Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிக்கெட் மைதானத்தில் சேட்டை காட்டிய நாய்க்கு டிவிட்டரில் அக்கவுன்ட்!

நாய்

புஜாராவும், கோஹ்லியும்   சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் ஒன்று இடத்தை கலகலப்பாக்கியது. கிரிக்கெட் கிரவுண்ட் மட்டுமின்றி இணைய கிரவுண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது அந்த நாய் குறித்து தான் பேச்சு. டிவிட்டர் வாசிகள் இன்னும் ஒரு படி மேலே  போய்  அந்த நாய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதகளம் செய்திருக்கிறார்கள். இது #vizagdog என்ற ஹாஷ்டாகில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.கான்பூரை போல புட்கள் இருக்கும் பிட்ச் இல்லாமல், பந்துகள் திரும்பும் வகையிலான பிட்ச் அமைக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

நாய்

கம்பீர், அமித் மிஸ்ரா ஆகியோர் நீக்கப்பட்டு ராகுல் மற்றும் ஜெயந்த் யாதவுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கம்பீருக்கு மாற்றாக களமிறங்கிய ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். முரளி விஜய் வழக்கத்துக்கு மாறாக ஆரம்பத்திலேயே பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் இங்கிலாந்து அணியில் வோக்ஸ்சுக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய ஆண்டர்சன், முரளி விஜய்யை ஷார்ட் பால் வீசி அவுட்டாக்கினார். ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானதை நம்பவே முடியாமல் முரளி விஜய் வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 22/2. 

அதன் பின்னர் புஜாரா, கோஹ்லி இருவரும் இணைந்தனர். முதல் ஒரு மணி நேரத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனதால், ஆண்டர்சன் பந்துகளை கவனமாக ஆட வேண்டும் என்பதை இருவரும் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் விராட் கோஹ்லி ஆண்டர்சன் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசியதும், ஆண்டர்சனை நிறுத்திவிட்டு 11வது ஓவரிலேயே சுழற்பந்தை அறிமுகப்படுத்தினார் குக். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து விட்டது.

ரஷீத், அன்சாரி பந்துகளில் பவுன்ஸ் இருந்ததே தவிர, பந்துகள் சரியாக திரும்பவில்லை, இதனை சாதகமாக மாற்றிக்கொண்ட கோஹ்லியும், புஜாராவும் சீராக ரன்களை குவிக்க துவங்கினார்கள். பிராட், ஆண்டர்சன் பந்துகளை தவிர மீதி பந்துவீச்சாளர்களை மிகவும் லாகவமாக கையாண்டார்கள். உணவு இடைவெளி வரை 92 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது இந்தியா.  உணவு இடைவெளிக்கு பிறகு புஜாரா, கோஹ்லி இருவரும் தங்களுக்கே உரிய பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடத் துவங்க, டிராவிட்- சச்சின் இணையை நியாபகப்படுத்துவது போன்ற ஒரு அட்டகாசமான இன்னிங்ஸ் இந்தியாவுக்கு கிடைத்தது.

நாய்

 இருவரில் யார் முதலில் சதமடிக்கப்போகிறார்கள் என்ற ஆர்வம்  ரசிகர்களிடையே  ஏற்பட்டது. அப்போது புஜாரா 97  ரன்னிலும், கோஹ்லி 91 ரன்னிலும் இருந்தார்கள். 57வது ஓவரின் போது நாய் ஒன்று மைதானத்துக்குள் புகுந்தது. பாதுகாவலர்கள் அந்த நாயை விரட்ட, அந்த நாயோ அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து மைதானத்துக்குளேயே மீண்டும்  ஓட ஆரம்பித்தது. இன்னும் 3-5 ஓவர்கள் வரை வீசலாம் என்ற நிலை இருந்தபோதும், நாய் இடையூறு ஏற்படுத்தியதை காரணமாக காட்டி தேநீர் இடைவேளை விடப்பட்டது. 

இருவரின் சதங்களை பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள்  தேநீர் இடைவேளையால் உற்சாகம் இழந்தனர். அந்தச் சமயத்தில் தான டிவிட்டரில்  #vizagdog என்ற ஹாஷ்டாக் தயாரித்து டிவிட்ட ஆரம்பித்தனர். இதில் யாரோ ஒரு குறும்பு ரசிகர் நாய்க்கு டிவிட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்ய, அது வைரலாக ஆரம்பித்தது.

நாய்

தேநீர் இடைவெளிக்கு பிறகு புஜாரா ஒரு அபாரமான சிக்ஸர்  அடித்து சதத்தை பூர்த்தி  செய்தார்.  டெஸ்ட் போட்டிகளில் எப்போதாவது தான் சிக்ஸர் அடிப்பார் புஜாரா. 39 டெஸ்ட் போட்டிகள் வரை ஐந்து சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருந்த புஜாரா இன்று மட்டும் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அதிலும் சிக்ஸர் வைத்து செஞ்சுரி போட்டது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் புஜாரா சதம் அடித்து சாதனை புரிந்திருக்கிறார். புஜாராவைத் தொடர்ந்து ஐம்பதாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் கோஹ்லி தனது 14 வது சதத்தை நிறைவு செய்தார். அதன் பின்னர் புஜாரா 119  ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரஹானேவும் 23 ரன்னில் ஆண்டர்சனிடம் அவுட்டானார். முதல் நாள் முடிவில் 317-4 எடுத்துள்ளது இந்தியா. கோஹ்லி 151  ரன்னுடன் இரட்டை சதத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறார், அஷ்வின் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

நாய்

மைதானம் பெரிய அளவில் சுழற்பந்துக்கு இதுவரை ஒத்துழைக்க வில்லை, பொறுமையாக ஆடினால் இந்த மைதானத்தில் இந்தியாவால் இன்னும் 150 -200  ரன்கள் வரை சேர்க்க முடியும். நாளை காலை முதல் ஒரு மணிநேரத்தில்  ஆண்டர்சனின் இன்ஸ்விங்களில் தப்பித்து,  நிலைத்து நின்று விளையாடினால்இந்தியா நல்ல முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை  அடைய முடியும். ஐநூறு ரன்கள் என்ற இமாலய இலக்கை தொட்டு விட்டால் இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுப்பது மட்டுமின்றி இந்த டெஸ்ட் போட்டியை இந்தியா தனது வசப்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். 

- பு.விவேக் ஆனந்த்.

 

 

எடிட்டர் சாய்ஸ்