Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடப்பு சாம்பியன் சென்னை நடையைக் கட்டியது ஏன்? #ISLupdates

சென்னை

 

‛‛கால்பந்து கிளப் என்பது அழகான பெண்ணைப் போன்றது. அடிக்கடி அந்த பெண்ணிடம் நீ அழகு என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் வசீகரம் குறைந்து விடும்’’

இது ஆர்சனல் கிளப் மேனேஜர் அர்சீன் வெங்கர் சொன்னது. 

இரண்டாவது ஐ.எஸ்.எல். சீசனில்(2015) சென்னையின் எஃப்.சி. சாம்பியன்.  இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டி முடிவதற்குள்ளேயே, செமி ஃபைனலுக்கு முன்னேற முடியாத சூழல். கடந்த முறை ஃபைனலில் சென்னையுடன் மோதிய கோவா அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. கடந்த சீசனில் கடைசியாக மோதிய இரு அணிகளும் இப்போது முதலில் வெளியேற உள்ளன. இதுதான் கால்பந்து.  

சொந்த காலில் செமி ஃபைனலுக்கு முன்னேற முடியாத சென்னை தற்போது, ‛எதவாது அதிசயம் நிகழாதா’ என ஏங்கிக் கிடக்கிறது. வேர்ல்ட் கப் வின்னரை கோச்சாக வைத்திருக்கும் சென்னை அணிக்கு, அதுவும் நடப்பு சாம்பியனுக்கு இது அழகல்ல. எங்கே தவறு நடந்தது? நடப்பு சாம்பியனுக்கு என்ன ஆனது? 

வெங்கர் சொன்னது போல, ‛நாம் டிஃபண்டிங் சாம்பியன். அதற்கேற்ப விளையாட வேண்டும்’ என வீரர்களிடம் சொல்லத் தவறி விட்டார் மார்கோ மடராசி. கடந்தமுறை புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் ஆனதற்கும், இந்தமுறை அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்கும் அவர்தான் முழுமுதற் காரணம்.  

மெயின் லெவனில் குழப்பம்...
எந்த ஒரு கிளப் பயிற்சியாளரும், வீரர்கள் காயம் அடையாத பட்சத்தில் ஸ்டார்டிங் லெவனை மாற்ற மாட்டார்கள். ஆனால், மடராசி ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பொசிஷனில் ஒவ்வொரு வீரரை இறக்கினார். நிலையில்லாத அணியால், நிலையில்லாத ரிசல்ட். மட்டுமல்லாது, சில சமயங்களில் வீரர்களை வேறு பொசிஷனில் ஆட வைத்தார்.  சில சமயங்களில் அது வொர்க் அவுட் ஆனது. சென்டர் பேக் பெர்னார்டு மெண்டியை ரைட் விங்கில் இறக்கி விட்டார். டிரிபிளிங் செய்து அப்ளாஸ் அள்ளுவதில் கில்லியான மெண்டி, இஞ்ச் பெர்ஃபெக்ட் கிராஸ் கொடுத்து அசத்தினார். ஆனால்,  பல சமயங்களில் மடராசியின் திட்டம் சொதப்பியது. 


உருப்படியான ஸ்ட்ரைக்கர் இல்லை...

மும்பையில் மார்சிலினோவைப் போல சொல்லி வைத்து கோல் அடிக்க சென்னை அணியில் ஸ்ட்ரைக்கர் இல்லை. நார்த்ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் டுடு ஹாட்ரிக் கோல் அடித்தாரே தவிர, அதற்கு முந்தைய போட்டிகளில், அவர் வேஸ்ட் லக்கேஜாகத்தான் அணியில் இருந்தார். அல்வா போன்ற வாய்ப்புகளை வீணடித்து ரசிகர்களிடம் பேட் வேர்ட்ஸ்களை வாங்கினார்.  மற்றொரு வீரர் டேவிட் சூச்சியும் மார்க்கீ வீரருக்கு உரிய தொணியில் ஆடவில்லை. இவர்களுக்கு இந்திய வீரர் ஜெஜே எவ்வளவோ பரவாயில்லை. பெரும்பாலான போட்டிகளில் கோல் அடிக்க அவரை மட்டுமே நம்பி இருந்தது சென்னை. 

தவிர, கடந்த இரண்ட சீசன்களிலும் ஸ்டீவன் மெண்டோசா, எலனோ இருவரும் சென்னையின் கோல் அடிக்கும் மிஷின்களாக வலம் வந்தனர். இந்த முறை அவர்கள் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. அதேபோல, மிட் ஃபீல்டில் பந்தை ஹோல்ட் செய்து பாஸ் செய்வதிலும், செட் பீஸ்களை துல்லியமாக எடுப்பதிலும் வல்லவரான பெலிசாரியை,  டெல்லிக்கு தத்துக் கொடுத்தது, மடராசி செய்த மாபெரும் தவறு.  ரபேல் அகஸ்டோ மட்டும் இல்லையெனில், சென்னையின் மிட் ஃபீல்ட் சந்தி சிரித்திருக்கும். 

சென்னை

அஜாக்கிரதையால் தோல்வி...

சமீபத்தில் நேரு மைதானத்தில் நடந்த நார்த்ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில், இஞ்சுரி டைமில் கோல் வாங்கியது சென்னை. அதுவரை 3-2 என சென்னை முன்னிலையில் இருந்தது. கடைசி நிமிடத்தில் செய்த டிஃபன்ஸிவ் எரர், ஒரு கோல் கன்சீட் செய்ய காரணமாகி விட்டது. அந்த தப்பு நடக்காமல் இருந்திருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்திருக்காது, சென்னை வெற்றி பெற்றிருக்கும். இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றால், செமி ஃபைனலுக்குள் நுழைய வாய்ப்பு இருந்திருக்கும். நொடி நேர அஜாக்கிரதையால் எல்லாமே பாழ்.

ஆரம்பமே சொதப்பல்...

முதல் சீசனில் சென்னையின் எஃப்.சி. உருவானதே கடைசி நேரத்தில் தான். ஆனாலும், செமி ஃபைனல் முன்னேறி புருவம் உயர்த்த வைத்தது. கடந்த முறை, புள்ளிகள் பட்டியலில் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென விஸ்வரூபம் எடுத்து, கடைசியில் சாம்பியன் ஆனது. அதே மாதிரி, கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இந்த முறை ஆரம்பத்தில் அஜாக்கிரதையாக இருந்து விட்டனர். டெல்லியிடம் சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்தபோதே சுதாரித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ஹோம் அவே மேட்ச்களிலும் ஒழுங்காக பெர்ஃபார்ம் பண்ணவில்லை.  13 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றதும், ஆறு ஆட்டங்களை டிரா செய்ததுமே சென்னையின் இந்த நிலைமைக்கு காரணம். 

கடைசி நிமிட கோல்... 

‛இன்னும் பத்து நிமிஷம்தான்... ஜெயிச்சரலாம்’ என சென்னை ரசிகர்கள் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருப்பர். ஆனால், 80 நிமிடத்துக்கு மேல் சென்னை டிஃபண்டர்களுக்கு கிறுக்குப் பிடித்து விடும். கேரளா, மும்பை, புனே, நார்த்ஈஸ்ட் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடைசி பத்து நிமிடத்தில்தான், கோல் கன்சீட் செய்தது சென்னை. இதனால், சில வெற்றிகளோடு புள்ளிகளும் நழுவின. 

‛இந்த சீசனில் சென்னை செமி ஃபைனலுக்கு முன்னேறவில்லை எனில், நான் அடுத்த முறை இந்தியாவுக்கு வர மாட்டேன்’ என மடராசி சொன்னதாக, செய்தி வெளியானது. ஆத்திரமடைந்த மடராசி ‛நான் அப்படி சொல்லவே இல்லை’ என மறுத்தார். கடந்த முறை சென்னை சாம்பியன் ஆனதும்,  நேரு மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் அணியின் சக உரிமையாளர்களான அபிஷேக் பச்சன், வீதா தானி மற்றும் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். மடராசி மட்டும்  மிஸ்ஸிங். கொண்டாட்ட தருணத்தையே தவிர்த்த அவர், இந்தமுறை என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. 

- தா.ரமேஷ் 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close