Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனிக்கு இன்னுமொரு அக்னிப்பரீட்சை... தொடரை வெல்லுமா இந்தியா?


விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தி, தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில், வழக்கமாக தீபாவளி சமயத்தில் உருவெடுக்கும் புயல், தற்போது விசாகப்பட்டினத்தில் மையம் கொண்டிருப்பதால், போட்டி நடக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நியூஸிலாந்து அணி, விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியிடம் 3-0 டெஸ்ட் தொடரை முழுமையாக கோட்டை விட்டது.  ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு டஃப் ஃபைட் கொடுத்து வருகிறது. தொடர் 2-2 என சமநிலையில் இருப்பதால், நாளை நடக்கும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கடந்த 1988 க்குப் பின் இந்தியாவில் நடந்த, இரு அணிகளுக்கு இடையிலான நான்கு தொடர்களிலும் நியூஸிலாந்து தோல்வியே அடைந்துள்ளது. போதாக்குறைக்கு தற்போது டெஸ்ட் தொடரிலும் 'ஒயிட்வாஷ்' அடைந்ததால், விசாகப்பட்டினத்தில் முத்திரை பதித்து, எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முயற்சிக்கும்.  அவருக்கு  இருக்கும் அதே நெருக்கடி தோனிக்கும் இருக்கிறது.

கடந்த 18 மாதங்களில் தோனி கேப்டன்ஷியில் இந்திய அணி, ஜிம்பாப்வே தொடரை மட்டுமே கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் நடந்த அந்த  அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலக கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர், இந்தியாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர் என மூன்று சீரிஸ்களில், தோனி தலைமையிலான இந்திய அணி சொதப்பியது. ஒருவேளை நாளை  இந்தியா தோல்வியடைந்தால், தோனியின் கேப்டன்ஷிக்கு உடனடியாக நெருக்கடி ஏற்படாது என்றாலும்,  அதிக விமர்சனங்களை சந்திப்பார் கூல் கேப்டன். 

வழக்கம்போல, பேட்டிங்கில் விராட் கோஹ்லியை பெரிதும் நம்பி இருக்கிறது இந்திய அணி. தர்மசாலாவில் 85, மொகாலியில் 154 என இரண்டு முறையும் சேஸிங்கின்போது ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்து ‛சேஸிங் மாஸ்டர்’  என்பதை நிரூபித்தார்  கோஹ்லி. ராஞ்சியில் நடந்த கடந்த போட்டியில் 45 ரன்களில் அவர் அவுட்டானதால், அடுத்து என்ன நடந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 


‛ஒன்னு தூங்குற, இல்லை தூர் வார்ற’ என்பதுதான் சோசியல் மீடியாவில் ரோகித் ஷர்மா குறித்த விம்ரசனம். இந்த தொடரில் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம். கடைசியாக அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடி, ஒன்பது மாதம் ஆகிறது. அது டெஸ்ட்  ஆனாலும் சரி, ஒன்டே ஆனாலும் சரி. இந்த ஒன்டே சீரிஸில் அவர் அடித்த ரன்கள் முறையே 14,15,13,11.  ஆனாலும், வெற்றி, தோல்வியை கருத்தில் கொள்ளாது பிளேயிங் லெவனில் ரோகித்தை சேர்த்து, மன்தீப் சிங்கை தொடர்ந்து பெஞ்சிலேயே உட்கார வைத்திருக்கும் தோனியின் சூட்சமம்தான் புரியவே இல்லை. 

விசாகப்பட்டினம், ரோகித்தின் தாய் பிறந்த ஊர். அங்கே ரோகித், திடீரென விஸ்வரூபம் எடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என எதிர்பார்க்கின்றனர் அவரது ரசிகர்கள். அதேபோல, தோனிக்கும் இது ஸ்பெஷல் கிரவுண்ட். இங்கு நடந்த முதல் போட்டியிலேயே அழுத்தம் திருத்தமாக முத்திரை பதித்திருந்தார் தோனி. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசி, இந்தியாவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன? 

நீண்ட இடைவெளிக்குப் பின் மொகாலியில் 80 ரன்கள் விளாசிய தோனி, சொந்த மண்ணான ராஞ்சியில் ஏமாற்றினார். மீண்டும் விசாகப்பட்டினத்தில் விளாச வேண்டும் என்பது தோனி ரசிகர்கள் எதிர்பார்ப்பு. பவுலிங்கைப் பொருத்தவரை அமித் மிஸ்ரா, அக்ஸர் படேல், கேடார் ஜாதவ் ஆகிய மூவரும் ரெகுலர் ஸ்பின்னர்களான அஷ்வின், ரவீந்திர ஜடஜோ இல்லாத குறையைப் போக்கிவிட்டனர். ஜஸ்ப்ரிட் பும்ரா உடல்தகுதியுடன் இருப்பதால் கடைசிப் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.

நியூஸிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில், ராஞ்சியில் ஃபார்முக்குத் திரும்பினார்.  அவருடன் தொடர்ச்சியாக அரை சதங்கள் அடித்து நொறுக்கும் டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன் பக்கபலமாக இருக்கின்றனர். பவுலிங்கும் பிரச்னை இல்லை. 

இவை எல்லாவற்றையும் விட விசாகப்பட்டினத்தில் தற்போது புயல் சின்னம் உருவெடுத்திருப்பதால், போட்டி பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.


- தா.ரமேஷ் 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ