Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடப்பு சாம்பியன் சென்னை மீண்டும் ஏமாற்றம்! #ISLupdate

சென்னை

மும்பைக்கு எதிரான ஐ.எஸ்.எல். போட்டியில், நடப்பு சாம்பியனுக்கு உரிய எந்த அறிகுறியும் இல்லாது விளையாடிய சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் மும்பை 2-0 என வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது.

மும்பையில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். லீக் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் புள்ளிகள் பட்டியலில் மும்பை 19 புள்ளிகளுடன் ஜம்மென முதலிடத்திலும், சென்னை 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருப்பதால், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இறங்கியது சென்னை.

ஆனால், முதல் பாதியில் அதற்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேநேரத்தில் மார்க்கீ வீரர் டீகோ ஃபோர்லன், இந்திய அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி மற்றும் ஃபெடரிகோ என கோல் அடிக்க ஒரு பட்டாளமே இருந்தபோதும், மும்பை அணியால் முதல் அரை மணி நேரம் கோல் அடிக்கவில்லை.

ஒருவழியாக அரை மணி நேரம் கழித்து, 32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கியது மும்பை. சென்னை அணியின் பெனால்டி பாக்ஸுக்குள் புகுந்த மும்பை ஸ்ட்ரைக்கர்கள், ஒருவருக்கொருவர் மாறி மாறி பாஸ் செய்தனர். ரைட் விங்கில் இருந்த சுனில் சேத்ரி நேர்த்தியாக தன் சக வீரர் ஃபெடரிகோவுக்கு செட் செய்து கொடுக்க அதை அவர், சென்னை டிஃபண்டர்களை கடந்து எளிதாக கோல் அடித்தார்.

44வது நிமிடத்தில் மும்பைக்கு ஒரு ஃப்ரி கிக் கிடைத்தது. 30 யார்டு தூரத்தில் இருந்து அடித்த டீகோ ஃபோர்லன் அடித்த ஷாட்டை, சென்னை கோல் கீப்பர் பாய்ந்து தடுத்தார். முதல் பாதியில் சென்னை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என மும்பை முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் சென்னை அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது. இருந்தாலும், மும்பைக்குத்தான் அதிர்ஷ்டம் இருந்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மும்பை மீண்டும் ஒரு கோல் அடித்தது. ரைட் விங்கில் இருந்து சக வீரர் கொடுத்த பாஸை  மார்பில் வாங்கி கோல் அடித்தார் வடோக்ஸ். மும்பை 2-0 என முன்னிலை பெற்றது.

அரை மணி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்தால் டிரா செய்யலாம், மூன்று கோல்கள் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற இக்கட்டான நிலை சென்னைக்கு. ஆனால், மிட்ஃபீல்டில் பந்து நிற்கவே இல்லை. கடைசி 15 நிமிடத்தில், மும்பை மேலும் மேலும் அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது. ஆனால், அப்படி ஆட வேண்டிய சென்னை அணியோ சான்ஸ் கிரியேட் செய்யவே இல்லை. 78 வது நிமிடத்தில் மும்பைக்கு இன்னுமொரு சான்ஸ் கிடைத்தது. ரைட் விங்கில் இருந்து சக வீரர் கொடுத்த கிராஸ், சென்னை டிஃபண்டர் மெண்டியை தாண்டி நின்றிருந்த சுனில் சேத்ரியிடம் தஞ்சம் புகுந்தது. கோல் கீப்பரை மட்டுமே ஏமாற்ற வேண்டிய சூழல். ஆனால், அதை சுனில் சேத்ரி எங்கோ அடித்து வீணடித்தார். அடுத்த நிமிடத்திலும் மீண்டும் அவருக்கு ஒரு சான்ஸ் வந்தது. ஆனால், அதையும் அவர் மிஸ் செய்தார்.

ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்தபோது ஃபோர்லன், அழகாக சக வீரர் குன்ஹாவுக்கு செட் செய்து கொடுத்தார். நினைத்திருந்தால் ஃபோர்லனே அதை கோல் அடித்திருக்கலாம். ஆனால், குன்ஹா அதை சென்னை கோல் கீப்பர் கையில் அடித்து வீணடித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை மும்பை சான்ஸ் கிரியேட் செய்து கொண்டே இருந்தது. ஆனால், கடைசி வரை சென்னையால் ஆறுதலுக்கு கூட ஒரு கோல் அடிக்க முடியவில்லை.

முடிவில் மும்பை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை முதலிடத்தில் நீடிக்கிறது.  சென்னை அதே ஏழாவது இடத்தில் நீடிக்கிறது. 

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ