Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்த்திவ் படேல் அதிர்ஷ்டம்... ரிஷப் பன்ட் துரதிர்ஷ்டம்... இது பி.சி.சி.ஐ. கேம்!

பார்த்திவ் படேல்


அ.தி.மு.க.வும், பி.சி.சி.ஐ.யும் ஒன்னு. யாருக்கு எப்போது வாய்ப்பு கொடுப்பார்கள் என  யாருக்குமே தெரியாது. கோடிகளைக் கொடுத்து எம்.எல்.ஏ. சீட்டுக்கு ஒருவர் தவம் கிடப்பார். மறுபுறம் சம்மந்தமே இல்லாத ஒருவர் எம்.பி. ஆக்கப்படுவார். அ.தி.மு.க.வில் இப்படி எனில், கிரிக்கெட்டில் ஒருத்தன் உயிரைக் குடுத்து டொமஸ்டிக் போட்டியில் சதம் அடித்துக் கொண்டே இருப்பான், சத்தமே இல்லாமல் இன்னொருவனை இந்திய அணியில் சேர்த்து விடும் இந்திய கிரிக்கெட் போர்டு.

அப்படி பி.சி.சி.ஐ. கொடுத்த சமீபத்திய ஷாக், பார்த்திவ் படேல் வரவு. எட்டு ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம். அதைவிட கொடுமை அவர் சர்வதேச போட்டியில் விளையாடியே (அட்லீஸ்ட் தண்ணீர் பாட்டில் தூக்கியே) நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. 

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில், விக்கெட் கீப்பர் ரித்திமான் சாகா இடது தொடையில் காயம் ஏற்பட்டது. எனவே, அவருக்கு மாற்றாக பார்த்திவ் படேலை சேர்த்துள்ளனர் தேர்வுக்குழுவினர்.  அந்த அறிவிப்பு இன்றுதான் வந்தது. இங்கதான் இன்னொரு டவுட்.

 ‛ஏம்பா... சாகா இஞ்சுரின்னு உங்களுக்கு நேத்தே தெரியாதா? நேத்துதானே, டீம் அறிவிச்சிங்க. என்னதான் ஆச்சு உங்களுக்கு? டீம் செலக்ட் பண்ணும்போது செலக்டர்ஸ், டீம் மேனேஜ்மென்ட்ல பேசுறது இல்லையா? மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் செக் பண்ணுவிங்களா, மாட்டிங்களா?' என வரிசையாக கேள்விகளை அடுக்குகிறார்கள் ரசிகர்கள்

பார்த்திவ் படேலை தேர்வு செய்வதற்கு முன், நமன் ஓஜாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஏனெனில் அவர்தான் கடந்த முறை சாகா காயம் அடைந்தபோது மாற்றாக வந்தார். ஆனால், நமன் ஓஜாவும் தற்போது காயத்தில் இருக்கிறார். தினேஷ் கார்த்திக் டீசன்ட் ஃபார்மில் இருக்கிறார். அவர் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணியில் இடது கை ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர் இருப்பதால், விக்கெட் கீப்பராக இருப்பவர் இடது கை பேட்ஸ்மேனாக இருந்தால் நன்றாக இருக்கும் என பார்த்திவ் படேல்  பெயர் டிக் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த ரஞ்சி டிராபி சீசனில் டெல்லி அணிக்காக முச்சதம், 48 பந்துகளில் அதிவேக சதம், இரட்டைச் சதம் என விட்டு விளாசும்,  19 வயது இளைஞன் ரிஷப் பன்ட் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதை வசதியாக மறந்து விட்டனர் தேர்வுக் குழுவினர். ( ஐ.பி.எல்லிலும் கவனிக்கத்தக்க பெர்ஃபார்மென்ஸை கொடுத்தார்)

 

பார்த்திவ் படேல்

ஆஸ்திரேலியாவைப் போல நீண்ட கால செயல் திட்டத்தின் அடிப்படையில், இந்திய அணியும் இளம் வீரர்களை உருவாக்க வேண்டும். ஏனெனில், இப்போது இந்தியாவில் பிரபல விக்கெட் கீப்பர்களாக இருக்கும் தினேஷ் கார்த்திக் (31), ரித்திமான் சாகா (32), நமன் ஓஜா (31), பார்த்திவ் படேல் (31) ஆகிய நால்வருமே 30 வயதைக் கடந்தவர்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும்  3 ஆண்டுகளுக்கு மேல் அவர்களால் டெஸ்ட் விளையாட முடியாது. எனவே, ரிஷப் பன்ட் போன்ற இளம் வீரர்களுக்கு இப்போதிருந்தே வாய்ப்பு கொடுக்க வேண்டும். உடனடியாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடர்கள் இல்லாததால்,  சொந்த மண்ணில் நடக்கும் தொடர்களில் இளம் வீரர்கள் தங்களை மெருகேற்றவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதையும் தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொள்ளவில்லை. 

பார்த்திவ் படேல்,  2002ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முதல்  இளம் விக்கெட் கீப்பர்  (17 ஆண்டுகள், 153 நாட்கள்)  என்ற பெயர் பெற்றார்.  அநேகமாக, மொகாலி டெஸ்டில் அவர் களமிறங்கும்போது, அணியில் இருக்கும் இரண்டாவது சீனியர் வீரர் இவராகத்தான் இருக்கும். தோனியின் வளர்ச்சி, ஃபார்ம் இன்மை சேர்ந்து வதைக்க நடுவில் காணாமல் போய் இருந்த பார்த்திவ்,  ஐ.பி.எல். சமயங்களில் மட்டும் தலை காட்டுவார். ஆனாலும், டொமஸ்டிக் மேட்ச்களில் தொடர்ந்து விளையாடிக் கொண்டேதான் இருந்தார்.

இந்த ரஞ்சி சீசனில் முதல் எட்டு இன்னிங்சில் 415 ரன்கள் அடித்துள்ள பார்த்திவ் படேலின் ஆவரேஜ் 59.28. இதில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிராக அடித்த சதம் (139*) மற்றும் மூன்று அரைசதம் அடக்கம். கடைசியாக 2008 ல் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் விளையாடிய அவர், 8 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம், கும்ப்ளே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆம், அந்த டெஸ்ட் போட்டியின் கேப்டன் கும்ப்ளே. இன்று அவர் பயிற்சியாளர். 

ஒரு வகையில் இது பார்த்திவ் படேலின் அதிர்ஷ்டம். ரிஷப் பன்ட்டின் துரதிர்ஷ்டம். இன்னும் காலம் இருக்கிறது ரிஷப்.

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ