Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... இது கோலி பிறந்த நாள் #HBDKohli

கோஹ்லி

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியின் போது நடுவிரலைக் காட்டி ரசிகர்களின் கேலிக்கு பதில் சொன்ன இளைஞனை இந்த உலகம் கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு கோபம் ஆகாது என்று விமர்சித்தனர். இங்கிலாந்தில் காதலியோடு சுற்றியதால் ஃபார்ம் இழந்தவர் என்ற போதும் அவர் கோபத்தையே வெளிப்படுத்தினார். இந்த கோபம் இருந்தால் இந்திய கேப்டன் அல்ல, அணியிலேயே இருக்க முடியாது என்றும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இந்த கோபம் தான் கோலியை ஒரே வருடத்தில் நம்பர் 1 வீரனாக்கியது.

ஆம் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் மிஸ்டர் அக்ரஸிவ் என்ற வார்த்தைக்கு சரியான பொருள். 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி ஓய்வை அறிவித்ததும் உடைந்து போனேன் என எமோஷனல் முகம் காட்டிய கோலி, 4-வது டெஸ்ட் போட்டியில் அதிகாரபூர்வ கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அங்கிருந்து தொடங்கிய ஆட்டம் இதுவரை டாப் கியரிலேயே உள்ளது. முழுமையாக கோலி தலைமையில் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இதுவரை ஒரு தொடரைக்கூட இழக்கவில்லை.

ஆசியக்கோப்பை போட்டிகளில் ஆசிய அணிகளைப் புரட்டி போட்டார். உலகக் கோப்பை தோல்விக்கு அனுஷ்காவை திட்டியவர்களுக்கு ''ஷேம்'' போஸ்ட் மூலம் பதிலடி என தனது அக்ரஸிவ் குணத்தை குறைத்துக் கொள்ளாமல் தெறி காட்டியது கோலி ஸ்டைல்.

தென்னாப்பிரிக்காவுடன் தொடர் ஆரம்பிக்கும் முன்னர் தோனி இல்லாத இந்திய‌ அணி சொந்த மண்ணில் டிவில்லியர்ஸ், ஆம்லா என பெரும் தென்னாப்பிரிக்க அணியிடம் மண்ணைக்கவ்வும் என்ற ஆருடத்தை எல்லாம் காலி செய்தார். முடிவு 3-0 என்று தொடர் இந்தியா வசமானதுதான். தொடர்ந்து மே.இ.தீவுகள், நியூஸிலாந்துக்கு வொயிட் வாஷ் என அணியை முதலிடத்திலேயே வைத்திருக்கிறார். 

டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் ஒருநாள், டி20 போட்டிகளில் உலகின் முன்னணி வீரர். ஐபிஎல் போட்டிகளில் ஒரே தொடரில் 900 ரன்களுக்கும் மேல் குவித்து ரன் மிஷினாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார்.

கோபம் தான் பலம்:

கேப்டன் கோலிக்கு அவரது கோபம் தான் பலம் என்பதை உணர்த்தும் சில அக்ரஸிவ் மொமண்ட்ஸ்:

1. ட்ராவை நோக்கி ஆட மாட்டேன்! வெற்றி இல்லை தோல்வி இது தான் முடிவாக இருக்க வேண்டும். தோல்வியை வெறுப்பவன் நான். அதனால் ஆட்டத்தை வெற்றியை நோக்கியே நகர்த்துவேன் என்ற கோலியின் பிரஸ் மீட் பதில்.

2. உள்வட்டத்துக்குள் வீரர்களை கையாளுவது, நீண்ட நேரமாக களத்தில் இருக்கும் வீரரை வீழ்த்த, வீரருக்கு அருகில் பீல்டிங் செட் செய்து தடுமாற செய்வது என களத்தில் ஃபயர் காட்டுவது.

3. ஸ்லெட்ஜிங் செய்தால் பதிலுக்கு முறைப்பதில் தவறில்லை என்ற ஆட்டிட்யூட். இஷாந்த் ஷர்மா இலங்கை தொடரில் அக்ரஸிவாக செயல்பட்டதை கோலி கண்டிக்காமல் இருந்தது தான் 22 ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது. 

4. சுழற்பந்து ஆடுகளங்களில் மட்டுமே இந்தியா ஜெயிக்கிறதா என்ற கேள்விக்கு எங்களை டி20 உலகக் கோப்பையில்  தோற்கடித்த நியூஸிலாந்து அணியில்  சாண்டர் போன்ற ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களால் விக்கெட்டை வீழத்த முடியவில்லை என பதிலடி தந்தது. 

5. பங்களாதேஷ், ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை வீழ்த்தி வம்பிழுத்ததை எல்லாம் மைதானத்தில் ''ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்'' சைகை மூலம் திருப்பி தந்தது.

இந்திய அணியின் குறும்பு பையன், கோபப்படும் இளைஞன் என்ற பெயரை அக்ரஸிவ் தனத்தால் மாற்றி இந்தியா ஜெயிக்க இந்த 28 வயது இளைஞன் கோபப்பட வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கி இந்தியாவையும், தன்னையும் நம்பர் 1 இடத்தில் வைத்திருக்கும் விராட் கோலி ஒரு மாஸ்டர். ஹாப்பி பர்த்டே மிஸ்டர் அக்ரஸிவ்.

- ச.ஶ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ