Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

63 வயதில் தேசிய அளவில் தங்கம்... நீச்சலில் கலக்கும் காஞ்சிபுரம் முதியவர் !

செகந்திராபாத்தில் நடந்த தேசிய அளவிலான முதியோருக்கான நீச்சல் போட்டியில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தாராம் (63) தங்க பதக்கம் வென்றார். இவர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சிபெற்று இந்திய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். இதைப் பார்த்து, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சிறுவர்கள், அவர் பயின்ற நீச்சல் குளத்துக்குப் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

நீச்சல் குளத்தில் பயிற்சியில் இருந்த சாந்தாராமிடம் பேசினோம். “சின்ன வயதில் கிணறு, ஏரியில் நீச்சல் அடித்திருக்கிறேன். அதன்பின் பிசினஸ், ரியல் எஸ்டேட் என வாழ்க்கை மாறி விட்டது. 2010-ல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் ஒன்றை கட்டினர். உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, நீச்சல் பயிற்சிக்கு வந்தேன்.

நீச்சல் குளத்தில் நீந்துவது ரொம்பவே பிடித்து விட்டது. என்னுடன் நண்பர்களும் வர ஆரம்பித்தார்கள். பயிற்சியாளர் முறைப்படி எப்படி நீந்த வேண்டும் என்று  பயிற்சி கொடுத்தார். இதனால் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். மாவட்ட அளவில், மாநில அளவில் எனப் படிப்படியாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற ஆரம்பித்தேன். 

கடந்த மூன்று வருடங்களாக தமிழக அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு 10 தங்கப் பதக்கங்களை வென்றேன். சமீபத்தில் செகந்திராபாத்தில் அகில இந்திய அளவில் நடக்கும் முதியோருக்கான நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் கலந்து கொண்டு கோல்டு மெடல் வென்றேன். இதனால் நியூசிலாந்தில் நடக்கும் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக தற்போது பயிற்சியில் இருக்கிறேன்.

சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற 50மீ நீளமுள்ள நீச்சல் குளம் வேண்டும். ஆனால் இங்கே 25மீ நீளமுள்ள நீச்சல் குளம்தான் உள்ளது. 50மீ நீளமுள்ள பயிற்சி குளம் அமைந்தால் தேசிய அளவிளான போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் லெவல் வரை பயிற்சி எடுக்க முடியும். 
நீச்சல் போட்டியில் தழிழ்நாட்டில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களில் 70 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் தமிழகத்திலிருந்து 20 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.” என்கிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் கூறியதாவது:

 


''உடம்பை குறைப்பதற்காக சிலர் வருகின்றனர். அதுதவிர்த்து, மாற்றுத்திறனாளி குழந்தைகள், மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் என மூன்று விதமான பயிற்சி மேற்கொள்பவர்கள் இங்கே வருகின்றனர். 2013ல் இருந்து பயிற்சி அளித்து வருகிறோம்.

இங்கே பயிற்சி பெற்ற பலர், மாநில அளவில் தங்கம் வென்றுள்ளனர். தேசிய அளவிலும் சாதித்து இருக்கிறார்கள். கிராமங்களில் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு கொடுக்கிறோம். நீச்சல் பயிற்சி பெற்றவர்களை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்கிறோம். ஏழ்மையானவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. ஆனால் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மூலமாக பயிற்சி பெறுபவர்களுக்கு சத்தாண உணவுகள் வழங்கப்படுகின்றன. தற்போது படிப்படியாக நீச்சல் கற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல நிறையபேர் உருவாகிவிடுவார்கள்” என்கிறார் நம்பிக்கையாக.

‛டியுஷன் எல்லாம் வேண்டாம்… நீச்சல் போதும்’ என்கிறார்கள் பெற்றோர்கள்! இதனால் குட்டீஸ்களும் ஆர்வமாக அந்த நீச்சல் குளத்துக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

செய்தி, படங்கள்: - பா.ஜெயவேல்
 
 

எடிட்டர் சாய்ஸ்