Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தக் கதை இப்படி முடிந்திருக்கக் கூடாது! #RIPChapecoense

 

இன்று எனக்கு சாவு வந்தால், சந்தோஷமாக  சாவேன். இது கோபா சுல் - அமெரிக்கானா தொடரின் ஃபைனலுக்கு சபிகோயன்ஸ் அணி முன்னேறிய உற்சாகத்தில், அணியின் பயற்சியாளர் கெயிவோ ஜுனியர் சொன்னது. மனுஷன் எந்த நேரத்தில் இதைச் சொன்னாரோ, விமான விபத்தில் ஒட்டுமொத்த அணியினரையும் அள்ளிச் சென்று விட்டான் காலன். மிஞ்சியது மூன்று வீரர்கள்  மட்டுமே. கிட்டத்தட்ட, விபத்தொன்றில் ஒட்டுமொத்த குடும்பமும் மரணித்து விட்ட நிலை. 

பொலிவியாவில் இருந்து கொலம்பியா சென்ற விமானம், விழுந்து நொறுங்கியதில் 76 பேர் பலி என தகவல் வெளியான சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரல் ஆனது.

 

ஐரோப்பிய லீக் தொடருக்கு நிகராக கருதப்படும், தென் அமெரிக்க கண்டத்தில் நடக்கும் கிளப் அணிகளுக்கு இடையிலான சுல் அமெரிக்கானா தொடரின் ஃபைனலுக்கு முதன்முறையாக முன்னேறிய மகிழ்ச்சியில், சபிகோயன்ஸ் அணியினர் டிரஸ்ஸிங் ரூமில்  இப்படி ஆர்ப்பரித்தனர். இன்று சபிகோ நகரமெங்கும் ஒப்பாரிச் சத்தம். 

பிரேசிலில் கால்பந்து கிளப் என்பது பாண்டி பஜாரில் விரிந்திருக்கும் கடைகளைப் போன்றது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஸ்பெஷல். அதில் சபிகோயன்ஸ் அணி இன்னும் ஸ்பெஷல். காரணம்...

சான்டா கேட்ரினா மாநிலத்தில் உள்ள சபிகோ நகரத்தை மையமாகக் கொண்டு இயங்குவதால் இந்த கிளப் சபிகோயன்ஸ் என பெயர் பெற்றது. சான்டா கேட்ரினா பகுதியில் கால்பந்தை மேம்படுத்தும் வகயைில் 1973ல் துவங்கப்பட்ட இந்த கிளப் ஆரம்பத்தில் ஃபுட்சால் (5 பேர் விளையாடும் கால்பந்து) தொடரிலும் ஜொலித்து வந்தது. கிளப் தொடங்கிய ஐந்தே ஆண்டில் ஸ்டேட் லெவல் சாம்பியன். இதுவரை நான்கு முறை சாம்பியன். பிரேசிலில் உள்ள கிளப்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், ஐந்தாவது டிவிஷனில் இருந்து படிப்படியாக முன்னேறி ஃபர்ஸ்ட் டிவிஷனில் விளையாடும் அளவில் முன்னேற்றம். அதிலும் 2016 சீசன் அவர்களுக்கு கொண்டாட்ட சீசன்.

சுல் - அமெரிக்கானா தொடரின் ஃபைனலுக்கு சபிகோயன்ஸ் அணி முன்னேறியதே பெரும் சாதனை. இந்த தொடரில் வலுவான அணிகளாக கருதப்பட்ட அர்ஜென்டினாவை சேர்ந்த இண்டிபென்டியன்டி, சான் லோரன்சோ கிளப்களை வீட்டுக்கு அனுப்பியது. அனல் பறக்கும் கோல்கள் இல்லை;  ரவுண்ட் -16 சுற்றில் வெற்றிக்கு ஸ்பாட் கிக்கை நம்பி இருந்தது என்றாலும், அணியின் கன்ஸிஸ்டன்ஸி பாராட்டுக்குரியது என்கின்றனர் பிரேசில் கால்பந்து நிபுணர்கள். அட்லெடிகோ மாட்ரிட் முன்னாள் வீரரான கிளிபர் சான்டானா தவிர்த்து, சபிகோயன்ஸ்  அணியில் வேறு வசீகர வீரர் இல்லை என்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான், படிப்படியாக முன்னேறி இங்கிலீஷ் பிரிமியர் லீக் சாம்பியன் ஆன லீஸ்டர் சிட்டியுடன் சபிகோயன்ஸ்  கிளப்பை ஒப்பிடுகின்றனர்.

Chapecoense

லீஸ்டர் சிட்டியைப் போல, இந்த சீசனில் சபிகோயன்ஸ் அணி, கோபா சுல் - அமெரிக்கானா சாம்பியன் ஆகும் என, சான்டா கேட்ரினா மாகாணமே எதிர்பார்த்திருந்தபோதுதான் இந்த துக்கம் அரங்கேறி உள்ளது.  ‛‛வேறொரு பணி காரணமாக என்னால் அணியினருடன் பயணிக்க முடியவில்லை. நான் அவர்களை வழியனுப்பியபோது, கனவை நனவாக்கப் போவதாக உறுதியளித்தனர். இன்று காலை அந்த கனவு முடிவுக்கு வந்து விட்டது. இது கிளப் அல்ல ஒரு குடும்பம். வெற்றி, தோல்வி என எல்லா நேரத்திலும் சிரித்திருந்தோம். இன்று உயிர் பிழைத்த வீரர்களுக்கு,  இதை மறக்க நெடுநாள் ஆகும். ஏனெனில், இறந்தவர்கள் அவர்களின் நெடுநாள் நண்பர்கள்’ என, அணியின் தலைவர் டேவிட் ஃபில்கோ இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

சுல் அமெரிக்கான தொடரின் ஃபைனல் இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டம் கொலம்பியாவில் உள்ள மெட்லின் நகரில் புதன்கிழமையும், இரண்டாவது கட்டம் பிரேசிலில் உள்ள கியூரிடிபா நகரிலும் நடக்க இருந்தன. சபிகோயன்ஸ்  கிளப்பின் சொந்த மைதானமான அரீனா கோண்டா, பெரிய தொடரின் ஃபைனலை  நடத்துவற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்கவில்லை என்பதால், அங்கிருந்து 400 கி.மீ., தூரத்தில் உள்ள கியூரிடிபா நகருக்கு ஃபைனல் மாற்றப்பட்டது.

இந்த முறை நம் அணி பட்டம் வெல்லும். நம் வீரர்கள் கோப்பையுடன் வலம் வருவர். நம் நகரில் நவீன மைதானம் வரும் என காத்திருந்த சபிகோ நகர மக்களுக்கு, வீரர்களின் உடல்களை அனுப்பி வைத்து விட்டது காலம்.

- தா.ரமேஷ்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ