Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த மண்ணில் கேரளா கெத்து... மீண்டும் சென்னை ஏமாற்றம்! #ISL

ஐ.எஸ்.எல். சென்னை

சென்னைக்கு எதிரான ஐ.எஸ்.எல். லீக் போட்டியில்,கடைசி ஐந்து நிமிடத்தில் அடுத்தடுத்து வினீத் இரண்டு கோல்கள் அடித்து உதவ, சொந்த மண்ணில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கேரளா.

கொச்சியில் அரங்கம் நிறைந்த ஜவஹர் லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை நடந்த ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்.சி. மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் மோதின. இரு அணிகளும் இதற்கு முன் சென்னையில் தீபாவளி அன்று மோதின. அந்த ஆட்டம் கோல் லெஸ் டிரா ஆனது. இதனால் சொந்த மண்ணில் எப்படியும் வென்றாக வேண்டும் என வெறித்தனத்துடன் இருந்தது கேரளா.

டிஃபண்டராக இருந்த மெண்டியை லெஃப்ட் விங் திசையில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது,  பயிற்சியாளர் மார்கோ மடராயின் மாஸ்டர் மூவ்களில் ஒன்று. அதற்கு 22வது நிமிடத்தில் ரிசல்ட் தெரிந்தது. மைதானத்தில் நடுவில் இருந்து சக வீரர் கொடுத்த பாஸை, லெஃப்ட் விங் திசையில் இருந்த சென்னை கேப்டன் மெண்டி, லேசாக டிரிபிளிங் செய்து கோல் நோக்கி அடித்தார். அது கேரளா டிஃபண்டர் மீது பட்டு கோல் ஆனது. ஒட்டுமொத்த அரங்கமும் விக்கித்து நின்றது. சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

 

ஐ.எஸ்.எல். சென்னை

முதல் பாதி முடிய ஒரு நிமிடமே இருந்தபோது, பெனால்டி பாக்ஸில் அனைத்து டிஃபண்டர்கள் மற்றும் கோல் கீப்பரை கடந்து வந்த டூடு, கோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பந்து இலக்கின்றி பாய்ந்தது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கார்னர் கிக், இலக்கை நோக்கி ஷாட் அடித்தது இவ்வளவு ஏன் foul செய்வதிலும் கூட சென்னையின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது.

இடைவேளைக்குப் பின் கேரளா ஒரு முடிவுடன் களமிறங்கியது. பந்து கிடைத்தால் யோசிக்காமல் அட்டாக்கிங்கில் ஈடுபட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டனர். அதற்கு பலனாக, 51வது நிமிடத்தில் கேடியாவுக்கு கிடைத்த வாய்ப்பு கோல் ஆகவில்லை. அடுத்த நிமிடத்தில் கேரளா வீரர் அன்டோனியா ஜெர்மன் லெஃப்ட் விங்கில் பந்துடன் வருவதை அறிந்த சென்னை கோல் கீப்பர் கெர், பெனால்டி பாக்ஸை விட்டு வெளியே வந்து கிளியர் செய்ய முயன்றார். அப்போது இருவரும் மோதி கீழே விழுந்தனர். ரெஃப்ரி, ஜெர்மனுக்கு எல்லோ கார்டு காண்பித்தார்.

 

60வது நிமிடத்தில் …கேரளாவின் வினீத் லெஃப்ட்டில் இருந்து அடித்த கிராஸ், சென்னை ரைட் பேக் வடூவின் உடம்பில் பட்டு கோல் நோக்கி பாய்ந்தது. உஷாராக இருந்த சென்னை கோல் கீப்பர் டைவ் அடித்துப் பிடித்து விட்டார். இல்லையெனில் கேரளா கோல் அடித்திருக்கும்.

ஐ.எஸ்.எல். சென்னை

67 வது நிமிடத்தில் கேரளா கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. லெஃப்ட் விங்கில் இருந்து ஜெர்மன் டிரிபிளிங் செய்து கொண்டே வந்தார். சென்னை டிஃபண்டர்கள் யாரும் அவரை டேக்கிள் செய்யவில்லை. இதை சரியாகப் பயன்படுத்தி நேர்த்தியாக பாஸ் கொடுத்தார் ஜெர்மன். அதை நொடியும் தாமதிக்காது ஒரே டச்சில் கம்பத்துக்குள் அடித்தார் மாற்று வீரராக வந்த கேடியோ. 1-1 என ஆட்டம் சமநிலை அடைந்தது. இந்த உற்சாகத்தில் அடுத்த பத்து நிமிடங்கள் ஆர்ப்பரித்தனர் கேரளா ரசிகர்கள்.

உடனடியாக பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை கோச், 70வது நிமிடத்தில் சென்னை கேப்டன் மெண்டிக்குப் பதிலாக பல்ஜித் சஹ்னியை இறக்கினார். ஆட்டம் முடிய பத்து நிமிடங்களே இருந்தபோது, டுடு அடித்த ஷாட்டை சந்தேஷ் ஜிங்கன் தடுத்து கேரள ரசிர்களிடம் அப்ளாஸ் அள்ளினார்.

85வது நிமிடத்தில் கேரளா மீண்டும் ஒரு கோல் அடித்தது. லெஃப்ட் விங்கில் இருந்து கேரள வீரர் கொடுத்த கிராஸை, சென்னை கோல் கீப்பர் கெர் கலெக்ட் செய்ய முயன்றார். பந்து அவர் கையில் பட்டு ரிபவுண்ட்ஆனது. அதை சென்னை டிஃபண்டர் கிளியர் செய்ய முயன்றார். ஆனால்,  பந்து அவரை ஏமாற்றி கேரளாவின் வினீத்திடம் சென்றது. சுதாரிப்புடன் இருந்த வினீத் அப்படியே பந்து வந்த வேகத்தில் பறந்தபடி ஷாட் அடித்து அதை கோலாக மாற்றினார்.

 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 89வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார் வினீத். சக வீரர் மைதானத்தின் நடுவில் இருந்து கொடுத்து பாஸை ரைட் விங் திசையில் இருந்து வாங்கிய வினீத், விறுவிறுவென கோல் நோக்கி நகர்ந்தார். அப்போது சென்னை டிஃபண்டர்கள் அனைவரும் பெனால்டி பாக்ஸுக்கு வெளியே இருந்தனர். கோல் கீப்பரும் கூட வெளியே வந்து விட்டார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அட்டகாசமாக கோல் அடித்தார் வினீத். கேரளா 3-1 என முன்னிலை பெற்றது.

இதற்கு சென்னையால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில் கேரளா சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் கேரளா புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. சென்னை 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. 

சென்னையின் பயிற்சியாளர் மார்கோ மடராஸிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளா ரசிகர்கள், ஃபிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் ஜினாடின் ஜிடான் முகமுடி அணிந்து மைதானத்துக்கு வந்திருந்தனர். 

சென்னை

 

- தா.ரமேஷ் 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close