Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெர்த் மண்ணில் ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட 21 வயது பவுலர்!

ஆஸ்திரேலியா

டிவில்லியர்ஸ் இல்லை, ஸ்டெயினுக்கும் காயம், அணியின் நிலைமையோ மோசம். ஆனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம் எனச் சொல்லி  ஆஸ்திரேலியாவுடனான  மேட்சை தலைகீழாக திருப்பிப்போட்டு ஜெயித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. 

ஆஸ்திரேலியா நாட்டுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வந்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில், கடந்த வியாழன் அன்று  புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. எகிறும் பவுன்சர்கள், ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்,  ஆதரவுக்கு அற்புதமான பேட்ஸ்மேனும் இல்லை என்ற நிலையில் முதல் இன்னிங்ஸில் 32/4 என ஒடுங்கியது தென்னாபிரிக்கா. முதல் ஒரு மணிநேரத்திலேயே தென்னாபிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெவிலியனுக்கு அணிவகுக்க  

தெம்பா பவுமாவும், விக்கெட் கீப்பர் டீ காக்கும் இணைந்து சரிவில் இருந்து மீட்டனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாபிரிக்க அணியின் ஸ்கோர் 242. பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடிக்கலாம் என நினைத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு பவுண்டரிகளாக விளாசி நிம்மதியைக் கலைத்தார் வார்னர். முதல் நாள்  ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்திருந்தது.

 ஆஸ்திரேலியா

நானூறு நிச்சயம், ஐநூறும் சாத்தியம். தென்னாப்பிரிக்கா தடுமாறும் என ஆரூடம் சொன்னார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். இரண்டாம் நாள் காலையில் வார்னரை அவுட்டாக்கிய கையோடு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்தே விலகினார் ஸ்டெயின். பெர்த் என்றாலே வேகப்பந்தின் சொர்க்கபுரி தான். தென்னாப்பிரிக்க அணிக்கு வேகப்பந்து என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டெயின் தான். பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் அற்புதமாக பேட்டிங் செய்பவர் டிவில்லியர்ஸ். பேட்டிங் சூப்பர் ஸ்டாரும் இல்லை, பவுலிங் சூப்பர் ஸ்டாரும் இல்லை என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா மேட்சை டிரா செய்வதற்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும் என எல்லோரும் கணித்திருந்தார்கள். 

இங்கே தான் டிவிஸ்ட் வைத்தார் தென்னாப்பிரிக்காவின் நவீன மகாயா நிதினி. ஸ்டெயின் காயம் ஏற்பட்டுச் சென்றவுடன் ஆக்ரோஷமாக பந்துவீசினார்  ககிஸோ ரபாடா. அனல் பறக்கும் அவரது வேகப்பந்தில் ஸ்டம்புகள் சிதற கவாஜா அவுட்டானார். ஆடம் வோக்ஸோ பந்துவீசிய ரபாடாவிடமே கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்ட, கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை சத்தமின்றி  பிலாந்தரும், மகராஜும் பெவிலியன் அனுப்பி வைத்தார்கள். 157  ரன் வரை ஒரு விக்கெட் கூட இழந்திராத ஆஸ்திரேலியா அடுத்த 87 ரன்களுக்கு பத்து விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்காவை விட இரண்டு ரன்கள் கூடுதலாகவே எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 

மைதானம்  ஒன்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை, நல்ல பேட்டிங் பிட்ச் தான், எத்தகையக இலக்காக இருந்தாலும் எங்களால் சேஸ் செய்து விட முடியும் என உசுப்பேற்றினார் வார்னர். குக் 12 ரன்னிலும், ஆம்லா ஒரு ரன்னிலும் அவுட் ஆனாலும், டீன் எல்கரும், டுமினியும் இணைந்து வேற லெவல் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார்கள். நல்ல பந்துகளுக்கு சரியான மரியாதையைத் தருவது, தவறான பந்துகளைத் தண்டிப்பது என கச்சிதமாக ஆடியது இந்த இணை. இரண்டு பேரும் இணைந்து இருநூற்றி ஐம்பது ரன்கள் குவிக்க, 141 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட்டானர் டுமினி. டெஸ்ட் மேட்ச்சுக்கு லாயக்கில்லை, ஒழுங்காக விளையாடுவதில்லை, அணியை விட்டுத்தூக்க  வேண்டும் என்ற விமர்சனங்கள்  எழுந்த நிலையில் இப்படியொரு  அதிரடி சதம் விளாசி தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் டுமினி. 

டுமினி சென்ற பிறகு  எல்கரும் 127 ரன்னில் அவுட்டானார். 352/6 என்ற நிலையில் இருந்து டீ காக் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரு அற்புதமான அரைசதம் எடுத்தார். பிலாந்தர், மகராஜ் கூட்டணி பேட்டிங்கிலும் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு குடைச்சல் கொடுத்தனர். பிலாந்தர் 73  ரன்னும், மகராஜ் 41  ரன்னும் குவித்திருந்தனர். தென்னாப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 540 ரன்கள் எடுத்தது. 539  ரன்கள் எடுத்தால் வெற்றி  எனும் எவரெஸ்ட் இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

 

அடித்து ஆடிய  வார்னரை அபாரமாக  ரன் அவுட் செய்தார் தெம்பா பாவுமா. அண்ணன் தம்பி ஷான் மார்ஷ் - மிட்சேல் மார்ஷ், கேப்டன் ஸ்மித், ஆடம் வோக்ஸ், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோரை அபாரமாக பந்து வீசி அவுட்டாக்கினார் ரபாடா. 361  ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தெம்பாக தொடரை ஆரம்பித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.  21 வயதாகும் ரபாடா இந்த டெஸ்ட் போட்டியில் அருமையான லைன் அண்ட் லெந்தோடு வீசியதோடு  ஸ்விங்கும் செய்தார். வாசிம் அக்ரமை நினைவுபடுத்துவது போல இருந்தது ரபாடாவின் பந்துவீச்சு. வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் வெறும்  இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை அடங்கியிருப்பது மிகப்பெரிய சாதனை.

 

 

 

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் அந்த நாட்டில் அந்த அணியை வெல்வது எந்தவொரு அணிக்கும் மிக கடினமான விஷயம். கடந்த நான்காண்டுகளாக ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதே கிடையாது. நான்காண்டுகளுக்கு முன்னதாக இதே பெர்த் மைதானத்தில் டிவில்லியர்ஸின் மறக்க முடியாத ஒரு அபாரமான இன்னிங்ஸால் நம்ப முடியாத தோல்வி அடைந்தது  ஆஸ்திரேலியா. நான்கு வருடத்துக்கு பிறகு மீண்டும் நம்பமுடியாத ஒரு தோல்வியை ஆஸ்திரேலியாவுக்கு பரிசாக வழங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. பெர்த் ஆடுகளத்தை பொறுத்தவரை இதுவரை தென்னாப்ரிக்காவும், ஆஸ்திரேலியாவும் நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கின்றன. மூன்றில் தென்னாப்ரிக்கா வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது. இதையடுத்து பெர்த்தில் தோற்றதேயில்லை என்ற பெருமையைத் தக்க வைத்திருக்கிறது தென்னாபிரிக்க அணி. 

 

அடுத்த போட்டி ஹோபர்ட்டில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கியுள்ள நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் தொடரை வெல்ல முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா. அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை ஜெயித்து காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் தென்னாபிரிக்கா களமிறங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்த ஆரோக்கிய போட்டி தான் நல்லது.

- பு.விவேக் ஆனந்த்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close