Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்பந்து அரங்கில் கரீபியப் புயல்: உசேன் போல்ட் 2.0!

10 நொடிகள் மட்டுமே ஓடி உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த மனிதன், இனி 90 நிமிடங்கள் நிற்காமல் ஓட எத்தணித்து நிற்கிறார். 4 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் உலகை ஆட்சி புரிவதில் அவருக்கு இனி விருப்பமில்லை. ஒவ்வொரு வாரமும் தலைப்புச் செய்தியாக வலம் வர விரும்புகிறார். 9 ஒலிம்பிக் தங்கங்கள் போதாமல், பாலன் டி ஓர், கோல்டன் பூட் போன்ற விருதுகளையும் தன் அலமாரியில் அடுக்கி வைக்கக் காத்திருக்கிறார். யாருப்பா அது மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் சவால் விடுவது என்று யோசிக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல, உங்கள் விழித்திரைகளை 10 நொடிகள் வரை உறையவைக்கவல்ல ஓட்டப்பந்தய அசுரன் உசேன் போல்ட் தான் அது!

ஒலிம்பிக் என்னும் மாபெரும் சரித்திரப் புத்தகத்தின் அட்டைப்படம், நடுப்பக்கம் என அனைத்தையும் சொந்தமாக்கியாயிற்று. உலகின் தலைசிறந்த தடகள வீரன் என்னும் பெருமையையும் தன்பின்னால் சுற்ற வைத்தாயிற்று. பல்வேறு விருதுகள், பெயர், புகழ் என அனைத்தையும் சுவைத்தாயிற்று. 2017-ம் ஆண்டோடு ஓய்வையும் அறிவித்தாயிற்று. ஆடிய கால்கள் கூட நின்று விடும். ஆனால் வாழ்க்கை முழுக்க ஓடிய கால்கள் அவ்வளவு எளிதில் சும்மா இருந்துவிடுமா என்ன? வயதும் 30களைக் கடந்துவிட்டதால், அதே வேகத்தில் ஓடுவது என்பது சற்று கடினமான விஷயம் தான். அதனால் டிராக்கிலிருந்து ஓய்வு பெறுவது என்பது சரியான முடிவு தான். ஆனால் மொத்தமாக தன் கால்களுக்கு ஓய்வு கொடுக்க அவர் விரும்பவில்லை.

‘போக்கிரி’ பட பிரகாஷ் ராஜ் சொல்றது மாதிரி. போல்டுக்கு, “ஓடுறது பிடிக்கும். ஓடுறது பிடிக்கும், ஓடுறது தான் பிடிக்கும்” போல. தன் ஓட்ட நேரத்தை 9 நொடிகளிலிருந்து 90 நிமிடமாக எக்ஸ்டெண்ட் செய்யப் போகிறார் போல்ட். ஆம் அடுத்து அவர் களமிறங்கும் களம் கால்பந்து!

போல்டைப் பொறுத்தவரையில் ஓட்டப்பந்தயம் மட்டுமல்லாது கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும் திறமையானவர். அதிலும் கால்பந்தின் மீது அதீத காதல் கொண்டவர். புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடட் அணியின் தீவிர ரசிகர். 2011ம் ஆண்டு மான்செஸ்டர் அணி சாம்பியன்ஸ் லீக் பைனலில் விளையாடுவதைப் பார்க்கச் சென்றிருந்த போல்ட், தடகளப் போட்டிகளில் தான் ஓய்வு பெற்ற பிறகு, மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக விளையாட விரும்புவதாக அப்போதே தெரிவித்திருந்தார்.

அதற்கான நேரம் வெகுவிரைவில் வரவுள்ளது. போல்டின் இரண்டாவது சீசன் இப்போது தொடங்கியுள்ளது. ஆனால் அவர் ஆசைபட்ட மான்செஸ்டர் யுனைடட் அணியிலல்ல. ஜெர்மனியில். ஜெர்மனியின் முன்னணி அணியான பொருசியா டார்ட்மென்ட் அணியினரோடு சேர்ந்து கால்பந்து பயிற்சியில் விரைவில் களமிறங்கவுள்ளார் போல்ட். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் தாமஸ் டகெலின் தலைமையின்கீழ் கோட்சே, அபாமயாங் உள்ளிட்ட பிரபல வீரர்களோடு  அவர் பயிற்சி மேற்கொள்ளப் போகிறார்.

“ஜெர்மனியில் பயிற்சி மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றேன். ஒருநாள் மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக விளையாடினால், எனது நீண்ட நாள் கனவு நிறைவேறும். அது அரங்கேறினால் சிறப்பாக இருக்கும்” என்று போல்ட் தெரிவித்தார்.

போல்ட் போன்ற வீரர் அணியிலிருப்பது எந்த அணிக்கும் மிகப்பெரிய பலம் தான். கால்பந்து மைதானத்தின் நீளமும் 100-110 மீட்டர் என்பதால் கண்ணிமைக்கும் நொடியில் பந்து இந்த போஸ்டிலிருந்து அந்த போஸ்டுக்குச் சென்றுவிடும். பொதுவாகவே அதிவேகமான கால்பந்து வீரர்கள் எதிரணி வீரர்கள் அனைவருக்கும் பெரும் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள். ரொனால்டோ, காரெத் பேலே, ராபன் போன்ற வீரர்களின் சக்செஸ் ஃபார்முலா அவர்களின் வேகம் தான். அவர்களைப் போல் போல்டாலும் ஒரு மிகச்சிறந்த விங்கராக வலம் வர முடியும்.

போல்டின் அடுத்த அவதாரத்திற்கு அனைவரும் வெயிட்டிங். வந்துட்டான்னு சொல்லு. பீஜிங், லண்டன், ரியோவ விட்டு எந்த வேகத்துல போனானோ, அதே வேகத்துல ஃபுட்பால் கிரவுண்ட்ல கால்பதிக்க போல்ட் வந்துட்டான்னு சொல்லு!

- மு.பிரதீப் கிருஷ்ணா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ