Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முடிவுக்கு வருகிறதா கெளதம் காம்பீரின் இன்னிங்ஸ்?

 

கம்பீர்

தோல்வியை நினைத்து வெற்றியாளர்கள் பயப்பட மாட்டார்கள். தோல்வி என்பது வெற்றிக்கான முயற்சிகளின் ஒரு அங்கமே. தோல்வியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெற்றியையும் தவிர்க்கிறார்கள். - ஒரு வாரத்துக்கு முன்பு, ட்விட்டரில் இதை ரீவிட் செய்திருந்தார் கவுதம் கம்பீர். நேற்று அவரை இந்திய அணியில் இருந்தே நீக்கி விட்டது தேர்வுக்குழு. இது கங்குலிக்கு முன்பே புரிந்திருக்கிறது. அதனால்தான் விசாகப்பட்டினம் டெஸ்டில் கம்பீரை உட்கார வைத்து விட்டு, ராகுலை தேர்வு செய்தபோது கங்குலி இப்படிச் சொன்னார்...

''கெளதம் கம்பீர் விஷயத்தில் இந்திய அணி முடிவெடுத்தாக வேண்டும். உண்மையிலேயே அவர் விளையாட வேண்டும் என நினைத்தால், விராட் கோஹ்லியும், அனில் கும்ப்ளேவும் சேர்ந்து அவரிடம் , ‛ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மனதில் வைத்து விளையாடாதே.  எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடு. நாங்கள் இருக்கிறோம்’ என சொல்ல வேண்டும்'' என கங்குலி பரிதாபப்பட்டார். 


நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த கம்பீர், நியூஸிலாந்து டெஸ்ட் தொடரின்போது  அணிக்குத் திரும்பினார்.  அதுவும் லோகேஷ் ராகுல், ஷிகர் தவன் காயமடைந்ததால்... இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டிலும் கம்பீர் அணியில் இருந்தார். முதல் டெஸ்டில் அவர் அடித்த ரன்கள் 29,0. இது அடுத்த டெஸ்டிலேயே எதிரொலித்தது. அந்த சமயம் பார்த்து  ராகுல் காயத்தில் இருந்து திரும்பியதால்,  விசாகப்பட்டினம் டெஸ்டில் கம்பீரை பெஞ்சில் உட்கார வைத்து விட்டரா் கோஹ்லி. ரீ என்ட்ரிக்குப் பிறகு கம்பிர் நான்கு இன்னிங்சிலும் சேர்த்து நூறு ரன்கள் கூட அடிக்காததால், இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.


கம்பீர் நீக்கம் என்ற செய்தி வெளியானதுமே, ‛End of Gambhir?‛ என கிரிக்கெட் ரசிகர்களின் வாட்ஸ் அப் குரூப்கள் கேள்விகள் எழுப்ப... அடுத்த நொடியே ‛Almost' என்ற பதில் வந்தது. இதை ஒரு வாரத்துக்கு முன்னாடியே கணித்திருந்தார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே.


நிச்சயமாக, இனி கம்பீர் இந்திய அணிக்கு திரும்ப முடியாது. காரணம் அவர் வயது 35. ஓபனிங் மேட்ஸ்மேன்கள் இரண்டு பேருமே காயம் அடைந்தால் மட்டுமே ஒருவேளை வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் கூட வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில், புஜாராவை ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்க ரெடியாக இருங்கள் என சொல்லி வைக்கப்பட்டுள்ளது. 


இந்திய அணியில் இருந்து கம்பீர் நீக்கப்பட்ட செய்தி வெளியான செவ்வாய்க்கிழமை  அவர், ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுதாக குணமடைந்து விட்டதால், மீண்டும் இந்திய அணியில் ஜொலிக்கலாம் என்ற கனவுடன் இருந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை அவர் வெறுமனே  3.4 ஓவர்கள் மட்டுமே களத்தில் தாக்குப்பிடித்தார்.  அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூமில் அப்செட்டில் இருந்தபோதுதான்  இந்த செய்தியும் வந்தது. அடுத்தடுத்து அதிர்ச்சி. 

எந்த வீரரும் அரைகுறை காயத்துடன் அணிக்குத் திரும்பக் கூடாது.  இந்த விஷயத்தில் பயற்சியாளர் கும்ப்ளே தெளிவாக இருக்கிறார். அதனால்தான், முழுதாக காயத்தில் இருந்து மீளும் வரை உள்ளூர் தொடர்களில் பங்கேற்குமாறு ஷிகர் தவனுக்கு அறிவுறுத்தி உள்ளனர். கம்பீர் நீக்கத்துக்கு நிச்சயம் காயம் மட்டுமே காரணம் இல்லை. கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தவில்லை.  அட்லீஸ்ட் ஒரு சதம் அடித்திருந்தாலும், இங்கிலாந்து சீரிஸ் முடியும் வரையாவது அணியில் இருந்திருக்கலாம். 


என்னதான் கோஹ்லியின் பிறந்தநாளில் கம்பீர் வாழ்த்து சொன்னாலும், அதற்கு கோஹ்லி நன்றி சொன்னாலும், இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை. அதை விட, கம்பீர் போன்ற சீனியர்களை மேய்ப்பது சிரமம் என்பது கோஹ்லிக்கு நன்றாகவே தெரியும். கே.எல்.ராகுல் சர்வ சாதாரணமாக கம்பீரை ஓவர்டேக் செய்வார் என்பதும் கோஹ்லிக்கு தெரியும். அதனால்தான் ராகுலை வளர்த்து விடும் விதமாக கம்பிருக்கு ‛Exit’ வழியைக் காட்டி விட்டனர்.  


‛சேவாக் ஓய்வு பெற்றதும் என்னில் ஒரு பகுதியை இழந்து விட்டதாக உணர்ந்தேன்’ என்றார் கம்பீர்.  இப்போது தன்னையே இழந்து நிற்கிறார். ஆம், காலம் கம்பீரின் முடிவுரையை எழுதி விட்டது. டெஸ்டில் மட்டுமில்லை. ஒருநாள், 20-20 அணிக்குத் திரும்புவதும் நிச்சயம் சாத்தியமில்லை.

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ