Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புனேவை புரட்டி எடுத்த சென்னை... அரையிறுதிக்கு போகுமா? #ISL

சென்னை

சொந்த மண்ணில் நடந்த ஐ.எஸ்.எல். லீக் போட்டியில் புனேவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை. 

சென்னை நேரு மைதானத்தில்  இன்று நடந்த ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்.சி., புனே சிட்டி அணிகள் மோதின.  போன மேட்ச் கேரளாவிடம் செமத்தியாக அடி வாங்கியிருந்ததால் இந்த மேட்ச்சில் சென்னை வெல்ல வேண்டிய கட்டாயம். சொந்த மண் என்பது கூடுதல் நெருக்கடி. தோற்றால் அரையிறுதி வாய்ப்பு நழுவும். சென்னை கோச் மார்கோ மடராசி  என்ன பிளான் வைத்திருக்கிறாரோ என்ற ஆவலில் மைதானத்துக்கு வந்திருந்தனர் 19,773 ரசிகர்கள்.  

ஐந்து இந்தியர்கள், ஆறு ஃபாரின் பிளேயர்ஸ் என மடராசி பிளெயிங் லெவனை தேர்வு செய்த விதம் அவர் சீரியஸாக இருப்பதை உணர்த்தியது. இந்தமுறையும் மண்ணின் மைந்தன் தனபால் கணேஷ், மோகன்ராஜ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டனர். புனே தரப்பில் ரைட் பேக் ராவணனும் ஸ்டார்டிங் லெவனில் இல்லை. ஆக, இரு அணியிலும் தமிழக வீரர்கள் இல்லை. மேட்ச் நடந்தது சிங்கார சென்னையில்.

எட்டாவது நிமிடம். ரஃபேல் அகஸ்டோ மிட் ஃபீல்டில் புகுந்து விளையாடி ஜெஜேயிடம் பாஸ் கொடுத்தார். அதை அப்படியே ஷாட் அடித்திருக்கலாம். அவர் என்ன நினைத்தாரோ ரைட் விங்கில் வந்த அகஸ்டோவிடம் பாஸ் செய்தார். அகஸ்டோ தன் பங்குக்கு டிரிபிளிங் செய்து, சூச்சிக்கு பக்கவாக செட் செய்து கொடுத்தார். நொடி நேர தாமதம். பந்து சூச்சியிடம் சிக்கவில்லை. வைட் பால் போல இலக்கின்றி பறந்தது பந்து. மைதானத்தில் இருந்து ஏமாற்ற சத்தம்.

இன்றைய நாள் ரபோல் அகஸ்டோ தினம் போல. 21வது நிமிடத்தில் டிரிபிளிங் செய்து 30 யார்டு தூரத்தில் இருந்து ஷாட் ஆன் டார்கெட் பறக்க விட்டார். அது எங்கோ பறந்தது. இம்முறையும் ரசிகர்கள் ஏமாற்றம். அடுத்த இரண்டு நிமிடங்களில் மைதானத்தின் பாதியில் இருந்து பந்தைக் கொண்டு வரத் தெரிந்த டேவிட் சூச்சிக்கு, இரு புனே வீரர்கள் சுற்றி வளைத்ததும் உள்ளுக்குள் உதறல். ரைட் சைடில் வந்த அகஸ்டோவுக்கு பாஸ் கொடுக்கவும் முடியவில்லை, ஒரே மூச்சில் இலக்கை நோக்கி ஷாட் அடிக்கவும் வழியில்லை. உப்புக்கு சப்பானியாக அடித்த ஷாட்டைப் பார்த்து ‘poor shot’ என ரசிகனிடம் இருந்து வந்தது ஒரு கமென்ட்.

அரை மணி நேர ஆட்டத்தில் புனேக்கு ஒரு கோல் வாய்ப்புதான் வந்தது. அதுவும் ஃப்ரீ கிக். அதை ராட்ரிகஸ் வீணடித்தார். அடுத்த நிமிடம் சென்னைக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. திடீரென மைதானத்தில் ஹோவென சத்தம். என்னவென்று பார்த்தால் அந்த செட் பீஸை எடுக்க தயாராகி இருந்தார் சென்னை கேப்டன் பெர்னார்டு மெண்டி. நம்ம வீட்டுப் பிள்ளை எடுத்த அந்த ஷாட்டை அலேக்காக தட்டி விட்டார் புனே கோல் கீப்பர் எடெல் பெடே. வெரி டேஞ்சரஸ் கோல் கீப்பர் அவர்.

நாற்பதாவது நிமிடத்தில் இருந்து ஆட்டத்தில் அனல். போதாக் குறைக்கு கார்னர் கிக் கிடைத்தற்கெல்லாம் கத்தி தீர்த்தனர் ரசிகர்கள். அதற்கு 45வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ரைட் விங்கில் இருந்து ஜெர்ரி கொடுத்த கிராஸ் பெனால்டி பாக்ஸில் இருந்த அகஸ்டோவிடம் பட்டு சிதற, அங்கே தயாராக இருந்த ஜெஜே லாவகமாக ஒரு முட்டு முட்டினார். பந்து கம்பத்தின் வலது மூலையில்  தஞ்சமடைந்தது. அசையாமல் அதிசியத்து நின்றார் எடெல் பெடே.  இடைவேளைக்கு முன் 1-0 என சென்னை முன்னிலை பெற்றதை, அப்படி கொண்டாடினர் ரசிகர்கள்.

இடைவேளைக்குப் பின் இன்னும் உக்கிரமாக இருந்தது சென்னையின் ஸ்ட்ரைக். 51வது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து அகஸ்டோ பெர்ஃபெக்டாக ஒரு கிராஸ் கொடுத்தார். அதை சிரமமே படாமல் ஜஸ்ட் லைக் தட் என தலையால் முட்டி கோல் அடித்தார் சூச்சி. 2-0 என சென்னை முன்னிலை. மீண்டும் கொண்டாட்ட சத்தம் விண்ணை முட்டியது. பயிற்சியாளர் ஹபாஸ் உள்பட புனே வீரர்கள் முகத்தில் சோகம் படர்ந்தது. கிட்டத்தட்ட சென்னை வெற்றி அப்போதே உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அஃபீசியல் டைம் வரை விளையாட வேண்டிய சூழல். கடைசி வரை புனே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 

முடிவில் சென்னை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் 13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

-தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ