Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்று அழுதனர்... இன்று சிரிக்கின்றனர்... அர்ஜென்டினாவை இப்படித்தான் வென்றது பிரேசில்!

பிரேசில்


கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் எனில், கால்பந்துக்கு அர்ஜென்டினா - பிரேசில். இவர்கள் மோதல் எப்போதுமே சுவாரஸ்யம். பக்கத்துப் பக்கத்து நாடுகள். பரம விரோதம். இன்று நேற்றல்ல, பீலே - மரடோனா காலத்தில் இருந்தே. 2014 ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை ஃபைனலில்,  அர்ஜென்டினா - ஜெர்மனி மோதின. அர்ஜென்டினாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, ஜெர்மனியின் ஜெர்ஸி அணிந்து, மரக்கானா ஸ்டேடியத்தை நிறைத்தனர் பிரேசில் ரசிகர்கள். அப்படி இருக்க பிரேசில் - அர்ஜென்டினா மோதுகிறது, அதுவும் தங்கள் சொந்த மண்ணில் எனும்போது விடுவார்களா பிரேசில் ரசிகர்கள்? 

எப்போது பிரேசில் - அர்ஜென்டினா மோதினாலும், அந்த ஆட்டத்தில் அனல் பறக்கும். அப்படியொரு ஆட்டத்தை நேற்று எதிர்பார்த்திருந்தனர் பிரேசில் ரசிகர்கள். ரஷ்யாவில் 2018 ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில், ஒரே குருப்பில் உள்ள பிரேசில் - அர்ஜனெ்டினா அணிகள் நேற்று மோதின.

கோபா அமெரிக்க தோல்விக்குப் பின் ஓய்வு அறிவித்த மெஸ்சி, மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினாலும், பிரேசிலுக்கு எதிராக அவர் எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது. அதை விட, பார்சிலோனா கிளப் அணியில் தன்னுடன் கைக்கோத்து திரிந்த நெய்மரை, மெஸ்சி மிஞ்சுவாரா என கால்பந்து உலகம் பரபரத்துக் கிடந்தது. ஆனால், ஒரு கோல், ஒரு கோல் அடிக்க உதவி என சகல விதங்களிலும் சொந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் நெய்மர். மெஸ்சிக்கு மீண்டும் சோகம். 

Messi


எல்லாவற்றையும் விட போட்டி நடந்த மைதானம், பிரேசிலுக்கு ரொம்பவே ஸ்பெஷல். பெலோ ஹரிஸான்டே நகரில் உள்ள மீனிரோ மைதானத்தில்தான், உலக கோப்பை அரையிறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில்  பிரேசிலை, வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது ஜெர்மனி. பிரேசில் அணி மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடும் கதி கலங்கி நின்றது. இது, பிரேசில் கால்பந்து வரலாற்றிலேயே மோசமான தோல்வி என எழுதித் தீர்த்தனர். 

மாதிரி உலகக் கோப்பையை மார்புடன் கட்டி அணைத்து, ’இதைத் தர மாட்டேன்’ என  அழுதார் ஒரு மீசைப் பெரியவர். அவர் மட்டுமல்ல அரை நூாற்றுண்டுக்குப் பின் சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்ல கிடைத்த வாய்ப்பு நழுவி விட்டதாக ஒட்டுமொத்த நாடே அன்று அழுதது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அங்கு நடக்கும் பெரிய சர்வதேச போட்டி என்பதால், பிரேசில் - அர்ஜென்டினா மோதலுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு. இந்த முறை ரசிகர்களை அழ விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் பிரேசில் வீரர்கள். 

அர்ஜென்டினா, முதல் 20 நிமிடங்களுக்கு கட்டிக் காத்த அரணை தகர்த்தார் பிலிப்பி கூடினியோ. 25வது நிமிடத்தில் ரைட் விங் திசையில் இருந்து நெய்மர் கொடுத்த பாஸை வாங்கிய கூடினியா, பெனால்டி பாக்ஸுக்கு சில அடிகள் வெளியே இருந்தே பவர்ஃபுல் ஷாட் மூலம் கோல் அடித்தார். அர்ஜென்டினா டிஃபண்டர்கள் விக்கித்து நின்றனர். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. 

எங்கே தப்பு நடந்தது என யோசித்து அர்ஜனெ்டினா வீரர்கள் சுதாரிப்பதற்குள் பிரேசில் அடுத்த கோலை அடித்தது. இது நெய்மர் முறை. கோல் அடித்த நெய்மரை விட, அந்த பாஸ் கொடுத்த  மிட்ஃபீல்டர் கேப்ரியல் ஜீசஸ்தான் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அர்ஜென்டினாவின் நான்கு டிஃபண்டர்களின் கண்ணிலும் (கால்) விரலை விட்டு ஆட்டும் விதத்தில் கேப்ரியல் கொடுத்த டிஃபன்ஸ் ஸ்ப்லிட்டிங் பாஸை, நேர்த்தியாக வாங்கி, ரெண்டே டச்சில் பந்தை கம்பத்துக்குள் அடித்தார் நெய்மர். மஞ்சள் சீருடையில் மைதானம் எங்கும் நிரம்பி இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து அடங்கினர்.  முதல் பாதி முடியும் தருணத்தில் அடிக்கப்பட்ட அந்த கோலின் உதவியுடன் பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. 

‛இரண்டாவது கோல் அடிக்கப்பட்டபோது எங்கள் கதை முடிந்து விட்டது’ என போட்டி முடிந்த பின் பேட்டியளித்தார் அர்ஜென்டினா வீரர் மெஸ்சி. அவர் சொன்னது போல, இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவுக்கு பெரிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு, 59வது நிமிடத்தில் பாலினியோ தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, அப்போதே அர்ஜென்டினாவின் கதை முடிந்தது. இருந்தாலும், 90 நிமிடங்கள் முடிவதற்காக காத்திருந்தனர்.  முடிவில் 3-0 என பிரேசில் வெற்றி. நீண்ட நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் பரம எதிரியை பழி வாங்கிய திருப்தியில் வீடு திரும்பினர் பிரேசில் ரசிகர்கள். இந்த முறை புன்னகையுடன். 

இந்த வெற்றியின் மூலம் 24 புள்ளிகளுடன், முதலிடத்துக்கு முன்னேறியது பிரேசில். ஆனால், 16 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள அர்ஜென்டினா, ஆறாவது இடத்தில் உள்ளது. தென் அமெரிக்க குரூப் சுற்றில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும். ஐந்தாவது இடம் பிடிக்கும் அணி, ஓசினியா குரூப்பில் வென்ற அணியுடன் பிளே ஆஃப் சுற்றில் விளையாட வேண்டும். தற்போது பிரேசில் சேஃப் ஜோனில் உள்ளது. அர்ஜென்டினாவுக்குத்தான் சிக்கல். இருந்தாலும், இன்னும் ஏழு போட்டிகள் இருக்கே என தெம்பாக உள்ளார் மெஸ்சி. 

- தா.ரமேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ