Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்பந்து உலகக் கோப்பையில் பல்லக்கு மாநகர் வீரர்கள்

கால்பந்து

“விபரம் தெரிஞ்ச காலத்துல இருந்தே ஃபுட்பால்னா எங்களுக்கு உயிர். இதோ இந்த மைதானம் தான் எங்களுக்கு உலகம். எப்பாப் பாத்தாலும் பந்தை உதையுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். பள்ளிக்கூடத்துல உக்காந்திருந்ததை விட, இந்த மைதானத்துல இருந்தது தான் அதிகம். புதுசா பந்து வாங்கல்லாம் வழியிருக்காது. தெருவுல யாராவது வீசியெறியிற கிழிஞ்சு போன பந்தை எடுத்து துணிகளை திணிச்சு தச்சு விளையாடுவோம். நாளாக நாளாக வேறெதுலயுமே நாட்டம் போகலே. எந்த மைதானத்துல ஃபுட்பால் கோச்சிங் நடந்தாலும் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாப்போம்.அவங்க செய்யிறதையெல்லாம் நாங்களும் செய்வோம். சர்வதேச அளவுல நடக்கிற ஒரு கால்பந்து உலகக்கோப்பை டோர்ணமென்ட்ல பெரிய பெரிய வீரர்களோட சேந்து களத்துல நிப்போம்னு கனவுல கூட நாங்க நினைச்சதில்லை..."

நெகிழ்ந்து போய் பேசுகிறார்கள் பார்த்திபனும், சாய்ராமும். மயிலாப்பூர், லஸ்கார்னரை ஒட்டி சிறு சந்துக்குள் இருக்கிற குடிசைமாற்று வாரியக் குடியிருப்பான பல்லக்கு மாநகரில் வசிக்கிறார்கள்.

பார்த்திபனும், சாய்ராமும், வீடற்ற விளிம்புநிலைக் குடும்பத்து விளையாட்டு வீரர்களுக்காக சர்வதேச அளவில் நடத்தப்படும் "ஹோம்லெல் ஃபுட்பால் வேர்ல்டு கப்"டோர்ணமென்ட்டில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார்கள். இப்போது"ஸ்லம் சாக்கர்" என்ற ஃபுட்பால் கிளப்பில் கோச்சாக பணியாற்றுகிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஃபுட்பால் கனவை விதைத்திருக்கிறார்கள்.

சாலையோரத்தில், ஷீட்டால் போர்த்தப்பட்ட ஒற்றை அறை தான் பார்த்திபனின் வீடு.முகப்பில் அம்மா கண்ணகி, டிபன் கடை நடத்துகிறார்.

“பெரிசா கனவுகள்லாம் எங்களுக்கு இல்லை. எங்க வாழ்க்கைத் தரத்துக்கு உறக்கத்துல கூட கனவு வராது. மூணு அக்காக்களோட பிறந்தவன் நான். அப்பா நிறைய குடிப்பார். நான் எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தபோது, மதுவுல ஆசிட் கலந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டார். அதுக்கப்புறம் எல்லாம் அம்மா தான். வீட்டு வேலைக்குப் போய் எங்களை வளர்த்தெடுத்தாங்க. வீட்டு வேலை செய்யிற இடத்துல படிக்க உதவி செஞ்சாங்க. பத்தாவது வரைக்கும் படிச்சேன்.

இந்த பகுதியில நிறைய ஃபுட்பால் பிளேயர்ஸ் இருந்தாங்க. செந்தில், பில்லா, நரசிம்மா,பிரகாஷ், ராஜேஷ், சில்லாச்சி, வெங்கடேஷ்... இவங்கள்லாம் களத்துல நின்னா, யுத்தம் மாதிரி இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேலன்ட் இருக்கும். அவங்களைப் பாத்துதான் ஃபுட் பால் மேல ஆசையே வந்துச்சு. படிக்கிற காலத்துல புத்தகத்தை சுமந்ததை விட பந்தை சுமந்து அலைஞ்சது தான் அதிகம்.

பத்தாவதுக்கு மேல, படிக்கிற சூழல் இல்லை. அம்மாவுக்கு மேலும் மேலும் கஷ்டம் கொடுக்க விரும்பலே. படிப்பை நிறுத்திட்டு ஒரு பேக்கிங் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். ஆனாலும் மனசெல்லாம் ஃபுட் பால் தான். விளையாடனும்..விளையாடிக்கிட்டே இருக்கணும்.

ஞாயிற்றுக்கிழமைகள்ல பீச்சுக்குப் போயிடுவோம். அங்கே சூசைநாதன்னு ஒரு மாஸ்டர் வருவார். நாங்க விளையாடுறதையே கவனிச்சுக்கிட்டு இருப்பார். அவர் தான் எங்களுக்கு முதன்முதல்ல பந்து வாங்கிக் கொடுத்தார். படிப்படியா எங்களுக்கு பயிற்சியும் கொடுக்க ஆரம்பிச்சார். ஃபுட்பாலோட அடிப்படை விஷயங்களை அவர்கிட்ட தான் கத்துக்கிட்டோம்.

கோடம்பாக்கத்துல ஒரு மைதானம் உண்டு. பிரைவேட் ஸ்கூல் பசங்களுக்கு ஃபுட்பால் கோச்சிங் நடக்கும். அங்கேபோய் ஒரு ஓரமா நின்னு, நானும் சாய்ராமும் வேடிக்கை பாப்போம். அந்தப் பசங்க என்னல்லாம் செய்யிறாங்களோ அதையே நாங்களும் செய்வோம். ஒருநாள், அங்கே கோச்சா இருந்த சுப்பிரணியன் சார் எங்களைக் கூப்பிட்டு விசாரிச்சார். "உங்கக்கிட்ட பவர்புல்லான மூவ் இருக்கு. இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டா பெரிய லெவலுக்கு வருவீங்க.."ன்னு சொல்லி எங்களையும் பயிற்சியில சேத்துக்கிட்டார்.

எங்க மைதானத்துல, சீனியர் பிளேயர்ஸ் எல்லாம் வரைமுறை இல்லாம விளையாடுவாங்க. பெரிசா, விதிமுறைகள் எதுவும் அவங்களுக்குத் தெரியாது. நாட்டு அடின்னு சொல்வாங்கள்ல... அந்த மாதிரி. பாலை அடி இல்லேன்னா ஆளை அடி"ங்கிற லெவல்ல தான் விளையாடுவாங்க அதைத்தான் எங்களுக்கு கத்துக்கொடுத்திருந்தாங்க.சுப்பிரமணியன் சார், ஃபுட்பால்ன்னா என்னங்கிற முழுமையை எங்களுக்குக் கத்துக் கொடுத்தார். வார்ம் அப், வார்ம் டவுன் மாதிரி உடற்பயிற்சிகள், டிரிபிளிங் ஸ்கில்,டிபென்ஸ், பினிஷிங் நுட்பங்கள்... எல்லாத்தையும் அவர்கிட்ட கத்துக்கிட்டோம்.

நிறைய உள்ளூர் போட்டிகளுக்கு அனுப்பி வச்சார். சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா,சதர்ன் ரயில்வே டீம்கள்ல கெஸ்ட் பிளையரா விளையாண்டோம். கெஸ்ட் பிளையரா விளையாடுறது ரொம்பவே கொடுமையான விஷயம். நிறுவனங்களோட டீம்ல பிளேயர்ஸ் குறைவா இருந்தா எங்களை கெஸ்டா கூப்பிடுவாங்க. டீம் ஜெயிச்சா போட்டோவுல கூட நிக்க விடமாட்டாங்க. அம்பதோ, நூறோ பேட்டா கொடுத்து அனுப்பி விட்டுருறாங்க. ஆனாலும், கெஸ்ட் பிளேயரா விளையாடுறதே எங்களுக்கு உச்சம் தொட்ட மாதிரி இருந்துச்சு.

என்னோட ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்த அம்மா, "நீ வேலைக்கெல்லாம் போகவேணாம். புட்பாலே விளையாடு, குடும்பத்தை நான் பாத்துக்கிறேன்"னு சொல்லிட்டு வீட்டுக்கு முன்னாடி டிபன் கடை போட்டுச்சு. "ஸ்லம் சாக்கர்" அமைப்போட தொடர்பு கிடைச்ச பிறகு தான் வாழ்க்கை மேலயே நம்பிக்கை வந்துச்சு..." - உற்சாகமாகப் பேசுகிறார் பார்த்திபன்.

வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், மறுவாழ்வு பெற்றவர்களின் பிள்ளைகளுக்கு புட்பால் பயிற்சி கொடுத்து, சர்வதேச தரத்துக்கு அவர்களை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனமே ஸ்லம் சாக்கர். நாக்பூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் விஜய் பார்ஷே (Prof. Vijay Barse) இந்த நிறுவனம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுகிறது. சென்னையில்,அந்நிறுவனம் அடையாளம் கண்ட சிலரில் பார்த்திபன், சாய்ராமும் அடக்கம்.

சாய்ராம், பிபிஏ படித்திருக்கிறார். இவரது தந்தையின் உயிரையும் மது குடித்துவிட்டது.அண்ணன் எலெக்ட்ரீஷியன். அவரின் வருமானத்தில் தான் குடும்பம் நகர்கிறது.

“ஸ்லம் சாக்கர் ஃபுட்பால் கிளப் தொடர்பு கிடைச்ச பிறகு எங்க வாழ்க்கையில நிறைய மாற்றங்கள். புதுசு புதுசா பந்துகள் தந்தாங்க. ஷூ, பனியன், கோச்சிங்ன்னு எல்லாம் கிடைச்சுச்சு. இண்டர்நேஷனல் கோச்களோட பயிற்சியும் கிடைச்சுச்சு. ஒவ்வொரு வருஷமும் நேஷனல் லெவல்ல ராஜீவ்காந்தி மெமேரியல் டோர்ணமென்ட் நடக்கும். 2015ல தமிழ்நாட்டு டீம்ல எங்க ரெண்டு பேருக்கும் இடம் கிடைச்சுச்சு. நேஷனல் லெவல்ல விளையாடினது புது எக்ஸ்பீரியன்ஸா இருந்துச்சு. ஆனாலும் என்னால,பெரிசா விளையாட முடியலே. ஆனா, பார்த்திபனுக்கு நெதர்லாந்துல நடந்த "ஹோம்லெஸ் வேர்ல்டு கப்" டோர்ணமென்ட்டுக்கான இந்திய டீம்ல இடம் கிடைச்சுச்சு. 64 நாடுகள் கலந்துக்கிட்ட அந்த டோர்ணமென்ட்ல 4-வது இடத்துக்கான கப் இந்தியா டீமுக்குக் கிடைச்சுச்சு.

பார்த்திபன் தான் எனக்கு ரோல்மாடல். எவ்வளவோட தடைகள், அவமானங்கள் வந்தபோதெல்லாம் மனம் தளமார ஃபுட்பாலை சுமந்துக்கிட்டு திரிஞ்சான். அவனைப் பாத்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டிருக்கேன். எந்த ஒரு வாய்ப்புக் கிடைச்சாலும் தனக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் அதை கொண்டு வந்து சேர்ப்பான். நிறைய நுணுக்கங்களை எனக்குக் கத்துக்கொடுத்தான். அவனோட வழிகாட்டுதல்ல 2016க்கான நேஷனல் டோர்ணமென்ட்ல விளையாட எனக்கு வாய்ப்புக் கிடைச்சுச்சு. அதுல தமிழ்நாடு டீம் வின் பண்ணுச்சு. அதுக்குப் பரிசா, வேர்ல்டு கப் டோர்ணமென்ட்க்கான இந்தியன் டீம்ல என்னைச் சேர்த்தாங்க. ஸ்காட்லாந்துல நடந்த அந்த டோர்ணமென்ட்ல மிட்பீல்டரா களத்துல இறங்கினேன். ஆனாலும் இந்தியாவுக்கு 24-வது இடம் தான் கிடைச்சுச்சு.." என்கிறார் சாய்ராம்.

பார்த்திபனும், சாய்ராமும் இப்போது ஸ்லம் சாக்கரில் கோச்சாக இருக்கிறார்கள்.சென்னை முழுவதும் குப்பங்கள், குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

“குப்பத்துல பெறந்தா, லோடு ஆட்டோ ஓட்டுறவராவோ, டிரை சைக்கிள் மிதிக்கிறவராவோ தான் செத்துப்போகனுங்கிற நிலை இனிமே இல்லை. "ஸ்லம் சாக்கர்"மாதிரி குப்பத்து திறமைசாலிகளை கண்டுபிடிச்சு மேல கொண்டு வர நிறைய பேர் இருக்காங்க. பொதுவா, இந்தியாவோட மெயின் டீம்ல விளையாடனுன்னா, சின்ன வயசுல இருந்து தயாராகனும். அண்டர் 12, அண்டர் 14... எல்லாம் விளையாண்டு தான் மெயின் டீமுக்கு போகமுடியும். ஆனா, துரதிஷ்டவசமா எங்களுக்கு 17 வயதுக்கு மேல தான் வெளியில வரவே வாய்ப்புக் கிடைச்சுச்சு. இப்போ எங்க இலக்கு, சிறுவர்கள். நாங்க எப்படி பந்தை சுமந்துக்கிட்டே திரிஞ்சோமோ, அப்படி இன்னைக்கு நிறைய பசங்களைப் பாக்குறோம். அவங்களை தீவிரமா தயார் பண்றோம். அண்மையில, சரண்ராஜ்ன்னு ஒரு தம்பி, ஸ்பெயின்ல நடந்த டொனாஸ்டி கப் (Donosti cup) டோர்ணமென்ட்ல அன்டர் 12 இந்திய டீம்ல விளையாடிட்டு வந்திருக்கான். அடுத்த பத்து வருஷத்தில உலகக்கோப்பை விளையாடப் போற இந்தியன் டீம்ல பல்லக்கு மாநகர்ல இருந்தோ, நொச்சிக்குப்பத்துல இருந்தோ ஒரு வீரன் நிச்சயம் இடம் பெறுவான். அதுதான் எங்க இலக்கு..." என்று உறுதி தொனிக்கச் சொல்கிறார்கள் பார்த்திபனும், சாய்ராமும்.

- வெ.நீலகண்டன்

படங்கள்: கிரண்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close