Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கப்பற்படையினருடன் ஒரு காஃபி... போர்க்கப்பலுக்கு சென்ற அஷ்வின்...

 

அஷ்வின்

விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த வெற்றியை  அஷ்வின், கப்பற்படையினருடன் கொண்டாடினார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு இன்னிங்சிலும் சேர்த்து அஷ்வின் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  போட்டி முடிந்த திங்கள்கிழமை இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்குச் செல்ல, அஷ்வின் மட்டும் வேறொரு இடத்துக்குச் சென்றிருந்தார். அந்த இடம் விசாகப்பட்டினத்தில் உள்ள, ஐ.என்.எஸ். ஜலஷ்வா என்னும் போர்க்கப்பல்.

போர்க்கப்பலுக்கு சென்ற அஷ்வினுக்கு கப்பற்படை உயர் அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா, வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதிகாரிகள் மற்றும் கப்பற்படை வீரர்களுடன் பேசிய அஷ்வின், அவர்களுடன் காஃபி குடித்தார்.

ஏன் அஷ்வினை மட்டும் தனிப்பட்ட முறையில் அழைத்தீர்கள் என கேட்டதற்கு தாஸ்குப்தா சொன்ன பதில், ‛‛அஷ்வின் எங்களை சந்திக்க ஆசைப்பட்டார். அவர் சிறந்த வீரர். அவர் எப்போதுமே, நாட்டுக்காக சேவை செய்யும் வீரர்களை மதிப்பவர். அவர் இங்கு வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லும் விதமாக, பிரதமர்  #Sandesh2Soldiers என்ற பிரசாரத்தைத் தொடங்கினார். அதில் பங்கேற்ற அஷ்வின், ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி, அவர்களுடன் காஃபியை பகிர்வது போன்ற வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கனவை நனவாக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதைப் பார்க்கிறோம்’’ என்றார். 


‛‛உண்மையாகவே, களத்தில் போராடும் இந்த ரியல் ஹீரோக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இங்கு வந்தேன். சென்னை வெள்ளத்தின்போது பாதுகாப்புப் படையினர் எப்படி மக்களைக் காப்பாற்றினர் என்பதை நான் அறிவேன். எப்போதுமே அவர்கள் தியாகத்தை மதிக்கிறேன். உண்மையிலேயே போர்களில், சண்டைகளில் எப்படி வெல்வது என்று தெரிந்து வைத்திருக்கும் வீரர்களுடன், டெஸ்ட் மேட்ச் வெற்றி குறித்து பேசுவது, உண்மையிலேயே எனக்கு பெருமை அளிக்கிறது. நமக்காக போராடும் இந்திய கப்பற்படை மற்றும் ஆயுதப்படையினருக்கு நன்றி’’ என்றார் அஷ்வின். 


இந்த சந்திப்புக்குப் பின் தனிப்பட்ட முறையில், கிழக்கு கப்பற்படை கமாண்டோ கிரிக்கெட் அணியினருடன், கிரிக்கெட் குறித்து பேசிய அஷ்வின், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்கள் நீட்டிய காஃபி  கோப்பையில் ஆட்டோகிராப் போட்டார். 
அங்கிருந்து புறப்படும் முன் விசிட்டர்ஸ் டைரியில் ‛இந்த இடத்துக்கு வந்து கப்பற்படையினருடன் கலந்துரையாடி, காஃபி குடித்ததை பெருமையாக கருதுகிறேன். தீபாவளி அன்று ஆயுதப்படை வீரர்களுடன்  காஃபியை பகிர்வது போன்ற வீடியோவை வெளியிட்டேன். இன்று அது நனவானதில் மகிழ்ச்சி’’ என எழுதிவிட்டுப் புறப்பட்டார். 

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ