Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் ஆபத்து!' - கேரி கிறிஸ்டன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் -1 அணியாக மாற்றி விட்டார் விராட் கோஹ்லி. அவரிடேமே ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும் என அரசல் புரசலாக கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால், அது ஆபத்தில் முடியும் என, 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றபோது, பயிற்சியாளராக இருந்த  கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.


மும்பையில் நடந்த விழாவில் கிறிஸ்டனிடம், விராட் கோஹ்லியை அனைத்து ஃபார்மட்டுக்கும் கேப்டனாக்க இதுதான் சரியான நேரமா? என கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‛‛இதற்கு நீங்கள் என்னிடம் இருந்து பதில் பெற முடியாது. ஒன்று மட்டும் தெளிவு. நீங்கள் தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினால், ஆபத்தை தானாக வரவழைத்துக் கொள்வீர்கள். என் அனுபவத்தில் சொல்கிறேன், அனைத்து சிறந்த தலைவர்களும் தங்கள் கரியர் முழுவதும் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். தோனி சிறந்த கேப்டன் மட்டுமல்ல சிறந்த வீரரும் கூட. இந்திய அணிக்காக அவர் வெற்றிகளைக் குவித்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம்’’ என்றார் கிறிஸ்டன்.


‛‛2019 உலக கோப்பையில், தனி ஆளாக ஆட்டத்தை முடித்து வைக்கும் திறமை தோனியிடம் இன்னும் மிச்சம் உள்ளது. இது தெரிந்தும் நீங்கள் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்’’ 
தோனி சிறந்த வீரரா என்ற கேள்விக்கு ‛‛அநேகமாக நான் இந்தியா வரும்போதெல்லாம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக என் பதிலும் மாறவில்லை. நான் பணிபுரிந்த கேப்டன்களில் தோனி சிறந்த கேப்டன். இதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த சாதனைகளே அவர்  பெருமை பேசும். அவர் களமிறங்கும் இடத்தைப் பொருத்து, ஒரு ஃபினிஷராக அவர் சாதனைகளைக் கணக்கிட்டாலே போதும். தோனியின் திறமை மீது சந்தேகிப்பது தவறு  ’’ என்றார்.


தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு ‛‛ஒவ்வொரு வீரருக்கும் ஓய்வு குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் வரும். அணியில் இருக்கலாமா, விலகலாமா என்பதை அந்த வீரர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல, தோனி விஷயத்திலும் அவர் முடிவுக்கே விட்டு விடுவோம்’’ என கிறிஸ்டன் பதிலளித்தார்.


சமீபத்தில் முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் தோனி, நான்காவது இடத்தில் களமிறங்கினார். தொடர்ந்து அவர் டாப் ஆர்டரில் இறங்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.


‛‛எட்டு ஆண்டுகளாக இந்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் அவர் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். அவரால் எந்த இடத்திலும் ஜொலிக்க முடியும். என்னைக் கேட்டால், அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்க வேண்டும். அந்த சூழலில் உலகில் வேறு எந்த வீரரும் அவரைப் போல தனி ஆளாக ஆட்டத்தை முடித்து வைத்ததில்லை. ஆனால், கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்க வேண்டும், களத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டும், சதம் அடிக்க வேண்டும் என்பது தோனியின் விருப்பம். நான் இந்திய அணியுடன் பணியாற்றியபோது, சுழற்சி முறையில் பேட்டிங் ஆர்டரை மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தேன். இதுதான் நம் இடம் என்று நினைக்காமல், சூழலுக்கு ஏற்ப எந்த இடத்திலும் களமறிங்க தயாராக இருக்க வேண்டும் என்று  விரும்பினோம். இந்த விஷயத்தில் தோனி பிரில்லியன்ட். எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமறிங்க தயாராக இருப்பார்’’ என தோனி புராணம் பாடினார் கிறிஸ்டன்.


- தா.ரமேஷ்
   

எடிட்டர் சாய்ஸ்

MUST READ