Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நன்றி, நன்றி, நன்றி... கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பேச்சு! (வீடியோ)

ரொனால்டோ


கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து உலகின் காந்த சக்தி. கோல் அடித்தாலும் சரி, மிஸ் செய்தாலும் சரி... அவர் என்ன செய்தாலும் அது வைரல். யூரோ கோப்பை சாம்பியன் ஆனதும், டிரஸ்ஸிங் ரூமில் அவர் எமோஷனலாக பேசிய வீடியோ, கால்பந்து உலகின் தற்போதைய ஹாட் டாபிக்.

பாரிஸில் நடந்த 2016 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ஃபைனலில்  ஃபிரான்ஸை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல். வெற்றிக்கான கோல் அடித்த போர்ச்சுகல் வீரரை (எடெர்) நாம் மறந்திருப்போம். ஆனால்,  அன்று ரொனால்டோ செய்த அழிச்சாட்டியங்கள் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியது அல்ல.

 ஆட்டம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார் ரொனால்டோ. சிகிச்சைக்குப் பின் களம் திரும்பியபோதும், அவரால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. வலி பின்னி எடுக்க, கால்களை நீட்டி, கண்ணில் நீர் தேக்கி அமர்ந்தார். அப்போது அவர் கண்ணில் பூச்சி அமர்ந்தது. அதைக் கூட விரட்டாமல் அழுது கொண்டே இருந்தார். இனி ஆட வாய்ப்பில்லை என்பதால், ஸ்ட்ரெச்சரில் ரொனால்டோவை தூக்கிச் சென்றபோது, அவரை பிடிக்காதவர்களும் பரிதாபப்பட்டனர். அடுத்த அரை மணி நேரத்தில், டெக்னிக்கல் லைனில் இருந்தபடி, பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார். இறுதியில் போர்ச்சுகல் வென்றதும், கொண்டாடித் தீர்த்தார் ரொனால்டோ.
அதே சூட்டுடன் டிரஸ்ஸிங் ரூமில் ஒரு எமோஷனல் ஸ்பீச் கொடுத்தார். அன்று ரொனால்டோ பேசியதை, போர்ச்சுகல் கால்பந்து சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இங்கே...

 

ரொனால்டோ பேசியது:

முதற்கண் இங்கே நின்றிருக்கும்  இந்த மனிதருக்கு (பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ்) நன்றி. அவர் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. அடுத்ததாக, வீரர்கள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப் உள்ளிட்ட இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அனைவருக்கும் நன்றி. போர்ச்சுகல் கோப்பை வெல்லும் என்பதை யாரும் நம்பவில்லை. ஆனாம், நாம் இப்போது சாம்பியன் . எல்லோரும் சேர்ந்து இதை நிறைவேற்றி இருக்கிறோம்.

நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று. தனிப்பட்ட முறையில் நான் வாங்கிய கோப்பைகள், சாம்பியன்ஸ் லீக் டிராபி இவை எல்லாவற்றையும் விட இந்த வெற்றி மகத்துவனமானது. இது கிடைக்கவில்லை என ஏற்கனவே நான்கு முறை அழுதுவிட்டேன். அமைதியாக இருக்குமாறு என் சகோதரன் சொன்னான். ‛என்னால் அப்படி இருக்க முடியாது...’ என சொன்னேன்.

இந்த கோப்பை தான் கை நழுவிக் கொண்டே இருந்தது. இப்போது கிடைத்து விட்டது. என் மனது நிறைந்திருக்கிறது. அடிமனதில் இருந்து சொல்கிறேன் நான் சந்தோஷமாக இருக்கிறேன். இதையே நூறு முறை சொல்வேன். 

அனைத்து வீரர்களுக்கும், உதவியாளர்களுக்கும் நன்றி. மீண்டும் ஒரு முறை பயிற்சியாளருக்கு  நன்றி. நீங்கள் (பயிற்சியாளர்)அணியின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. நாம் இப்போது யூரோ சாம்பியன். இந்த வெற்றிக்கு நாம் தகுதியானவர்கள்.  இந்த கோப்பையை வென்ற முதல் போர்ச்சுகல் அணி நாம்தான்’ என ரொனால்டோ பேசி முடித்ததும், ஒட்டுமொத்தமாக அனைவரும் ஆர்ப்பரித்தனர்.  


- தா.ரமேஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close