Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேனா?''- கொதிக்கும் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன்

மாரியப்பன்

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்காக பெருமைச் சேர்ந்த தமிழக வீரர் மாரியப்பன், பெங்களூருவில் குடியேறி கர்நாடக மாநிலத்துக்காக விளையாடப் போவதாகத் வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம் ரியோவில் முடிவடைந்த பாராலிம்பிக் பொட்டியில், சேலத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த மாரியப்பன் கடும் போராட்டத்துப் பின், இத்தகையை இமாலய சாதனையை படைத்தார். மாரியப்பனின் தாயார் சரோஜா, கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த நிலையிலும் மகனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 

மாரியப்பனின் வெற்றிக்கு தாயார் சரோஜா ஒரு காரணம் என்றால், அவரது பயிற்சியாளர் சத்தியநாராயாண இன்னொரு காரணம். மாரியப்பனிடம் இருந்த திறமையை அடையாளம் கண்டு, சரியான முறையில் அதனை பயன்படுத்தி மாரியப்பனை சாதனை நாயகனாக மாற்றியவர்.  அதுமட்டுமல்ல மாரியப்பனின் குடும்பத்துக்கு  வேண்டிய உதவிகளையும் செய்து வந்தவர் சத்தியநாராயணா. கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த சத்திய நாராயணா, தற்போது  ரயில்வேத் துறையில் பணியாற்றி வருகிறார்.  கடந்த 2012-ல் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் மாரியப்பன் பங்கேற்றார். உயரம் தாண்டுதலில் மாரியப்பன் 1.75 மீட்டர் தாண்டிக் காட்டினார்.  இது பாரலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தவரை விட அதிக உயரம். மாரியப்பனுக்கு சரியான பயிற்சி அளித்தால் ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும் என்று சத்திய நாராயணா நம்பினார். சேலத்தில் மாரியப்பன் படித்த கல்லூரிக்குச் சென்று, அவரைச் சந்தித்தார். பின்னர், கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெற்று அவரை பெங்களூருவுககு அழைத்துச் சென்று முறையாக பயிற்சி அளித்தார். 

பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பனை தங்கம் வாங்க வைக்கிறேன் என சவால் விட்டுத் தான் மாரியப்பனை பயிற்சிக்கு அழைத்து சென்றார் சத்தியநாராயணா. சொன்னது போலவே மாரியப்பனை பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லவும் வைத்து விட்டார். இதையடுத்து தமிழக அரசு மாரியப்பனுக்கு 2 கோடி பரிசளித்தது. மத்திய அரசு 75 லட்சம், இன்னும் பலத் தனியார் அமைப்புகளும் பரிசுகள் வழங்கின. அடுத்த பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்வதே தனது இலக்காக கொண்டுள்ளார் மாரியப்பன். 

இந்த நிலையில், மாரியப்பன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, பெங்களூருவில் சென்று செட்டில் ஆக முடிவு செய்திருப்பதாகவும் அவரது, கோச் சத்திய நாராயாணாவின் அறிவுரையின் பெயரில் அங்கேயே குடியேறிவிடப் போவதாக தகவல் கசிந்தது. மேலும் எதிர்காலத்தில் தேசிய அளவிலானப் போட்டிகளில் கர்நாடாக மாநிலத்துக்காக கலந்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் நமக்கு அதிர்ச்சியளித்தது. உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டோம். தயக்கம் இல்லாமல் கேள்வியை முன் வைத்தோம். 

கொஞ்ச நேரம் சிரித்து விட்டு... ''யாராவது தாய் மண்ணை விட்டு விட்டு வெளியேறி வேறு மாநிலத்துக்காக விளையாடுவாங்களா?. எனக்கு  ஊக்கமும் வாய்ப்பும் அளித்தது இந்த மண்தான். இப்போ கொஞ்சம் பிசி. விழாக்களில் பங்கேற்க ஏராளமான அழைப்பு வருகிறது. அதனால், எந்த விவகாரத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அந்த கேப்பில்தான் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். லண்டனில் நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டில ரிக்கார்ட் படைத்து தங்கம் வெல்ல வேண்டும். அதனை இலக்காக கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். உலகச் சாம்பியன்ஷிப்புல கண்டிப்பா தங்கம் ஜெயிப்பேன். ஆனால், சாதனை படைக்க வேண்டுமென்பதுதான் இலக்கு. அதுக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் எனது பயிற்சி பெங்களூருவில்தான் நடைபெறுகிறது. அங்கேதான் பெரும்பாலான நாட்கள் இருக்கிறேன். அதனால், அவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். யார் வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும். ஆனால், நான் கடைசி வரை தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் விளையாடுவேன் ''என உறுதிபடக் கூறினார்.  

- எம்.குமரேசன்


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close