Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சானியா சந்தித்த ஐந்து சவால்கள்! #HBDSaniaMirza

டென்னிஸ் என்றாலே உலக அரங்கில் இந்தியாவின் முகம் சானியா மிர்ஸா தான்.  ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அவர் மிகக் கடுமையாக போராடியிருக்கிறார் இந்த தில் லேடி. சிறுவயதில் இருந்து இப்போது வரை சானியா சந்தித்த ஐந்து சவால்கள் இவை.

சானியா

1.ஆறு வயதில்  இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா . அவரது ஆரம்பகால பயிற்சியாளரே  அவரது அப்பா இம்ரான் மிர்சா தான்  . 90 களின் ஆரம்பத்தில் இந்தியாவே சச்சின் வருகையால் கிரிக்கெட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க, ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டே வளர்த்தார் இம்ரான் . பள்ளிப்பருவத்தில்  வகுப்பில் இருந்த நேரத்தை விட கிரவுண்டில் இருந்த நேரம் தான் அதிகம். ஆனால் சானியா  டென்னிசில்  மட்டுமல்ல வகுப்பிலும் நல்ல ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். டென்னிஸ் தொடர்களில் ஜொலிக்க வேண்டுமென்றால் திறமை மட்டும் போதாது பணமும் வேண்டும், ஏனெனில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவேண்டி நேரிடும், தங்கும்  ஹோட்டல், சாப்பாடு ஆகியவற்றுக்கு பெருந்தொகை செலவிட நேரிடும். தனது அப்பாவுக்கு  சிரமத்தைக் குறைப்பதற்காக, நிறைய ஸ்காலர்ஷிப்கள் பெறுவதற்காகவே  தினமும் கூடுதல் நேரம் உழைத்து  படிப்பிலும் கில்லியாக இருந்தார் . ஒரு நல்ல விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் எக்காரணமும் படிப்பை விடக்கூடாது, நன்றாக படிக்கவும் செய்து, விளையாடவும் செய்தால் பணச்சுமையை எளிதில் தகர்க்கமுடியும் "என்பது  சானியா அட்வைஸ்.

2. தனது 16 வயதில், இளம்பெண்கள் இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் டைட்டில் வென்றார் . பெயர் பத்திரிகைகளில்  அடிபடத் தொடங்கவே சானியா மீது பலர் கவனம் குவித்தனர்.  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி குட்டை பாவாடை அணிந்து விளையாடலாம் என சிலர் சர்ச்சைகளை கிளப்ப,   லைம் லைட்டுக்கு வந்தார், அந்த சர்ச்சைக்கு பிறகு சானியா மிர்சா விளையாடும் போட்டிகளை பலர் உற்று நோக்கத் தொடங்கினார்கள். "நான் போட்டியில் வென்றால், நான் அணிந்திருப்பது ஆறு இன்ச் உடையா, ஆறடி உடையா என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்  ஆனால் தோற்றுவிட்டால் அடுத்த மூன்று நாட்களுக்கு உடை குறித்து சர்ச்சை கிளப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான்  தீர்மானிப்பேன் " என துணிச்சலாக பதிலளிக்க இந்தியா முழுவதும் சென்சேஷன் ஆனார் . ஒரு பெண், பல தடைகளை கடந்து டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெயர் வாங்கித்தரும் வேளையில் கிளாமர் கிராமர் குறித்த வகுப்பெடுப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது சானியாவின் துரதிர்ஷ்டம்.

சானியா

3. குஷ்பு ஒருமுறை திருமணத்து முந்தைய உடலுறவு குறித்து பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது. அச்சமயத்தில் சானியாவின் கருத்து  என்ன என பத்திரிகையளர்கள் கேட்க, " திருமணத்துக்கு முன்போ, பின்போ எதுவாக இருந்தாலும் பாதுக்காப்பான உடலுறவு இருப்பது அவசியம்" என்றார். ஏனெனில் அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் குறித்த பேச்சுகள் ஊரெங்கும் நிரம்பியிருந்தது. சிலர் சானியாவின் கருத்தை சர்ச்சையாக்கி, திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஆதரிக்கிறார் என செய்திகள் பரப்ப, நாடெங்கும் சானியாவின் உருவ  பொம்மைகள் எரிக்கப்பட்டது, அதன் பின்னர் "எக்காலத்திலும் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை  நான் ஆதரிக்க மாட்டேன், கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என அவர்  விளக்கம் கொடுத்த பின்னர் தான் பிரச்னை ஓய்ந்தது.

சானியா

4. சானியா மிர்சாவுக்கு அவரது பள்ளிப்பருவ நண்பர் சொஹ்ரப் மிர்சாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நின்று போனது. அதன் பின்னர் யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார் சானியா. சானியா பாகிஸ்தான் மருமகள் இந்தியாவுக்காக விளையாடக்கூடாது என பல அமைப்புகள் மீண்டும் சர்ச்சையை கிளப்ப நான் முதலில் 'இந்தியாவின் மகள்' இந்தியாவுக்காகத் தான் விளையாடுவேன் என பேட்டி தட்டி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மிர்சா .

சானியா

5. சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி,  புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர்  'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும்  'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம், அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால்  ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும்  தாண்டி  2-வது இன்னிங்ஸில், உச்சம்  தொட்டிருக்கிறார் சானியா. திருமணத்துக்குப் பிறகு ஒற்றையர் பிரிவில் விளையாடுவதால் பல காயங்கள் ஏற்படவே ஒற்றையர் போட்டிகளுக்கு முழுமையாக முழுக்கு போட்டார். முன்கையில்  பலம் அதிகம். கிரவுண்ட் ஸ்ட்ரோக்கில்  கில்லி என்பதால் இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உயரம் தொட முடியும் என்பதை உணர்ந்து கடைசி இரண்டு ஆண்டுகளாக இரட்டையர் பிரிவில் விளையாடி  தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். 83 வாரங்களாக இரட்டையர் பிரிவில் உலக அரங்கில் முதலிடத்தில் இருக்கும் சானியாவுக்கு இன்றோடு முப்பது வயது நிறைவடைகிறது.

இந்தியாவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 

பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close