Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்பந்து வீரர்களின் டிரெஸ்சிங் அறையும் கண்ணீர் கதையும்!

டிரெஸ்சிங் அறை

கால்பந்து வீரர்களுக்கு டிரெஸ்சிங் அறைதான் எல்லாமே. அடிதடியும் இங்கேதான் அழுவதும் இங்கேதான். வெற்றி, அழுகை, சோகம், கொண்டாட்டம் அரங்கேறுவதும் இங்கேதான்.  உலகக் கோப்பையில் பெனால்டியை கோட்டை விட்டவர்களுக்கு கூட கதறி அழுவது இங்கேதான். அதிமுக்கியமான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு மெட்ராசி போன்றவர்களை தலையால் முட்டிய ஜிடேனுக்கு கூட ஆறுதல் கிடைப்பதும் இங்கேதான். கால்பந்து வீரர்களின் ஒவ்வொரு அசைவும் டிரெஸ்சிங் அறைக்குத்தான் தெரியும். 

கால்பந்து வீரர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தகயை டிரெஸ்சிங் அறை ஒன்று, நேற்று காணவே விரும்பாத நிகழ்வையும் கண்டது.  அர்ஜென்டினாவின் சான் லாரன்ஸோ அணியை அரையிறுதியில்தோற்கடித்த சபிகோயன்ஸ் அணி வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை பார்த்து மகிழ்ந்திருந்த டிரெஸ்சிங் அறை அடுத்த 5வது நாளில் இப்படியொரு வேதனை மிகுந்த காட்சியை பார்க்க நேரிடும் என்று சற்று கூட எதிர்பார்த்திருந்திருக்காது.விமான விபத்தில், சபிகோயன்ஸ் அணியின் பெரும்பாலான வீரர்கள் பலியாகிவிட காயம், சஸ்பெண்டு காரணமாக போட்டியில் பங்கேற்காத மூன்று வீரர்கள் மட்டும் டிரெஸ்சிங் அறையில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தனர். இந்த புகைப்படம் வெளியாகி உலக கால்பந்து ரசிகர்களை மேலும் கண்ணீருக்குள்ளாக்கியது. 

சபிகோயன்ஸ், கால்பந்துக்கு பெயர் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் ஒரு அணி. கடந்த 1973ம்ம் ஆண்டு உருவானது. பிரேசிலின் சிறிய நகரமான சபிகோவை மையமாக கொண்டு இயங்கி வந்தது. சுமார். 22 ஆயிரம் இருக்கைகள் கொண்ட சிறிய மைதானம் இதன் தாயகம். பிரேசில் கால்பந்து டிவிஷன்களான சீரி டி,சீரி சி, சீரி பி, சீரி ஏ என படிப்படியாக  முன்னேறியிருந்தது. தற்போது முதல் டிவிஷன் போட்டியில் விளையாடி வருகிறது. 

கடந்த 20104ம் ஆண்டு கோபா சவுதாமெரிகானா போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றது. கோபா சவுதமெரிகானா என்பது ஐரோப்பாவின் யூரோபா லீக் கால்பந்து தொடருக்கு இணையானது. சபிகோயன்ஸ் பிரேசில் நாட்டின் 21வது பணக்கார அணி. இதன் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கால்பந்து அணி மட்டுமல்ல எந்த விளையாட்டைச் சேர்ந்த அணியுமே ஒரு குடும்பம் போன்றதுதான். விபத்தில் சிக்கி குடும்பமே பலியாவது போல, ஒரு குடும்பமே பலியாகியியிருப்பது பிரேசில் மக்களை உடைத்து போட்டு விட்டது. தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான 'கான்மோபோல்' அனைத்து கால்பந்து போட்டிகளையும் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்திருக்கிறது. 

கொலம்பியாவின் மெட்லின் நகர் அருகே நடந்த இந்த விபத்தில் 3 வீரர்கள் உள்பட 6 பேர்தான் உயிர் பிழைத்திருக்கின்றனர். கால்பந்து வீரர்கள் விமான விபத்தில் சிக்கி பலியாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மூன்று மிகப் பெரிய விமான விபத்துகள் கால்பந்து வீரர்களை கூண்டோடு காவு வாங்கியிருக்கிறது.  கடந்த 1949ம் ஆண்டு இத்தாலியின் டொரினோ கிளப் போர்சுகல் தலைநகர் லிஸ்பனில் பென்ஃபிகா அணியுடன் நடந்த நட்பு முறையிலான ஆட்டத்தில் பங்கேற்றது. பின்னர் மே 4ம் தேதி டூரின் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தது. அந்தக் காலக்கட்டடத்தில் இத்தாலியின் மிகப் பெரிய கிளப் டொரினோ. இத்தாலி தேசிய அணியில் இடம் பெற்றிருந்த பல வீரர்களும் டொரினோவுக்காக விளையாடி வந்தனர். வீரர்கள் வந்த மூன்று என்ஜீன்கள் கொண்ட தனி விமானம் டூரின் நகரை நெருங்கிய போது, மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 27 வீரர்கள், பயிற்சியாளர்கள், விமான ஊழியர்கள் என 31 பேர் பலியாகினர். ஒருவர் கூட உயிர் தப்பவில்லை. 

அடுத்ததாக கடந்த 1958ம் ஆண்டு யூகோஸ்லேவியா தலைநகர் பெல்கிரேடில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க மான்செஸ்டர் யுனைடெட் அணி பெல்கிரேட் புறப்பட்டது. ஜெர்மனியின் மியூனிச்சில் பெட்ரோல் நிரப்பி விட்டு விமானம் மீண்டும் புறப்பட்ட போது, விபத்தில் சிக்கியது. இதில் மான்செஸ்டர் அணி வீரர்கள் 8 பேர் உள்பட 23 பேர் இறந்தனர். 

கடந்த 1993ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஜாம்பியா அணி செனகல் அணியுடன் விளையாட வேண்டியது இருந்தது. செனகல் தலைநகர் டாகாருக்கு ஜாம்பியா அணி விமானத்தில் சென்றுக் கொண்டிருந்தது. கபான் நாட்டு அருகே அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து கொண்டிருக்கும் போது, விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 18 ஜாம்பியா வீரர்கள் 5 பயிற்சியாளர்கள் இறந்தனர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கொலம்பியாவில் நடந்த விபத்துதான் மிகப் பெரியது. சபிபோயன்ஸ் அணி கிட்டத்தட்ட அனைவரையும் பறிகொடுத்துள்ளது. 

விபத்துக்குள்ளான இதே பிரிட்டிஷ் ஏரோஸ்கேப் 146 ரக விமானம்தான் 18 நாட்களுக்கு முன் மெஸ்சி உள்ளிட்ட அர்ஜென்டினா தேசிய அணி  வீரர்களை சுமந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரக விமானங்கள் நீளம் குறைந்த ரன்வேயில் இருந்து ஏறக்கூடியவை. 100 பேர் வரை பயணிக்கலாம். முதல் லெக் இறுதிப் போட்டி என்பதால், வீரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என 76 பேர் கொலம்பியாவின் மெட்லின் நகருக்கு புறப்பட்டுள்ளனர். இன்னும் 6 நிமிட பயணத்தில் மெட்லின் நகரை அடைந்திருக்கலாம்.ஆனால் அதற்குள் எல்லாமே மாறி விட்டது. 

இப்போது கிட்டத்தட்ட அனைத்து வீரர்களையும் பறிகொடுத்திருப்பதால், அணியை மீண்டும் கட்டமைப்பது சவால் நிறைந்ததாக இருக்கும். அதே வேளையில், பிரேசிலின் சில முன்னணி கிளப்புகள் தங்கள் வீரர்களை சபிகோயன்ஸ் அணிக்கு தங்கள் வீரர்களை லோனாக கொடுக்க முன் வந்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது வீரர்களை விமான விபத்தில் பறிகொடுத்த போது, அதன் பரம வைரி அணியான லிவர்பூல் தனது வீரர்களை கடனாக தந்து உதவியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். 

சபிகோயன்ஸ் அணியின் பயிற்சியாளரின் மகன் பாஸ்போர்ட் எடுத்து வராத காரணத்தினால் கடைசி நேரத்தில் விமானத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதனால்,அதிருஷ்டவசமாக அவர் உயிர் தப்பி விட்டார். இல்லையென்றால் அவரையும் பறிகொடுத்திருக்கும் சபிகோயன்ஸ் அணி. தற்போது பிரேசிலில் சபிகோயன்ஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோபா சவுதாமெரிக்கானா இறுதி ஆட்டத்தில் சபிகோயன்ஸ் அணி கொலம்பியாவின் அத்லெடிகோ நேஷனல் அணியுடன்தான் மோத வேண்டியது இருந்தது. 'விபத்தில் சிக்கி தனது வீரர்களை பறிகொடுத்த சபிகோயனஸ் அணிக்கே கோப்பையை வழங்குங்கள் ' என அத்லெடிகோ நேசினல் அணி கதறி விட்டது. ஆனால், எதிர்முனை கரங்கள்தான் மடிந்து விட்டன. 

காலத்தின் கொடுமையை என்ன சொல்ல?

-எம். குமரேசன்

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close