Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ)

 

ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல்.

 

 

மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார்.

ஆட்டத்தின்  37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அணியினர் ராபினை சுற்றி வளைத்து கீழே தள்ளி விட்டனர். அப்போது எதிரணி வீரர்களின் கை ராபின் கண் மீது பட்டது. வலியால் துடித்த அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். ஸ்ட்ரெச்சர் மூலம் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் இடது கண்ணில் பேண்டேஜ் ஒட்டி இருந்தனர். அதில் இருந்து ரத்தம் கசிந்ததால், பார்வை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

 

 

 

உடனடியாக அவர் ரசிகர்கள், ராபின் கண்ணில் ரத்தம் கசியும் படத்தை சோசியல் மீடியாவில் பரப்பினர். மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்தச் செல்வது வரையிலான வீடியோவும் வைரலானது. ‛உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தாலும், அவரால் பார்க்க முடியாது’ என்று துருக்கி பத்திரிகைகள் வெளியிட்டன.

ஆனால், அவர் பார்வை பாதிக்கப்படவில்லை என கிளப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‛கண் மருத்துவர்களிடம் ஆலோசித்ததில், பயப்படும்படி எதுவும் இல்லை. அவர் பார்வை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்’ என்றார் கிளப் டாக்டர் புரக் குண்டுயுராசியக். 

-தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ