.
களத்தில் இருக்கும்போது எதிரணியின் முகத்தில் வாட்டத்தை ஏற்படுத்தவல்ல பேட்ஸ்மேன்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். விராட் கோஹ்லி அதில் ஒருவர். கோஹ்லி களத்தில் இருந்தால், எதிரணி வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர் தங்கள் வெற்றிக்கு குறுக்கே நிற்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். 

மொஹாலியில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனி, கோஹ்லி இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஆடியதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இது தொடரட்டும். 

 

- தா.ரமேஷ்
 

எடிட்டர் சாய்ஸ்